For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த லிஸ்ட் போதுமா விஜயகாந்த்?- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: திமுக அரசு ஏதாவது நல்ல காரியம் செய்துள்ளதா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளதற்கு இதுவரை திமுக அரசு செய்துள்ள சாதனைகளைப் பட்டியலிட்டு பதிலளித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: திமுகவின் மூன்றரை ஆண்டு கால ஆட்சிக்கு நீங்கள் எவ்வளவு மார்க் போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு "ஒரு மதிப்பெண் கூட போட முடியாது. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத திமுக அரசுக்குப் பூஜ்ஜியம் மதிப்பெண் தான் கொடுப்பேன். இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று நீங்களே சொல்லுங்கள்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு எதிர் கேள்வியையே பதிலாகச் சொல்லியிருக்கிறார். அவரது கேள்விகளுக்கு பொதுவாக நீங்கள் பதில் சொல்வதில்லையென்ற போதிலும், ஐந்து தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவு படுத்தவாவது என்ன நல்ல காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்று விளக்கலாம் அல்லவா?.

பதில்: கடந்த காலங்களில் திமுக ஆட்சி அமைந்தபோதெல்லாம் ஆற்றிய பணிகள் சிலவற்றை மட்டும் இந்த விளக்கத்தில் தருகிறேன். அவை நல்ல காரியங்களா அல்லவா என்பதை மக்களே கூறட்டும்.

இட ஒதுக்கீடு:

'மெட்ராஸ் ஸ்டேட்' என்பதற்குத் "தமிழ்நாடு'' என்ற பெயர். சுயமரியாதைத் திருமணச் சட்டம். பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அமைத்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாகவும், தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகவும் உயர்த்தியது.

தமிழ் பேசும் முஸ்லிம்களை போலவே உருது பேசும் முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். கொங்கு வேளாளர் சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

வன்னியர், சீர்மரபினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு தனியாக 20 விழுக்காடு இடஒதுக்கீடு. பழங்குடியினர்க்கு தனியாக ஒரு விழுக்காடு. மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் வருமான வரம்பிற்குட்பட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும்; வருமான வரம்பிற்குட்பட்டு பெண்களுக்கும் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி. "மெட்ராஸ்'' என்பதற்கு "சென்னை'' என்ற பெயர்.

சாதிப்பூசல்களை அகற்ற பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம், உருது அகாடமி, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம். சென்னை திரைப்பட நகருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பெயர். தென் குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவியது.

தமிழ்ப் புத்தாண்டு:

தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என 1. 2. 2008 அன்று சட்டம் இயற்றப்பட்டு; தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாட எல்லாக் குடும்பங்களுக்கும் இலவச சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்கான பொருள்கள் வழங்கப்பட்டது;

காமராஜர் பிறந்த நாள் "கல்வி வளர்ச்சி நாள்'' என்று சட்டமியற்றப்பட்டு, பள்ளிகளில் கல்வி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர ஆதிதிராவிடர்க்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமத்துவ சமுதாயம் காணும்நோக்கில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு சாதிகளையும் சார்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மத சுதந்திரம் பேண- கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

பெண்களுக்கு சொத்துரிமை:

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிடச் சட்டம். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம். விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டம்.

கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்க நிதி உதவி. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு. 10 லட்சம் மகளிர் பயன்பெறும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திட்டத்தின்கீழ் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 896 ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 299 கோடியே 83 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.

ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 10 லட்சத்து 78 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு 487 கோடியே 56 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஆனால் தேமுதிக தலைவர் தனது பேட்டியில் ஒரு கர்ப்பிணிக்குக் கூட உரிய உதவியைச் செய்யவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார்.

சுய உதவிக் குழுக்கள்:

50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 6 ஆயிரத்து 444 ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது, 2006க்குப்பின் 10 லட்சத்து 48 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 61 ஆயிரத்து 687 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 4 ஆயிரத்து 126 கோடியே 78 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழுவின் ஒரு நாள் பயிற்சிக் கட்டணம் 7 ரூபாய் 50 காசு என்பது 45 ரூபாயாக மீண்டும் உயர்த்தி வழங்கப்படுகிறது.

செம்மொழி:

தமிழ், ஆங்கிலம் மட்டுமே என்ற இரு மொழித் திட்டம். பனிரண்டாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப்பாடமென சட்டம் இயற்றப்பட்டது. தமிழை செம்மொழியாக அறிவிக்கச் செய்தது, நூறாண்டுக் கனவை நனவாக்கி செம்மொழித் தமிழாய்வு மையம் சென்னையில் அமைத்தது.

