For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வள்ளுவர் சிலை திறப்பு: இன்று வாழ்விலோர் திருநாள்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் இந் நாள் என் வாழ்விலோர் திருநாள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இன்று வாழ்விலோர் திருநாள்'' என்பார்களே, அப்படிப்பட்ட திருநாள்தான் இன்று!. ஆம், பெங்களூரு நகரத்தில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை திறக்கப்படுகிறது. அய்யன் வள்ளுவருக்கு இங்கே பெங்களூரில் சிலை திறக்கின்ற விஷயமாகட்டும்- தமிழகத்தில் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியாகட்டும்- சென்னை மாநகரத்தில் திருவள்ளுவருக்காக நான் முயற்சியெடுத்து எழுப்பிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா நிகழ்ச்சியாகட்டும்- சென்னையில் சட்டப்பேரவை மண்டபத்தில் வள்ளுவரின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைக்கின்ற நிகழ்ச்சியாக இருக்கட்டும்- அனைத்திலும் என் வாழ்க்கையும் இணைக்கப்பட்ட ஒன்று என்று சொன்னால் அது தவறாகாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வாழ்க்கை நெறி வகுத்துக்காட்டி வள்ளுவரால் வழங்கப்பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள். திருக்குறளும், அதனை யாத்து இவ்வுலகிற்கு வழங்கிய வாலறிவன் வள்ளுவரும், இளமையிலேயே எனக்கு அறிமுகமாகி, என் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உயரத்தையும், தரத்தையும் தந்து வருகின்ற பாங்கினை என்னென்பேன்!

"திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார். அதனை நாம் உலகத்தின் பொதுச் சொத்து என்று எண்ணத்தக்க விதத்தில் பொதுக் கருத்தைப் பரப்ப வேண்டும்'' என்று அண்ணா கூறியுள்ளார். 1948ல் தந்தை பெரியாரோ திருக்குறள் மாநாடு ஒன்றினையே கூட்டினார். 1953ம் ஆண்டு மொழியுரிமை காக்க கல்லக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் நான் இருந்தபோது, கைதிகளாக இருந்த தோழர்களின் மத்தியில் அன்றாடம் பேசும்போது, திருக்குறள் பற்றி உரையாற்றியதும் என் நினைவிலே உள்ளது.

1963ம் ஆண்டு சட்டப் பேரவையில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, பேரவையில் திருவள்ளுவர் திருவுருவப் படம் ஒன்றினை வைக்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டேன். அப்போது பேரவைத் தலைவராக இருந்த யு.கிருஷ்ணாராவ், அந்தத் திருவள்ளுவர் படத்தினை நான் வாங்கித் தருவதாக இருந்தால், அதை மன்றத்திலே வைப்பதற்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தார். நான் அவ்வாறே வாங்கித் தர இசைவு தந்த பிறகு, அந்தப் படத்தினை தாழ்வாரத்தில் தான் வைக்க முடியும், மன்றத்திற்குள் வைத்தால் வேறு சிலர் கம்பர் படத்தினை வைக்க வேண்டுமென்றோ, காளமேகத்தின் படத்தினை வைக்க வேண்டுமென்றோ கோரிக்கை வைக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது.

அதற்கு பதிலாக நான் கூறும்போது, மன்றத்திற்குள் காந்தி படம், ராஜாஜி படம் வைக்கப்பட்டுள்ளது, அதைப்போல படேலுக்கோ, வேறு ஒரு கட்சி தலைவருக்கோ படம் வைக்கப்பட வேண்டுமென்று எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை, எனவே மன்றத்திற்குள் தான் திருவள்ளுவருக்கு படம் வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். ஆனாலும் அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்படாவிட்டாலும், நான் அவையிலே எழுப்பிய அந்த கோரிக்கை 22.3.1964 அன்று பேரவை மன்றத்திற்குள் திருவள்ளுவரின் படத்தினை அன்றைய குடியரசு தலைவர் ஜாகீர் உசேன் திறந்து வைத்தார்.

அதைப் போலவே சட்டப் பேரவையில் நான் பேசும்போது வேறொரு கருத்தையும் தெரிவித்தேன். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள புலவர் பெருமக்கள் எல்லாம் கூடி, குறிப்பிட்டுச் சொல்லும் நாளை திருவள்ளுவர் தினம் என்ற பெயரால் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமென்றும் கூறினேன். அதன் பின்னர் 30.10.1969 அன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவினைத் தொடர்ந்து- ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படும் நாளுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் நாள் என்றும், அன்று அரசு விடுமுறை என்றும் முடிவு செய்து அதற்கான அரசாணை 3.11.1969-ல் என்னுடைய ஆட்சி காலத்தில்தான் வெளியிடப்பட்டது.

அதுபோலவே, 1973-ல் திருமயிலை திருவள்ளுவர் நினைவாலயத் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டிய போது, திருவள்ளுவருக்கு தமிழகத் தலைநகரில் அழியாத நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். அது அறிவிப்பாகவே நின்றுவிடாமல், 18.9.1974 அன்று வள்ளுவர் கோட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று, பணிகள் தொடங்கப்பட்டு, திறப்பு விழாவுக்கான தேதியினைக் குறிக்கவும், விழாவினை எவ்வாறு நடத்துவது என்பதற்கான திட்டங்களைத் தீட்டவும்- 8.1.1976 அன்று அரசின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் 22, 23 ஆகிய நாட்களில் அந்தத் திறப்பு விழாவை கழக அரசு முன்னின்று நடத்துவதென்று நாளும் குறிக்கப்பட்டது. ஆனால் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவினை திமுக அரசு நிறைவேற்றுவதற்கு முன்பாகவே ஜனவரி 31ம் தேதியன்று மாலையிலேயே திமுக அரசு கலைக்கப்பட்டுவிட்டது.

திமுக அரசு கலைக்கப்பட்டு விட்டாலும், 1976ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் கூட, அப்போது எனக்கு அனுப்பப்படவில்லை.

அந்த கோட்டம் திறக்கப்பட்ட நாளன்று, "கோட்டம் திறக்கப்படுகிறது, குறளோவியம் தீட்டப்படுகிறது'' என்ற தலைப்பில் முரசொலியில் இரண்டரை பக்கத்திற்கு நான் உடன்பிறப்பு மடல் ஒன்றினைத் தீட்டியிருந்தேன். இன்று எப்படி "இன்று வாழ்விலோர் திருநாள்'' என்று தொடங்கி கடிதத்தை எழுதுகிறேனோ, அதுபோலவே அன்றும் "இன்று சென்னையில் ஒரு விழா! திருவிழா! திருமிகு விழா! திருவள்ளுவர்க்கு எடுக்கும் விழா'' என்று தொடங்கி எழுதியிருந்தேன். அந்த கடிதத்தின் ஒரு சில பத்திகளை மட்டும் இப்போதும் அது பொருந்தும் என்பதால் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

''கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய்- காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய்- வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய்- மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய்- நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்- எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது.

மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, காசறு விரையாக, கரும்பாக, தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால், உலகப் பந்தின் மீது எந்த மூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சு புடைத்து நிற்பான்- மகிழ்வான்- தகதகவெனக் குதிப்பான்- தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் -தாமரை, கதிர் கண்டது போன்ற துள்ளல் எழும் என்பதில் ஐயமுண்டோ?.

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத் தமிழ்மறைக் கன்றோ பெருமை சேர் விழா, தாயகத்து மண்ணில் திகழ்கின்றது.

இரண்டாம் பக்கம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X