For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திராவிட தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது திமுக -கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanithi
சென்னை: திமுக, உணர்வின் அடிப்படையில் திராவிட தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேருடன் திமுகவில் இணைந்தார். முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்த விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

நிதி அமைச்சர் அன்பழகன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். இவர்களை தவிர்த்து ஆற்காடு வீராசாமி, பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

இந்நாளில் அனிதா ராதாகிருஷ்ணனுடைய அணிவகுப்பில் வருகை தந்துள்ள ஆற்றலாளர்களாம் உங்கள் அனைவரையும், ஏறத்தாழ முப்பதாண்டு காலத்திற்கு மேலாக திராவிட இயக்கத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டு, அது பிரிவு அல்ல. பிளவு என்பது அறியப்பட்டது.

இன்றைக்கு இந்தியாவில் தேசிய இயக்கமாக, இன இயக்கமாக, இன உணர்வு இயக்கமாக, வளர்கின்ற இயக்கம் இந்த இயக்கம் தான் என்று உணர்ந்து, அனிதா தலைமையில் அண்ணா அறிவாலயத்திலே குழுமி இருக்கின்ற உங்கள் அனைவரையும் வருக, வருக என்று வரவேற்கின்றேன்.

1949ம் ஆண்டு திராவிட இயக்கத்தை தந்தை பெரியாரோடு உருவான கருத்து வேறுபாடு காரணமாக பேரறிஞர் அண்ணா திமுகவை தொடங்கினார்கள். திமுகவை தொடங்குவதற்கு முன்பே எனக்கும், இங்கே உட்கார்ந்திருக்கின்ற நம்முடைய பேராசிரியர் அன்பழகனுக்கும் நீங்கள் எல்லாம் பழக்கப்பட்டவர்கள் அல்ல.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், திமுக தொடங்கியது 1949-ம் ஆண்டு. அப்போது சென்னையிலே தொடங்கப்பட்ட, அந்த இயக்கத்தை மாவட்ட தலைநகரங்களில் ஒவ்வொரு நகரத்திலும் கொடியேற்றி வைத்து, திமுக கிளைகளை உருவாக்க வேண்டும் என்று அறிஞர் அண்ணா அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதற்காக அணி வகுத்து சென்றவர்களில் நான், பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி.நடராசன் ஆகியோர் எல்லாம் முக்கியமானவர்கள்.

அண்ணா எனக்கிட்ட ஆணை...

1949-ம் ஆண்டு அண்ணா எனக்கிட்ட ஆணை, நீ திமுகவை 49ம் ஆண்டு அக்டோபர் 17ம் நாள் தூத்துக்குடிக்கு சென்று கே.வி.கே.சாமி தலைமையில் தொடக்கம் செய். கழகத்தின் கொடியை ஏற்றி வை என்று கட்டளையிட்டார்கள். அதற்கு மறுநாள் கோவில்பட்டியிலே திமுக கொடியை ஏற்றி, கழக கிளையைத் தொடங்கி வைக்கும் பணியை நான் ஆற்றினேன்.

அப்படி தான் என்னைப் போல பேராசிரியர் அன்பழகன் ஒரு ஊரில், நாவலர் நெடுஞ்செழியன் ஒரு ஊரில், மதியழகன் ஒரு ஊரில் என்று இப்படி தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் திமுகவின் கிளைகள் தொடங்கப்பட்டு கொடிகள் ஏற்றப்பட்டன.

சொல்வதற்காக நீங்கள் மன்னித்துக்கொள்ள வேண்டும். அப்போது உங்களில் பல பேர் பிறந்திருக்கவே மாட்டீர்கள். இதை சொல்வதற்கு காரணம், இந்த இயக்கம் தோன்றிய நாள் தொட்டு, இன்று வரையிலே இருந்து அனிதா இங்கே குறிப்பிட்டாரே, அதைப் போல கஷ்டங்களை, இடர்ப்பாடுகளை எல்லாம் அனுபவித்த தலைமைப் பொறுப்பிலே இருந்தவர்களின் வரிசையிலே உள்ளவர்களில் நானும், பேராசிரியர் அன்பழகனும் இடம் பெற்றவர்கள்.

