For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின்னணு இயந்திரத்திற்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறை வேண்டும் - அதிமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மின்னணு இயந்திரங்களில் பெருமளவில் மோசடி நடந்து வருவதால், மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லோக்சபா தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புடன் களம் கண்ட அதிமுகவுக்கு வெறும் 9 தொகுதிகளே கிடைத்தன. பாமக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல் மண்ணைக் கவ்வியது.

மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தன.

இந்தச் சூழ்நிலையில் அதிமுகவின் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், அவைத் தலைவர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உட்கட்சிப் பூசல் குறித்து ஜெயலலிதா குறிப்பிட்டு தேர்தல் நேரத்திலும் உட்கட்சி மோதலில் ஈடுபட்டவர்களைக் கடுமையாக கண்டித்தாராம்.

மேலும், பிரசாரத்தின் கடைசி நாட்களில் சோம்பல்தனமாக இருந்ததே பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தோற்க காரணம், எனவும் அதற்குக் காரணமானவர்களை அவர் கடிந்து கொண்டதாகவும் தெரிகிறது.

அதேசமயம், மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் செய்யப்பட்ட மோசடியே பல தொகுதிகளில் மயிரிழையில் அதிமுக தோற்றதற்குக் காரணம் என கட்சியினர் கூறியதை ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டாராம். ஆனால் அந்த இடங்களில் கட்சியினர் சற்று விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் ஜெயித்திருக்கலாம் என்றும் தெரிவித்தாராம் ஜெயலலிதா.

இருப்பினும் தேர்தல் தோல்வியால் மனம் தளர வேண்டாம் என கட்சியினரை ஆறுதல்படுத்திய ஜெயலலிதா 2010ம் ஆண்டு நடைபெறப் போகும் சட்டசபைத் தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள். அதில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும், வெற்றி நமக்கே என்றும் உறுதிபடத் தெரிவித்தாராம்.

பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- வளமான தமிழகம், வலிமையான இந்தியா என்ற குறிக்கோளுடன் தேர்தல் வியூகம் வகுத்து, மாபெரும் அரசியல் கூட்டணியை அமைத்து, கழகத்தின் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக அயராது அரும்பணியாற்றிய, ஜெயலலிதாவுக்கு இச்செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

- பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட்ட கழக உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும், ஆதரவு அளித்த பல்வேறு அமைப்புகளுக்கும் இச்செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

- ஜனநாயகத்திற்குப் புறம்பான தேர்தல் தில்லுமுல்லுகளை அரங்கேற்றி, தேர்தலில் இதுவரை கண்டிராத பணபலத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தைப் படுகொலை செய்து போலியான வெற்றியைப் பெற்று, "பணநாயக'' கலாசாரத்தைப் புகுத்திய தி.மு.க.விற்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் பணியாற்றிய அ.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது தி.மு.க. அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் பொய்வழக்கு தொடுத்து பழிவாங்கும் செயலை இச்செயற்குழு கண்டிக்கிறது.

- தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதில் பெருமளவு முறைகேடுகள் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டு உள்ளதை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

எனவே, இனி நடைபெறும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவிற்குப் பதிலாக, பழைய முறைப்படி காகித வாக்குச் சீட்டுகள் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

- இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு இன்றி, உணவின்றி, மருத்துவ வசதி எதுவும் இன்றி தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துவதோடு, இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரும் வகையில் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், அந்தத் தீர்வு நிரந்தரத் தீர்வாக இருக்க வேண்டும்.

- அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவான வாக்காளர்களைக் கண்டறிந்து, திட்டமிட்டு அவர்களை இறுதி நீக்கல் தனிப் பட்டியலில் சேர்த்து, அவர்களின் வாக்குரிமையைப் பறித்து, குறைந்தபட்சம் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் நீக்கி முறைகேடு செய்துள்ளதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தனி கவனம் செலுத்தி தகுதியான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் மீண்டும் இடம்பெறச் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான காவேரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பொன்னையாறு பிரச்சினைகளிலும்; ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், மற்றும் மணல் கொள்ளை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தாமல், பதவி சுகத்தை தனது வாரிசுகள் அனுபவிப்பதற்காகவும், தனது குடும்பத்திற்காகவும் மட்டுமே அரசியல் நடத்தும் முதல்வர் கருணாநிதியை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

- மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், சுயநலத்திற்காக கடத்தல், பதுக்கல் ஆகியவற்றை ஊக்குவித்து அதன் மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விஷம் போல் ஏறிடக் காரணமான தி.மு.க. அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

- தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடுமையான மின்வெட்டு காரணமாக, தொழிற்சாலைகள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், வீட்டு உபயோகிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்குக் காரணமான தி.மு.க. அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

- உரிமைகளை தாரை வார்த்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, தமிழ்நாட்டை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் மனிதாபிமானமற்ற சுயநலவாதி கருணாநிதி தலைமையிலான மக்கள் விரோத தி.மு.க. அரசை வீழ்த்தி, ஜெயலலிதா தலைமையில் மீண்டும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி மலர சூளுரை ஏற்போம்.

2 மணி நேரம் நடந்த செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியில் வந்த ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். ஆனால் தீர்மானங்களைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்று கூறி விட்டு ஜெயலலிதா கிளம்பிச் சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X