For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 17 பேருக்கு ஸ்வைன் அறிகுறி - தமிழகத்தில் 57 பேர் பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் இதுவரை 27 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 57 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளவர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தற்போது 27 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்த்பபட்ட மருத்துவ பரிசோதனையில் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற பத்து பேரும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டு முடிவுகளுக்காக டாக்டர்கள் காத்துள்ளனர்.

ஸ்டான்லியில் 15 படுக்கைகளுடன் வார்டு...

இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்காக தனியாக ஒரு வார்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு 15 படுக்கைகள் போடப்பட்டுள்ளன.

அங்கு 40 வயது ஒரு ஆணும், 35 வயது பெண்ணும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்தான். தற்போது சிகிச்சைக்குப் பின்னர் அவன் திரும்பி விட்டான்.

மேலும் ஒரு சிறுவனுக்குப் பாதிப்பு...

சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் அந்த மாணவன் 4-ம் வகுப்பு படிக்கிறான். இந்த பள்ளியில் ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியாட்களின் குழந்தைகள் படிக்கின்றனர்.

பன்றி காய்ச்சல் நோய் தாக்கியுள்ள அந்த மாணவனின் தந்தை, ஐ.ஐ.டி. பேராசிரியராக உள்ளார். அவர்களுடைய வீடும் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ளது. சமீபத்தில் அவனுக்கு சளி பிடித்து, காய்ச்சல் ஏற்பட்டது.

பன்றி காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு உள்ளதால், அவனது பெற்றோர் அவனை அந்த வளாகத்தில் உள்ள மருத்துவனைக்கு சோதனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவன் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டான்.

பன்றி காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள், அந்த மாணவனை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மருத்துவமனை டாக்டர்கள் இதை உறுதி செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து அந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவன்படித்த வகுப்பில் உள்ள மாணவர்கள், அவனது மற்ற நண்பர்களுக்கும் பன்றி காய்ச்சல் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முதலில் அந்த மாணவனின் பெற்றோரிடம் இந்த சோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களுக்கு பன்றி காய்ச்சல் கிருமி தொற்று ஏற்படவில்லை.

தமிழகத்தில் 57 பேர் பாதிப்பு...

தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 57 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆமை வேகத்தில் நடக்கும் தடுப்பு பணி...

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் தடுப்பு பணி படுமந்தமாக நடக்கிறது. இந்நோய் தடுப்புக்கான மாத்திரைகளை தர அரசு தயக்கம் காட்டுவதால் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.

நாடு முழுவதும் பொது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வரும் பன்றி காய்ச்சல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களையும் உலுக்க துவங்கியுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மேல்சிகிச்சைகளை அளித்து வரும் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கென தனி வார்டே இப்போதுதான் தயாராகி வருகிறது. மாத்திரைகள் இல்லை, மருந்துகள் இல்லை, ஏன் பரிசோதனை வசதிகள் கூட இல்லை.

ஆனால் வார்டை மட்டும் உருவாக்கும் முயற்சியில் நெல்லை மருத்துவமனை கல்லூரி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகள் தென்மாவட்டங்களில் மந்தமாகவே நடப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு பன்றி காய்ச்சல் அறிகுறியோடு சேர்ந்த நெல்லை வாலிபருக்கே பரிசோதனை முடிவு இன்னும் வந்து சேரவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி நிர்வாகங்களும், சுகாதார துறையும் பன்றி காய்ச்சல் உள்ளோரின் பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்து இன்னமும் தவம் கிடக்கின்றன.

பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து, மாத்திரைகள் இல்லாததால் அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கு அறிகுறி காரணமாக வருவோருக்கு ரத்த மாதிரி எடுத்து அதை சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கிருந்து முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் இங்கு நோய் அறிகுறியுடன் வருவோர் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X