For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை வள்ளுவர் சிலை திறப்பு: வாட்டாள்-நாராயண கெளடா கைது

By Staff
Google Oneindia Tamil News

Vattal Nagraj
பெங்களூர்: கடந்த 18 ஆண்டுகளாக கர்நாடக தமிழர்களின் கனவாக இருந்து வந்த பெங்களூர் திருவள்ளுவர் சிலை நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னட அமைப்புகள் சிலவற்றின் எதிர்ப்பு காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ள கன்னட ரக்ஷண வேதிகே தலைவர் நாராயண கெளடா, கன்னட சளுவளி தலைவர் வாட்டாள் நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் உள்ள பூங்காப் பகுதியில், தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அப்போதைய முதல்வர் பங்காரப்பா சிலையைத் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டு விழாவுக்கு ஏற்பாடும் செய்யப்பட்டது.

ஆனால், விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக புலிகேசி கன்னட சங்கம் என்ற அமைப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தில், இடைக்காலத் தடை வாங்கி விட்டது. அதன் பின்னர் சிலையைத் திறக்க வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.

சிலையை சாக்குத் துணியால் மூடிவைத்து விட்டனர். இந் நிலையில் தற்போதைய கர்நாடக முதல்வர் எதியூரப்பா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியால், திருவள்ளுவர் சிலைக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

இந் நிலையில் திருவள்ளுவரின் சிலையை முதல்வர் கருணாநிதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இதற்கான விழா அல்சூர் ஏரிக்கரையில் இருக்கும் ஆர்.பி.ஏ.என்.எம். பள்ளித் திடலில் நடக்கிறது.

விழாவுக்கு கர்நாடக முதல்வர் எதியூரப்பா தலைமை தாங்குகிறார்.
கர்நாடக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, சிவாஜி நகர் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க், பெங்களூர் மத்திய தொகுதி எம்.பி. மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்தச் சிலை திறப்புக்கு முழு முயற்சி எடுத்த எதியூரப்பாவுக்கு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை முழு ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் கன்னட அறிஞர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளும் முழு ஆதரவு அளித்துள்ளனர். ஆனால், நாராயண கெளடா, வாட்டாள் நாகராஜ், பிரவீன் ஷெட்டி ஆகியோரைத் தலைவர்களாகக் கொண்ட கன்னட அமைப்புகள் இந்த சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சிலை திறப்பை எதிர்த்து இவர்களில் சிலர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதோடு, இரு மாநில உறவைக் கெடுக்க முயல வேண்டாம் என்று இவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தது.

இந் நிலையில் நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்த நாராயண கெளடாவை நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இன்று காலை பந்த் ஏற்பாடுகள் குறித்து சென்னராயபட்டணத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த வாட்டாள் நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

இந்த இருவரோடு சேர்த்து நூற்றுக்கணக்கான அவர்களது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாளைய பந்த் அடையாளப்பூர்வமாகவே இருக்குமே தவிர முழு அளவில் இருக்காது என்று தெரிகிறது.

விழா சிறப்பாக நடைபெறும் பொருட்டு பெங்களூர் மற்றும் கர்நாடகம் முழுவதும் தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பந்த் நடத்துவதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், கர்நாடகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூர் நகரின் முக்கியப் பகுதிகள் அனைத்திலும், கூடுதல் போலீஸார் பாதுகாப்புப்புப் பணியில் ஈடுபடுத்ப்பட்டுள்ளனர். நகரின் மையப் பகுதியான சிவாஜி நகரில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல மகடி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு குறித்து பெங்களூர் காவல் துறை ஆணையர் சங்கர் பித்ரி கூறுகையில், கன்னட அமைப்புகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தலாம். அதேசமயம், போக்குவரத்தை சீர்குலைக்கவோ அல்லது வன்முறையில் ஈடுபடவோ முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நாளைய விழாவைத் தொடர்ந்து வரும் 13ம் தேதி சென்னை அயனாவரத்தில் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞர் சர்வக்னாவின் சிலை திறக்கப்படுகிறது. கர்நாடக முதல்வர் எதியூரப்பா சிலையைத் திறந்து வைக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X