For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குவாத்ரோச்சியை துன்புறுத்தக் கூடாது; ஈழத் தமிழர்களை துன்புறுத்தலாமா? - ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: போபர்ஸ் ஊழலில், தேடுவோர் பட்டியலில் இருந்த, சோனியா காந்தியின் உறவினர், குவாத்ரோச்சியின் பெயர் நீக்கப்பட்டது. இதுகுறித்து கேட்டபோது, மற்றவரை துன்புறுத்துவது நல்லதல்ல என்றார் பிரதமர். அப்படியானால், இலங்கை அரசு, இலங்கை தமிழர்களை தினமும் கொன்று குவிக்கிறதே! இதை துன்புறுத்தல் இல்லை என்கிறாரா? என்று கேட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசினார்.

அப்போது,

தி.மு.க-காங்கிரஸ் என்றாலே பொய் பித்தலாட்டம் தான்! தி.மு.க-காங்கிரஸ் வார்த்தையை மக்கள் நம்ப மறுக்கிறார்கள். பாரத பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை தமிழர்கள் செத்துமடிவது குறித்து வாய் திறக்க மாட்டேன் என்கிறார்.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு; தேடுவோர் பட்டியலில் இருந்த, சோனியா காந்தியின் உறவினர், குவாத்ரோச்சியின் பெயர் நீக்கப்பட்டது. இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பாரதப்பிரதமர் மன்மோகன்சிங், மற்றவரை துன்புறுத்துவது நல்லதல்ல, என்று பதில் அளித்தார். அப்படி என்றால், இலங்கை அரசு, இலங்கை தமிழர்களை தினமும் கொன்று குவிக்கிறதே! இதை துன்புறுத்தல் இல்லை என்கிறாரா? மன்மோகன்சிங்.

தமிழர்கள்தானே என்ற எகத்தாளம்...

இலங்கை தமிழர்கள் என்ன இத்தாலிக்காரர்களா? சோனியாகாந்தியின் உறவினர்களா? தமிழர்கள் தானே என்ற எகத்தாளம்! தற்போதுள்ள சூழ்நிலையில், இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஒரே வழி, தனி ஈழம் அமைப்பது தான்.

இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் நீங்கள் வெற்றியை தர வேண்டும்.

மத்தியில் அ.தி.மு.க. ஆதரவுடன் ஆட்சி அமைந்தால், அனைத்து துறைகளிலும் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையான இடத்தை பெறவும், பொருளாதாரம் செழிக்கவும், தொழில் வளம் பெருகவும், ரவுடிகளை ஒழிக்கவும், போலீசார் சுதந்திரமாக செயல்படவும் இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவுத்தொழில்தான் சிறந்து விளங்கியது. ஆனால், மத்திய-மாநில அரசுகளின் நிர்வாக சீர்கேட்டால் நெசவாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பட்டு நெசவு தொழிலுக்கு தேவையான பட்டு ஜரிகை, ஜரிகை கோராபட்டு ஆகியவை உடனுக்குடன் வழங்க பாடுபடுவேன்.

காஞ்சீபுரத்தில் நஷ்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு ஜரிகை ஆலையை லாபத்தில் இயக்கவும், கும்பகோணத்தில் மூடப்பட்டுள்ள ஜரிகை ஆலையின் 2-வது பிரிவை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஜெயலலிதா.

முன்னதாக ஜெயலலிதா அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.வேலுவை ஆதரித்து அரக்கோணம், இரும்பாலையில் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா.

அங்கு அவர் பேசுகையில்,

உங்களுடைய முக்கியமான பிரச்சினை பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது என்பதை நான் அறிவேன். எனது ஆட்சிக்காலத்தில், இது குறித்து பிரச்சினை வந்தவுடன், இதை தடுத்து நிறுத்தும் வகையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அப்போது பாலாறு வறண்ட பாலைவனம் ஆகக்கூடிய நிலைமை உருவாகிவிடும் என்று கூக்குரலிட்டார் துரைமுருகன். துரைமுருகன் அமைச்சரான பிறகு, பாலாற்றை வறண்ட பாலைவனமாகவே ஆக்கிவிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கையாவது துரிதப்படுத்தி, ஆந்திர அரசின் அராஜகப்போக்கினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தாரா?

இதோடு நின்றுவிடவில்லை. பாலாற்றில் இருந்து நாள்தோறும் 3,000 லாரிகளில் தி.மு.க.வினரால் திருட்டு மணல் எடுக்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீரும் குறைந்து விட்டது.

ஆந்திராவில் இருந்து வர வேண்டிய தண்ணீரைப்பெற நடவடிக்கை எடுக்காததோடு, நிலத்தடி நீரையும் நிர்மூலமாக்கி விட்டார்கள். உங்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், திருட்டு மணலை எடுத்து நிலத்தடி நீரை வற்றச்செய்து கொண்டிருக்கும் தி.மு.க.வுக்கும், இந்த தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பு அணை கட்டுவதை தடுத்து நிறுத்திட, பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்திட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

திருத்தணி நகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், எனது ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட, திருத்தணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நெசவுத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நகரி முதல் திண்டிவனம் வரை நடைபெறும் ரெயில்வே திட்டத்தினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிப்பட்டில் பழங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலையை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பொன்னை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டும் ஆந்திர அரசின் திட்டம் தடுத்து நிறுத்தப்படும் என்றார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X