தமிழ் வழியில் பயிலும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவியர்க்கு அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்புக் கட்டணங்களும், 10, 12ம் வகுப்புகளின் அரசுத் தேர்வு கட்டணங்களும் ரத்து.

பேருந்துகள் நாட்டுடமை:

தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமை, விருதுகள் வழங்குதல், பரிவுத் தொகைகள் வழங்குதல். பேருந்துகள் நாட்டுடைமை. போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கம்.

1500 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கியமான சாலைக ளோடு இணைக்க இணைப்புச் சாலைகள் திட்டம். புகுமுக வகுப்பு வரையில் அனைவருக்கும் இலவசக் கல்வி. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு இந்தியாவிலேயே முதன் முதலாக நிதி ஒதுக்கும் திட்டம்.

மேம்பாலங்கள்:

சென்னை நகரில் ஒன்பது மாநகராட்சி மேம்பாலங்கள். 1 கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு கிலோ அரிசி 1 ரூபாய் வீதம் மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

ஏழை எளியோர்க்கு விலைவாசியின் கடுமைகுறைய பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவை சிறப்புப் பொது வினியோகத் திட்டத்தின்கீழ் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

ஏழை எளியோர் மேலும் பயன்பெற "மானிய விலையில் மளிகைப் பொருள்கள்'' என்ற திட்டத்தின்கீழ் ஏறத்தாழ 70 ரூபாய் மதிப்புடைய 10 சமையல் பொருள்கள், 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு 8 ஆயிரத்து 361 மருத்துவ முகாம்களில் 84 லட்சத்து 71 ஆயிரத்து 493 ஏழைகள் பயன்; 2008ல் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிச் சிறார் இதய பாதுகாப்புத் திட்டம் உருவாக்கி இதய அறுவை சிகிச்சைக்குத் தகுதியானவர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரத்து 396 மாணவர்களில், இதுவரை 598 சிறார்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 17 தனியார் மருத்துவமனைகளின் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

1 லட்சத்து 5 ஆயிரத்து 494 கைத்தறி நெசவாளர்களுக்கும், 90 ஆயிரத்து 547 விசைத்தறி நெசவாளர்களுக்கும், சிறப்புத் தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்ற 2 லட்சத்து 39 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம்; முதியோர், ஆதரவற்ற விதவைகள் முதலியோருக்கு வழங்கப்படும் உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 400 ரூபாய் என உயர்வு.

13 லட்சத்து 5 ஆயிரத்து 912 பேர் பயன். கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை மாதம் 200 ரூபாய் என்பது 500 ரூபாய் என உயர்த்தப்பட்டு, 2006-2007ல் 10 ஆயிரம் பேரும், 2007-2008 முதல் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேரும் பயன்; 1,524 கோடி ரூபாய் செலவில் 7 ஆயிரத்து 585 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன; அதேபோல, அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 140 கோடி ரூபாய் செலவில் 280 பேரூராட்சிகளிலும்; நிதிநிலையில் நலிந்த 30 நகராட்சிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

நெடுஞ்சாலைகள்:

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் 343 பாலங்கள் 214 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன; ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டுள்ளன. அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்.

சென்னையில் உலகத் தரத்திலான 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில நூலகம்; 400 கோடி ரூபாய் செலவில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்ற தலைமைச்செயலக வளாகம்;

மெட்ரோ ரயில்:

100 கோடி ரூபாய் செலவில் அடையாறு பூங்காத் திட்டம்; சென்னை மாநகர் குடிநீர் பற்றாக் குறையை முற்றிலும் தீர்த்திட, வட சென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசு அனுமதித்துள்ள 908 கோடி ரூபாய் நிதியுதவியுடன் தென் சென்னையில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப் படவுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்;

1330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்; 630 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரம் பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம். மதுரவாயலிலிருந்து சென்னைத் துறைமுகத்திற்கு 1,650 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தித்திற்குரிய பணிகள் 8.1.2009 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் தொழிற்சாலை-டைடல் பார்க்:

சேலம் உருக்காலைத் திட்டம். நெய்வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்கம்- மின் திட்டம் தொழில் தொடங்கிடத் தேவைப்படும் அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கிட ஒற்றைச் சாளர முறை. சென்னையில் டைடல் பூங்கா அமைத்தது. குடிசை மாற்று வாரியம்.

