For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் தமிழர் நலன் காக்க இந்திய ராணுவத்தை அனுப்புவது நியாயமே - ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
ஊட்டி: வங்காள தேசம் உருவாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயம் என்றால், எங்கள் தமிழர் நலன் காக்க, இந்திய ராணுவத்தை அனுப்புவதும் நியாயமே, அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டி உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றிச் செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் 2-வது கட்டமாக நேற்று பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. நீலகிரி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் சி.கிருஷ்ணனை ஆதரித்து மேட்டுப்பாளையத்திலும், கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்தும் பிரசாரம் செய்தார்.

மேட்டுப்பாளையம் அருகில் உள்ள குட்டையூர் மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

தன்னலம் மிகுந்த ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

கடந்த 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில், உங்கள் வாக்குகளைப் பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையில், தி.மு.க. அங்கம் வகிக்கும் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், இந்த மத்திய அரசு, உங்களுக்கு என்ன நன்மை செய்தது? காங்கிரசும், தி.மு.க-வும் இணைந்த மத்திய அரசால், நீங்கள் அடைந்த பயன் என்ன?

பொருளாதார சீரழிவு, அதிகரித்து வரும் தீவிரவாதம், விவசாயிகள் தற்கொலை, நதிநீர்ப் பங்கீட்டில் பாரபட்சம், வேலை இல்லாத் திண்டாட்டம், தொழில் வளர்ச்சி கடும் பாதிப்பு, விலைவாசி உயர்வு - இவைகள் தான் மத்திய அரசு இந்நாட்டு மக்களுக்கு அளித்துள்ள பரிசுகள். இன்றைய மத்திய அரசின், நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்கும் தான் இதற்கெல்லாம் காரணம்.


இப்போது, திடுதிப்பென்று பேருந்துக் கட்டணத்தைக் குறைத்து இருக்கிறார்கள். தேர்தல் சட்டங்களை மீறி, பேருந்து கட்டணங்களை குறைத்து, இப்படியாவது ஒரு சில இடங்களில் வெற்றி பெற முடியுமா என்று கருதியிருக்கிறார்கள்.

தி.மு.க. மத்திய மந்திரி ராசா தன்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட செல்போன் அலைவரிசைகளை செல்போன் நிறுவனங்களுக்கு வழங்கினார். அதை ஏலம் முறையில் முறையாக வழங்கியிருந்தால் மத்திய அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால் மத்திய அமைச்சர் ராசா செல்போன் நிறுவனங்களுக்கு பகிரங்கமாக ஏலமுறையில் அலைவரிசைகளை வழங்காமல், முதலில் வருவோருக்கு முதலில் என்ற முறையில் வழங்கிவிட்டார்.

முதலில் வருவோர்க்கு முதலில் தருவது என்ற நடைமுறையை கடைபிடித்தால் ஊழல் நடக்கும், முறைகேடுகள் நடக்கும். எனவே, அந்த முறையில் வழங்காதீர்கள் என்று உயர்நீதிமன்றங்கள் பலமுறை அரசுக்கு அறிவுரை கூறியிருக்கின்றன. ஆனாலும் முதலில் வருவோர்க்கு முதலில் தருகிறேன் என்று அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்தார்.

செல்போன் என்பது எப்போது அறிமுகம் ஆனதோ அந்த காலகட்டத்தில் இருந்த அதே விலைக்கு இப்போது அலைவரிசைகளை விற்று இருக்கிறார். இதன்மூலம் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் பயன்பெற்றன. குறைந்த விலைக்கு செல்போன் அலைவரிசைகளை வாங்கிய நிறுவனங்கள் வாங்கிய சில வாரங்களிலேயே இந்த அலைவரிசை உரிமங்களை பங்கு விற்பனை மூலம் விற்று 60 ஆயிரம் கோடி ரூபாய், 70 ஆயிரம் கோடி ரூபாய் என விற்று இருக்கிறார்கள். இந்த அலைவரிசை விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை பெற்றிருக்கிறார்கள்.

இந்த ஊழலை பற்றி எத்தனையோ முறை புகார் கூறினாலும், மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் நடவடிக்கை எடுக்கையிலும் ஈடுபடவில்லை.

ஸ்பெக்ட்ரம் மூலம் வரவேண்டிய 1 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசுக்கு வந்திருந்தால் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க முடியும். கங்கை-காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு ஆகும் தொகை ரூ.1 லட்சம் கோடியாகும். அதை செய்திருக்கலாம்.

