For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சகஜ நிலை திரும்பும் வரை இலங்கைக்கு செல்ல மாட்டேன்- எம்.எஸ்.சுவாமிநாதன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலங்கையில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். அங்கு சகஜ நிலை திரும்பும் வரை நான் இலங்கைக்குப் போக மாட்டேன் என்று விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கூறியுள்ளார்.

வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் கீழ் விவசாயப் பணிகளை சீரமைக்கும் நடவடிக்ககைளில் உதவுவதற்காக எம்.எஸ்.சுவாமிநாதனை அழைத்திருந்தார் ராஜபக்சே. இதற்காக சுவாமிநாதனும் கொழும்பு சென்று ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழர்கள் அனைவரையும் முகாம்கள் என்ற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலையில் இலங்கை அரசு அடைத்து வைத்துள்ளது. இந்த நிலையில் நிலங்களை சீரமைத்து அங்கு யார் விவசாயம் பார்க்கப் போகிறார்கள். சிங்களர்களுக்கு ஆதரவான திட்டம் இது. இதற்கு சுவாமிநாதன் உதவக் கூடாது. மீறினால் சுவாமிநாதன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இயக்குநர் சீமான் கடுமையாக எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் சுவாமிநாதன். அப்போது அவர் கூறுகையில்,

இலங்கையில் குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் தன்மானம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் பல லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் வவுனியாவில் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் மீண்டும் தங்களது இடங்களுக்கு சென்றால் தான் விவசாயம் மற்றும் மீன்பிடிப்பு தொழிலில் மீண்டும் ஈடுபட முடியும். இலங்கை தமிழர்கள் நல்ல விவசாயிகள். இதற்கிடையே, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு புனரமைப்பு ஏற்படுத்த இந்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. உடனடி தேவைக்கும், மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்தவும் இந்த நிதி பயன்படும்.

இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கையில் வேளாண்மையையும், மீன்பிடிப்பு தொழிலையும் மீண்டும் கொண்டு வரவும், இலங்கை தமிழர்கள் மீண்டும் கண்ணியத்துடன் வாழவும், வேளாண்மையில் சிறந்து விளங்கவும் மிகுந்த அக்கறை உள்ளத்துடன் செயல்பட எண்ணியுள்ளது.

இதுதொடர்பாக இந்த 2 தொழில்களையும் வளப்படுத்துவதற்காக உரிய பயிற்சியும், தொழில்நுட்ப உதவியும் செய்வதற்கு இந்திய அரசு உறுதியாக உள்ளது. அந்த வகையில் தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதற்காக இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொழில்நுட்ப உதவிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

அந்த குழுவில் மத்திய வேளாண் அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூர் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், மதுரை டான் நிறுவனம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

அக்டோபர் மாதம் இலங்கையில் தொடங்க இருக்கும் மகா பருவத்தில், இடம் பெயர்ந்துள்ள தமிழர்கள் மீண்டும் வேளாண்மையில் ஈடுபடுவதற்கு தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை இந்த குழு திரட்டி தருவதுதான் இந்த குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் ஆகும்.

தற்போது இலங்கையில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகள் மீண்டும் துரிதமாக மலருவதற்கு அங்குள்ள அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை. எனவே இலங்கையில் இணக்கமான சூழ்நிலை உருவாகும் வரை இந்த குழுவில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என தெரிவித்து கொள்கிறேன்.

நான் கடந்த மாதம், சர்வதேச நீர் மேலாண்மை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே இலங்கைக்கு சென்றேன். வேறு எதற்காகவும் அங்கு செல்லவில்லை. இலங்கை அரசு அறிவித்திருக்கும் வடக்கின் வசந்தம் என்ற திட்டத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்றார் சுவாமிநாதன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X