For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிரட்டிப் பணம் பறித்ததாக வழக்கு - நகை முகன் உள்பட 2 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு நபர்களை மிரட்டிப் பணம் பறித்ததாக தலைநகரம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக செயல்பட்டு வரும் நகை முகன், அந்த இதழின் உதவி ஆசிரியர் ஜெகதீஷ் ஆகியோரை சென்னை புறநகர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியராக முன்பு பணியாற்றி வந்தவர் நகை முகன். பின்னர் அந்த வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதையடுத்து பத்திரிக்கையாளராக தன்னை தானே அழைத்துக் கொண்டு சில பத்திரிகைகளையும் ஆரம்பித்தார். இவை அனைத்தும் மஞ்சள் பத்திரிகைககள் என்று பத்திரிக்கையாளர்கள் வட்டாரத்தில் அழைக்கப்பட்டு வந்தன.

வில்லங்கம், தலைநகரம், நகைமுகன், ஷத்ரியன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பத்திரிகைககளைப் பதிவு செய்து வைத்துள்ளார் நகை முகன்.

இவரது முக்கிய வேலையே, அரசு உயர் அதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் குறித்து தவறாக செய்திகள் போட்டு அல்லது அப்படி செய்தி போடப் போவதாக கூறி மிரட்டிப் பணம் பறித்தல்தான்.

இவர் மீது ஏகப்பட்ட மிரட்டல் மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு நகை முகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்.

இருப்பினும் வழக்கம் போல தனது பணம் பறிக்கும் வேலையை அவர் தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார்கள் குவியவே போலீஸார் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர்.

திருவேற்காடு, புறநகர் மத்திய குற்றப் பிரிவு ஆகியவற்றில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நகை முகனையும், அவருடைய பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் ஜெகதீசையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்கள் தவிர குமார் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னையை அடுத்த பாடி தென்றல் தெருவை சேர்ந்த பாண்டியன் என்பவர் புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், நான் கஸ்தூரி கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறேன். காலி மனைகளை வாங்கி வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறேன்.

இந்த நிலையில் என்னை பாடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது நண்பர் ஆழ்வார்திருநகரை சேர்ந்த நகைமுகனுடன் வந்து சந்தித்தார். நகைமுகன் தன்னை ஒரு சமுதாய தலைவர் என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் அறிமுகப்படுத்தி கொண்டார்.

அம்பத்தூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் 2574 சதுர அடி நிலம் இருப்பதாகவும் அதை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் கூறினார். இதை நம்பி நான் அந்த நிலத்திற்கு ரூ.15 லட்சத்து 75 ஆயிரம் விலை பேசினேன். 11-1-08 அன்று ரூ.1 லட்சம் அளித்தேன். பின்னர் 3 தவணைகளாக ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் அளித்தேன். ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்த பிறகு நிலத்தின் ஆவணங்களை கேட்டேன். ஆனால் ஆவணங்கள் தராமல் காலதாமதம் செய்தனர்.

பின்னர் அம்பத்தூர் தனி தாசில்தார் கொடுத்ததாக ஒரு நில அளவை பதிவேட்டை தந்தனர். இந்த பதிவேடு மீது சந்தேகம் கொண்டு அதை அம்பத்தூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றேன். இதுபோல ஒரு ஆவணமே அளிக்கவில்லை என்றும் இது போலியானது என்றும் கூறினார்கள்.

இதுபற்றி நகைமுகன், கார்த்திகேயன் ஆகியோரிடம் கேட்டபோது ரூ.2.5 லட்சத்திற்கு காசோலை தந்தார்கள். அதுவும் பணமின்றி திரும்பி விட்டது. பணம் தருமாறு கேட்டபோது மிரட்டினார்கள். குடும்பத்துடன் ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரைத்தான் போலீஸார் முக்கியமாக எடுத்துக் கொண்டு தற்போது நகை முகனைக் கைது செய்துள்ளனர்.

நகை முகன் கைது குறித்து தகவல் அறிந்ததும், பேரூர் பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து போலீஸாரை வாழ்த்தி விட்டுச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X