உலகெங்கும் இருந்து கடந்த சில நாட்களாக எனக்கு எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளும், இமெயில் எனப்படும் மின்னஞ்சல்களும், செல்போன் எஸ்.எம்.எஸ்.கள், பேக்ஸ் என செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இலங்கைத் தமிழர் நிலை குறித்து எங்களுக்கு இருக்கும் கவலைகளை எல்லாம் போக்குகின்ற வகையில், ஆக்கப்பூர்வமாக, துணிச்சலாக, பகிரங்கமாக, அச்சம் இன்றி, ஞானத்தோடு நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என்று எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் செய்திகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள்.

எங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தருவதாக, உங்கள் ஈழப் பிரகடனம் அமைந்திருக்கிறது என்று நன்றி சொல்லி, கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள், இப்படி உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும் நிலையில், நம் கைக்கு எட்டிய தூரத்தில், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வாழுகின்ற தமிழர்களைப் பற்றி, சிறிதும் அக்கறை இல்லாத, மத்திய, மாநில அரசுகள், கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.

இரண்டு ஆண்டுகளாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போரில் கொல்லப்படுவதெல்லாம் அப்பாவி பொதுமக்களாக இருக்கிறார்கள். இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுதமும், பயிற்சியும் தருவதாக கூறப்படுகிறது. இது அநியாயம்; அக்கிரமம்; நம்முடைய பெருமைக்கு உகந்ததல்ல. இதைச் செய்யாதீர்கள் என்று எத்தனையோ முறை நாம் எடுத்துக் கூறினோம். அதற்கெல்லாம் இந்திய அரசு செவி சாய்க்கவில்லை.

நம்முடைய வரிப் பணத்தில் இவ்வளவு உதவிகளையும் இந்திய அரசு இலங்கைக்குச் செய்தது. அதை தி.மு.க. தயக்கம் இன்றி ஆதரித்தது. தன்னுடைய ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக, காங்கிரசின் அத்தனை நடவடிக்கைகளையும் கருணாநிதி ஆதரித்தார்.

டெல்லியில் இருந்து தூதுவர்கள் கொழும்பு நகருக்குச் சென்றார்கள். ராஜபக்சவின் தூதுவர்கள் பல முறை டெல்லிக்கு வந்தார்கள். இந்தப் பயணங்கள் எல்லாம் மூடு மந்திரமாகவே இருந்தன.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்களோ தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. செத்து மடிகிறார்கள் தமிழர்கள் அங்கே என்று உலகமே அழுத பொழுது, தந்தி கொடுப்பதும், தொலைபேசியில் பேசுவதும், கடிதம் எழுதுவதுமாக காலத்தைப் போக்கினார் கருணாநிதி.

கருணாநிதியின் முகத்திரை, கிழியும் நேரம் வந்தவுடன், 3 மணி நேர உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார். இந்த நிமிடம் வரை போர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்; அதை நிறுத்த வேண்டிய காரணம் இன்னும் வரவில்லை என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்திருக்கிறார்.

இலங்கையில் உரிமை குடிமக்களாக தமிழர்கள் வாழ வேண்டும் என்றால், அங்கே தனி ஈழம் அமைவது தான் ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயம் என்றால், எங்கள் தமிழர் நலன் காக்க, இந்திய ராணுவத்தை அனுப்புவதும் நியாயமே, அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டித் தான் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றிச் செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நான், ஒன்றைச் சொன்னால் அதை செய்து முடிப்பேன் என்று உலகத் தமிழினம் நம்புகிறது. சுவி்ட்சர்லாந்து நாட்டின் தமிழர் பேரவை எனக்கு அனுப்பி இருக்கும் செய்தியைக் கேளுங்கள்.

"அம்மா, தாய்மை உள்ளம் கொண்ட நீங்கள், கொண்ட கொள்கையில் இருந்து கிஞ்சித்தும் விலகாத, உறுதியான குணமுடையவர் என அறியப்பட்டவர். நீங்கள் கூறும் வார்த்தைகள், உங்கள் உதட்டில் இருந்து அல்லாமல், அடிமனதில் இருந்து வந்தவை என நாங்கள் முழு மனதாக நம்புகிறோம். உங்களின் வார்த்தைகள் மூலம் எங்களுக்கு பெரிய ஆன்ம பலம் கிட்டி இருக்கிறது. தங்களுக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழத் தமிழர்களின் சார்பாக மனமார்ந்த நன்றி" என்று Confederation of Tamil Diaspora Organizations in Switzerland என்ற அமைப்பு, எனக்கு செய்தி அனுப்பி இருக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு, நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, நீங்கள் எனக்கு உதவ வேண்டும். எனக்கு வாக்களித்து உதவ வேண்டும். உலகத் தமிழர்களுக்கெல்லாம், இருக்கின்ற உணர்வைப் போல, நீங்களும் உணர்வு கொண்டு, எழ வேண்டும்.

இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்றால், என் கரத்தை நீங்கள் பலப்படுத்த வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாம் நாடாள வேண்டும். உங்கள் வாக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வேண்டும், வேண்டும், வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X