குடிநீர் வடிகால் வாரியம். கண்ணொளி வழங்கும் திட்டம். இரவலர்கள் மறுவாழ்வுத் திட்டம். கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கும் திட்டம். ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம். தாழ்த்தப்பட்டோர்க்கு இலவச கான்கிரீட் வீடுகள்.

இலவச டிவி:

6 லட்சத்து 79 ஆயிரத்து 653 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 306 கோடியே 1 லட்சத்து 77 ஆயிரத்து 549 ரூபாய் உதவித் தொகை; 1517 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் 62 லட்சத்து 80 ஆயிரம் ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளில் இதுவரை 1344 கோடியே 75 லட்சத்து 29 ஆயிரத்து 379 ரூபாய் செலவில் 54 லட்சத்து 92 ஆயிரத்து 7 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன; நடப்பு ஆண்டில் மேலும் 41 லட்சத்து 62 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு 750 கோடி ரூபாய் செலவில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கிட கொள்முதல் ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது.

220 கோடி ரூபாய் செலவில் 11 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளது; இந்தியாவிலேயே முதன்முதலாக கோவையில் வேளாண்மைப் பல்கலைக் கழகம். 15 ஸ்டாண்டர்டு ஏக்கரா என்று நில உச்சவரம்புச் சட்டம்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்:

புன்செய் நிலவரி அறவே நீக்கம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ஊக்கத்தொகை, வண்டிச்சத்தம். காவேரி நடுவர் ஆணையம் அமைத்திட முயற்சித்தது. உழவர் சந்தைகள் திட்டம்.

22 லட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது; கூட்டுறவு விவசாயக் கடன் வட்டி 9 விழுக்காடு என்பது 4 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை 2006 முதல் இந்த அரசு மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியுள்ளதால் 2008-2009-ம் ஆண்டில் 8 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் அரசின் மானிய உதவி பெற்றுப் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர்.

2007-2008ல் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு மட்டும் முன் எப்போதும் இல்லாத அளவில் 3 லட்சம் விவசாயிகள் 279 கோடி ரூபாய் காப்பீட்டு தொகை பெற்றுப் பயனடைந்துள்ளனர். 1 லட்சத்து 74 ஆயிரத்து 941 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 134 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது; 6 லட்சத்து 50 ஆயிரத்து 517 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

போலீஸ் கமிஷன்:

அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்புத் திட்டம். மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை. நபிகள் நாயகம் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை. இந்தியாவிலேயே மூன்று முறை போலீஸ் கமிஷன் அமைத்தது. மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையாக மாநில அரசு அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்ததோடு, அதனை முன் தேதியிட்டு வழங்கியது. 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் நியமனம் செய்தது.

முதன் முதலாக 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் நியமனம் செய்தது. 3 லட்சத்து 53 ஆயிரத்து 488 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 156 கோடியே 8 லட்சத்து 30 ஆயிரத்து 604 ரூபாய் உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது; ஏறத்தாழ 3 லட்சம் படித்த இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கு இலவச வீட்டுவசதித் திட்டம்.

பல்கலைக்கழகங்கள்-கல்லூரிகள்:

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம். ஆசியாவிலேயே முதன்முதலாக கால்நடைப் பல்கலைக்கழகம்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம். பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக் கழகம். அம்பேத்கர் பெயரில் இந்தியாவிலேயே முதல் சட்டப் பல்கலைக்கழகம். சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம். உலகத் தமிழர்களுக்கு உதவிடத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம். மாணவர்களுக்கு இலவச பேருந்து பாஸ். வேலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்.

2 வயது முதல் 15 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 3 முறை முட்டைகள்; முட்டை சாப்பிடாத 90 ஆயிரம் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முறை சத்துணவுடன் வாழைப்பழம். தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.

கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மூன்று புதிய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2006க்குப்பின், ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர் ஆகிய 7 இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்.

மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய இடங்களில் 5 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கம். அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தமிழக அரசின் சார்பில் புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்க முடிவு செய்து, அதன்படி திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு பயிர்க் கடன்களை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு அறவே வட்டி கிடையாது. இந்திய வரலாற்றிலேயே எந்தவொரு மாநிலத்திலும் செய்யப்படாத அளவிற்கு ஒரு கோடி ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அரசு ஏதாவது நல்ல காரியம் செய்திருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ள தேமுதிக தலைவருக்கு இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X