For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொண்டர்கள் இருக்கும் தைரியத்தில் எதிரிகளை சந்திக்கிறேன் - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanithi
சென்னை: நீங்கள் எல்லாம் என்னுடன் இருக்கும் தைரியத்தில் என்னை வீழ்த்த நினைக்கும் எதிரணியினரை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனின் தேர்தல் பிரசாரத்தை நேற்று மாலை சிந்தாதிரிப்பேட்டையில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், இங்கே பேசிய தயாநிதி மாறன், ஆற்காடு வீராசாமி, கனிமொழி ஆகியோர் தி.மு.க. ஆட்சி பாரதத்திலே நடைபெற்றாலும், மாநகரத்திலே நடைபெற்றாலும் அது மக்களாட்சியாகத் தான் திகழ்கிறது என்பதற்கான சான்றுகளை, சாதனைகளை எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.

நான் 1955, 56-ம் ஆண்டுவாக்கில் சென்னை நகருக்கு வந்து, இங்கே குடியமர்ந்தேன். அந்த காலத்தில் சென்னை எப்படி இருந்தது என்பதையும், இன்றைக்கு எத்தகைய மாறுதல்கள் சென்னையில் ஏற்பட்டிருக்கின்றன என்பதையும் நான் மிக நன்றாக அறிவேன்.

உங்களில் வயதில் மூத்தவர்களும் 25, 30 ஆண்டுகால சென்னையை பற்றி அறிவீர்கள். நடமாடுவதற்கு கூட சாலைகள் இல்லாத, ஒண்டுவதற்கு நிழல் இல்லாத நிலையை ஒரு காட்சியை கண்டிருக்கிறோம்.

அதன் பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க., காங்கிரஸ் இரண்டும் மாறிமாறி நின்று வென்று மாநகராட்சி மன்றத்தை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த போது ஆங்காங்கே அவர்கள் காங்கிரஸ் கவுன்சிலர்களாக இருந்தாலும், தி.மு.க. கவுன்சிலர்களாக இருந்தாலும் மக்களுடைய பிரச்சினைகளை மையமாக வைத்து பணியாற்றியிருக்கிறார்கள்.

அதிலே கூட சில சமயம் தவறு நேருகிற நேரத்தில் தயவுதாட்சண்யம் காட்டாமல், அரசின் சார்பில் நடவடிக்கை எடுத்து மாநகராட்சி மன்றத்தையே சீர்திருத்திய சம்பவங்கள் எல்லாம் உண்டு. இன்றைக்கு நடைபெறுகிற இந்த தேர்தல் மாநகராட்சி மன்ற தேர்தல் அல்ல. மாநில சட்டமன்ற தேர்தல் அல்ல. இவைகள் எல்லாவற்றையும் விட உயர்ந்த, இவைகளை ஆளுகின்ற நாடாளுமன்ற தேர்தல்.

நாடாளுமன்றத்திற்கு தயாநிதி மாறன் சென்று, அவரைப் போன்ற பலர் காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும், வேறு பல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றுகின்ற பணி, அவர்கள் தீட்டுகின்ற திட்டம், இயற்றுகின்ற சட்டம் இவைகள் எல்லாம், மாநகராட்சி மன்றம், மாநிலம் இந்த ஆட்சிகளை எல்லாம் சேர்த்து நிர்வகிக்கின்ற மன்றமாகும். அந்த உயர்ந்த மன்றத்துக்கு தான் இந்த தொகுதியில் இருந்து ஒருவரை அனுப்பிவைக்க வேண்டும். அவர் யார்? என்ற கேள்விக்கு விடைகாண நாம் இங்கே கூடியிருக்கின்றோம்.

நான் ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்தவன். அதனால் தான் சாதாரண, சாமான்ய, ஏழை, எளிய மக்களின் கஷ்டங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் நான் நிறைவேற்றுகிற திட்டங்கள் அத்தனையும் ஏழை எளிய மக்களை சார்ந்ததாக இருப்பதை நீங்கள் காணுகின்றீர்கள்.

யாருக்கும் ஏற்படாத கவலை - ஏழை வீட்டில் வண்ணத் தொலைக்காட்சி இருக்க வேண்டும் என்று ஏன் எண்ணினேன் என்றால் - என் வீட்டில் இருக்கும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டி ஏழை வீட்டில் இருக்க வேண்டாமா? என்று எழுந்த கேள்வி தான் உங்கள் வீடுகளிலே அலங்கரித்துக் கொண்டிருக்கிற வண்ணத் தொலைக்காட்சி பெட்டியாகும்.