இப்போது அண்ணா இல்லை. அண்ணாவை உருவாக்கிய தந்தை பெரியார் இல்லை. ஆனால் அண்ணாவால் உருவாக்கப்பட்ட நானும், பேராசிரியரும் இங்கே உங்கள் முன்னால் அமர்ந்திருக்கிறோம்.

எந்த தூத்துக்குடியில் 1949ம் ஆண்டு கழக கொடியை ஏற்றி வைத்தேனோ, அந்த தூத்துக்குடியில் அப்போது பெரியசாமி கூட இல்லை. இப்போது பெரியசாமி இருக்கிறார். அப்போது அனிதா பிறந்தாரோ, இல்லையோ எனக்கு தெரியாது.

ஆற்று சுழலில் சிக்கியவர்கள்...

அவர் பிறந்து, வளர்ந்து இடையிலே ஆற்றுச் சுழலால் அடித்துச் செல்லப்பட்டு இப்போது கரையேறி, தாய் கழகத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். அவரை இரு கரம் நீட்டி நான் தூக்கி, சீராட்டி, பாராட்டி வாழ்த்துகின்றேன். அவரை நான் நம்முடைய ஆட்சி இல்லாத காலத்திலும் அறிவேன்.

அறிவேன் என்றால், ஒருவரோடு கலந்து பழகி அல்ல, கேள்விப்பட்டு அறிந்திருக்கிறேன். அவர் எப்படிப்பட்டவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். கட்சியிலே நல்ல பிடிமானம் உள்ளவர். அந்த வட்டாரத்தில் தனக்கு எதிராக இருந்து கட்சியை வளர்த்துக் கொண்டிருப்பவர் என்று பெரியசாமியாலேயே புகழப்பட்டவர்.

அனுப்பி வைத்தவர்களுக்கு நன்றி...

எனக்குள்ள வேதனை எல்லாம். வேதனை கூட அல்ல, ஆச்சரியம் எல்லாம், இப்படிப்பட்ட ஒரு தளபதியை ஒரு கட்சியினர் இன்றைக்கு இழந்து விட்டு நம்மிடத்திலே கொண்டு வந்து அவரை சேர்த்திருக்கிறார்களே என்பது தான். நான் அவர் இங்கே வந்ததற்காக நன்றி கூற விரும்பவில்லை. அவரை இங்கே அனுப்பி வைத்தவர்களுக்காக நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பதவிப் பொறுப்பிலே இருந்து தான் தீரவேண்டுமென்று எண்ணியவர் அல்ல. அவர் இங்கே குறிப்பிட்டதைப் போல, என்னுடைய இல்லத்திற்கு, தம்பி ஸ்டாலின் அவரை அழைத்து வந்த போது இருவரும் கலந்து விவாதித்த நேரத்தில் நான் சொன்னேன், சட்டமன்ற உறுப்பினர் பதவியை நீங்கள் அந்த கட்சியில் இருந்து இந்த கட்சிக்கு வருகின்ற காரணத்தால் இழக்க நேரிடுமே என்று சொன்னபோது, அவர் சொன்னார் நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றார்.

இங்கே இடம் போதாதே...

கவலைப்படாததற்கு காரணம் இழக்க நேரிட்டாலும் மீண்டும் பெற முடியும் என்ற தைரியம் என்பதால் அல்ல. அவர் எவ்வளவு கட்டுக்கோப்பாக கழகத்தை அந்த மாவட்டத்திலே வளர்த்தார்.

அந்த மாவட்டத்தினுடைய ஒவ்வொரு வட்டாரங்களிலும் செல்வாக்குப் பெற்றிருந்தார் என்பதையும் பத்தாயிரம் பேரோடு இன்றைக்கு வந்து இணைகிறேன் என்று அவர் சொன்ன போதே, இடம் இங்கே போதாதே என்ற ஏக்கம் தான் எனக்கு ஏற்பட்டது.

