For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி திடீர் உண்ணாவிரதம்- போர் நிறுத்த அறிவிப்பால் வாபஸ்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் கோரி முதல்வர் கருணாநிதி இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து உடனடியாக தாக்குதலை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதிமொழி தந்ததையடுத்து தனது போராட்டத்தை பிற்பகலில் கருணாநிதி முடித்துக் கொண்டார்.

முன்னதாக அவர் உண்ணாவிரதம் அமர்ந்ததால் தேசிய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கம்போல் இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட கருணாநிதி, வழக்கமான யோகா பயிற்சிக்காக அண்ணா அறிவாலயம் செல்வதாக வீட்டினர் நினைத்திருக்க, காரை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு செலுத்துமாறு உத்தரவிட்டார்.

அங்கு சென்றதும் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு திடீரென ஒரு நிழற் குடையின் கீழ் தனது வீல் சேரிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.

அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உதவியாளர்களும் முதல்வரின் வீட்டினருக்குத் தகவல் தரவே அவர்கள் விரைந்து வந்தனர். அவரது மருத்துவர் கோபாலும் விரைந்து வந்தார்.

டாக்டர் கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து காலையில் சாப்பிடும் மாத்திரையை சாப்பிடுமாறு கோரினர். ஆனால், கருணாநிதி அதை சாப்பிட மறுத்து விட்டார்.

இதையடுத்து மூத்த அமைச்சர்களுக்கு தகவல் தரப்பட்டு அவர்களும் ஓடி வந்தனர். உண்ணாவிரதம் இருக்க வசதியாக ஏற்பாடுகளை செய்தனர், பந்தல் அமைத்ததோடு, அருகில் கட்டிலும் போடப்பட்டது.

இதற்கிடையே முதல்வர் உண்ணாவிரதத்தை அறிந்து ஏராளமான திமுக தொண்டர்கள் அண்ணா நினைவிடம் முன் குவிந்தனர். இதையடுத்து தொண்டர்கள் அமர பந்தல் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டன.

கருணாநிதியி் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடன் அமர்ந்தனர்.

காலை 9.15 மணிக்கு இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் தலைமையிலான டாக்டர்கள் குழு கருணாநிதியின் உடல்நிலையை பரிசோதித்து அவரை படுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து படுத்தபடி அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

உண்ணாவிரதம் நடக்குமிடத்தில் மத்திய அமைச்சர் பாலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் இருந்தனர்.

இந் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் வாசன், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், குமரி அனந்தன் உள்பட ஏராளமானோர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் மத தலைவர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் உண்ணாவிரத்ததை கைவிடவும் கோரினர். ஆனால், அதை ஏற்க கருணாநிதி மறுத்துவிட்டார்.

அவருக்கு அவ்வபோது தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க அவருக்கு ஏர் கூலர்களும் பேன்களும் வைக்கப்பட்டன.

இந் நிலையில் இலங்கை அரசிடம் மிகக் கடுமையான பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்கியது. போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என நெருக்குதல் தந்தது. இதையடுத்து அந் நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதம் நடத்தி, போரை உடனடியாக நிறுத்துவதாக மத்திய அரசுக்கு உறுதிமொழி தந்தது.

இதையடுத்து கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசிய சிதம்பரம், போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி ராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட கருணாநிதி நீரை மட்டும் அருந்திவிட்டு படு்க்கையிலிருந்து வீல் சேருக்கு மாறினார்.

தனது உண்ணாவிரதத்தை கைவிடும் முடிவை அறிவித்து முதல்வர் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இலங்கையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை கூடி தமிழர்களுக்கு எதிரான போர் நடவடிக்கைளை நிறுத்துவது என்ற முடிவை எடுத்துள்ளது.

மேலும், இனிமேல் தமிழர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

எனவே இந்த அளவோடு உண்ணா நோண்பு திரும்பப் பெறப்படுகிறது என்றார்.

ஆனால், மாலையிலேயே இலங்கை தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டது. போர் நிறுத்த உறுதிமொழி எல்லாம் தரவில்லை என்று கூறிவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X