இந்தியாவில் இல்லாத ஒரு திட்டத்தை நிறைவேற்றியிருப்பதாக இங்கே சொன்னார்கள் - அந்த திட்டத்துக்கு தருகிற பெருமை, கிடைக்கிற புகழை எல்லாம் அண்ணா காலடியில் சமர்ப்பிக்கிறேன். அண்ணா 67-ம் ஆண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதி ஒரு படி அரிசி ஒரு ரூபாய்க்கு தருவேன் என்பதாகும். அவர் ஆட்சிக்கு வந்து 3, 4 மாதம் தான், அதுவும் சென்னையில் மட்டும் நிறைவேற்ற முடிந்தது. மற்ற மாநிலங்களில் நிறைவேற்ற ஏற்பாடு செய்தபோது உடல்நிலை பாதிக்கப்பட்டு, நாம் அவரை இழக்க நேரிட்டது.

அதன்பின் அந்த திட்டத்தை நிறைவேற்ற முயன்றும் முடியவில்லை. இப்போது அந்த திட்டத்தை எத்தகைய சூழ்நிலையில் நிறைவேற்றியிருக்கிறோம் என்றால், நம்முடைய ஆண்டு கணக்கு தை மாதம் முதல் நாள் தான் தொடங்க வேண்டும் என்ற ஒரு அரிய கண்டுபிடிப்பை நான் அல்ல - 500 தமிழ் புலவர்கள் ஒன்றாக அமர்ந்து நிறைவேற்றிய தீர்மானத்தின்படி நாம் நம்முடைய தமிழர்களின் ஆண்டு தை முதல் நாள் தான் தொடங்க வேண்டும். தை 1-ந் தேதி தான் தமிழ் வருடபிறப்பு என்று கொண்டாடி வருகின்றோம்.

அப்படி கொண்டாடி வரும்போது, உங்களுக்கு மறந்து போயிருக்காது, நீங்கள் நன்றி உடையவர்கள். யாருக்கு இருக்கிறதோ இல்லையோ ஏழை எளிய மக்களுக்கு இருதயம் இருக்கிறது என்பதை நான் நன்றாக அறிவேன். அந்த இருதயத்தின் மீது கைவைத்து நீங்கள் சொல்வீர்கள் என்றால் - பொங்கல் அன்று நான் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுகிறேன், நான் பொங்கலன்று வீட்டிலே கோலமிட்டு அழகுபடுத்தி அதை கொண்டாடுகிறேன், இந்த மகிழ்ச்சி ஒரு ஏழையின் வீட்டில் இருக்க வேண்டாமா? என்று எண்ணிய எண்ணம் தான் பொங்கல் அன்று ஒரு சகோதரர், சகோதரிக்கு சீர் வழங்குவது போல பொங்கல் அன்று உங்களுக்கெல்லாம் பொங்கல் வழங்குகின்ற அந்த திட்டத்திற்காக 80 கோடி ரூபாயை தி.மு.க. அரசு அன்றைக்கு செலவழித்தது - ஒவ்வொரு ஏழைபாழை வீட்டிற்கும், சாதாரண சாமான்ய மக்கள் வீட்டிற்கும் பொங்கலை வழங்கிய ஆட்சி - முதன்முதலாக இந்தியாவிலே தி.மு.க. ஆட்சி தான்.

நான் விடுத்த வேண்டுகோளை நீங்கள் என்றைக்கும் நிராகரித்ததில்லை, என்றைக்கும் மறுதலித்ததில்லை. என்னை வீழ்த்த இந்த தொகுதியிலே மாத்திரமல்ல, தமிழகம் முழுவதும் பல்வேறு முயற்சிகள் எதிர் அணியினரால் நடத்தப்பட்டன. நடத்தப்படுகின்றன, நடத்தப்படவும் போகின்றன.

நான் அவைகளையெல்லாம் எதிர்கொள்ளக்கூடிய தைரியம் - துணிவு எனக்கிருக்கிறது என்றால், உங்களை நம்பித்தான் அவைகளையெல்லாம் நான் எதிர்கொள்கிறேன் என்பதையும், அதைப் போலவே உங்களை நம்பித் தான் தயாநிதி மாறனை உங்களுடைய கைகளிலே ஒப்படைத்திருக்கிறேன். அவருடைய வெற்றி என்னுடைய வெற்றி அல்ல, உங்களுடைய வெற்றி, அந்த வெற்றியை நீங்கள் தேடிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X