இன்னும் இடம் இருந்தால் அனிதாவைப் போன்றவர்கள், உங்களைப் போன்றவர்கள் எதிர் காலத்தில் நம்முடைய அறிவாலயத்தை இன்னும் பெரிதாகக் கட்டுவீர்களேயானால் அந்த இடம் கொள்ளாத அளவிற்கு திமுகவின் செயல்பாடுகளை ஆற்றக் கூடிய அரும் தொண்டர்கள் ஏராளமானவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மாநில கட்சி, தேசிய இயக்கம்...

இன்றைக்கு திமுக ஒரு மாநில கட்சி என்றாலுங்கூட, இது மகத்தான தேசிய கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற பல்வேறு கட்சிகளுக்கு இணையான கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது.

நேற்றைக்கு நான் திருவள்ளுவருடைய சிலையைத் திறப்பதற்காக கர்நாடக மாநிலத்தினுடைய தலைநகரத்திற்கு சென்றிருந்தேன். அங்கே வள்ளுவருடைய சிலை திறக்கப்பட்டது. அந்த விழாவிற்கு தலைமையேற்றிருந்தவர் பாஜக முதல்வர் எதியூரப்பா. அந்த விழாவிற்கு பாஜக அனைத்திந்திய தலைவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள்.

18 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சங்கத்தின் சார்பில் அங்கே வள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ் சங்கத்தின் கட்டிடத்திற்கான நிதி உதவி எல்லாம் கூட தமிழகத்தில் இருந்து தி.மு.க அரசின் சார்பாக செய்யப்பட்டும் கூட வள்ளுவருக்கு அங்கே இடம் கிடைக்கவில்லை.

இன்றைக்கு வள்ளுவருக்கு அங்கே இடம் கிடைத்திருக்கின்றது. வள்ளுவரின் சிலை திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் கர்நாடக தமிழ் மக்கள், கர்நாடக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கை குலுக்கிக் கொண்டனர்.

உடன்பிறவா சகோதரர்கள் என்று ஒருவருக்கொருவர் நன்றி பாராட்டிக் கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு அங்கே விளங்கினார்கள் என்றால், இது அகில இந்திய அளவிலும் திமுக ஏதோ நான்கைந்து பாராளுமன்ற உறுப்பினர்களையும், சில மந்திரிகளையும் மத்தியிலே பெற்றதால் மாத்திரமல்ல உணர்வின் அடிப்படையிலே கூட திமுக, ஒரு திராவிட தேசிய இயக்கமாக இன்றைக்கு உருவாகி வருகிறது. இதற்கு அடையாளமாக பெங்களூர் நிகழ்ச்சி அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

இதயத்தை துள்ள வைக்கிறது...

ஆகவே அப்படிப்பட்ட ஒரு பொன்னான நேரத்தில் சுருக்கமாக சொன்னால் இந்த பொற்காலத்தில் நம்முடைய தம்பி அனிதா உங்கள் அத்தனை பேருடைய அரவணைப்போடும், திமுகவிலே தன்னை இணைத்துக்கொள்கின்ற இந்த காட்சி, உள்ளபடியே எழுச்சி ததும்பிய காட்சி. இது என்னுடைய இதயத்தையும், நம்முடைய பேராசிரியருடைய இதயத்தையும் துள்ள வைக்கின்ற காட்சி.

காட்சிகள் தொடரட்டும்...

இவர்களைத் தொடர்ந்து பல பேர் இன்னும் வரவிருக்கிறார்கள் என்பதற்கு இந்த காட்சி, ஒரு சாட்சி என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, இந்த காட்சிகள் தொடரட்டும்.

இந்த காட்சியிலே பங்கு பெற்றிருக்கின்ற காளையர், தமிழ் குலத்தின் தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள், கலைஞர்கள், அத்தனை பேருக்கும் என் சார்பிலும், கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சார்பிலும், துணை முதல்வர் தம்பி ஸ்டாலின் சார்பிலும் இங்கே வீற்றிருக்கின்ற தலைமைக் கழகத்தின் நிர்வாகிகள் அனைவருடைய சார்பிலும் இரு கரம் நீட்டி உங்களுடைய கரங்களைக் குலுக்கி வாரீர், வாரீர், வாரீர் என்று அழைக்கின்றேன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X