For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தோல்விக்கு அத்வானி, மோடி, வருண், ஜேட்லியே காரணம்-ஆப்தே அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சிம்லா: மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அத்வானி, நரேந்திர மோடி, வருண் காந்தி, அருண் ஜெட்லி ஆகியோர்தான் காரணம் என்று அக் கட்சியின் ரகசிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டள்ளது.

ஆர்எஸ்எஸ்சின் அறிவுறுத்தலின்படி தோல்விக்கான காரணம் குறித்து ஆராய பால் ஆப்தே தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டி நீண்ட நாட்களுக்கு முன்பே தனது அறிக்கையை சமர்பித்துவிட்டது. ஆனால், அதை பாஜக ரகசியமாகவே வைத்திருந்தது.

இந் நிலையில் தோல்வி குறித்து ஆராய சிம்லாவில் சிந்தனையாளர் கூட்டம் நேற்று முன் தினம் முதல் நடந்து வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் இந்த அறிக்கை மூத்த தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரகசிய அறிக்கை நேற்று லீக் ஆகிவிட்டது. இது பாஜக தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் விவரம்:

பிரதமரை அத்வானி தாக்கியது தவறு...

நாட்டிலேயே பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங்கை தனிப்பட்ட முறையில் அத்வானி திரும்பத் திரும்ப தாக்கியதை மக்கள் ரசிக்கவில்லை, விரும்பவில்லை. அந்தப் பேச்சை மக்கள் நிராகரித்து விட்டனர்.

மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பிரசாரத்தில் ஈடுபடுத்தாமல் விட்டது அதை விட முக்கியமான மாபெரும் தவறாகும்.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை பாஜக சரியாக முன் வைக்கவில்லை. மும்பை தீவிரவாத தாக்குதல் குறித்து பாஜக பேசியபோது காண்டஹார் விமானக் கடத்தையும் அப்போது தீவிரவாதிகளை விடுவித்து பாஜக நடந்து கொண்ட முறையையும் எதிர் பிரச்சாரம் செய்து காங்கிரசும் பத்திரிக்கைகளும் பாஜக பிரச்சாரத்தை எடுபடாமல் செய்துவிட்டன.

ஆனால் இதை சமாளித்து காங்கிரஸை நெருக்கடியில் ஆழ்த்த பாஜக தவறி விட்டது.

விலைவாசி உயர்வு தொடர்பான பிரசாரம் மக்களிடம் எடுபடாமல் போய் விட்டது. அந்த அளவுக்கு பாஜகவி்ன் பிரச்சாரம் மோசமாக இருந்தது.

மோடியை வருங்கால பிரதமர் என்றதால்...

அதேபோல பிரசாரத்தின் நடுவே சில தலைவர்கள் நரேந்திர மோடிதான் வருங்கால பிரதமர் என்று பேசி வந்ததும் கட்சிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விட்டது. இது கட்சியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம்.

இதுபோன்ற பேச்சுக்கள் மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி விட்டன.

வருண் பேச்சால் வந்தது வினை...

பாஜகவுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வந்த நிலையில் முஸ்லீம்களை கடுமையாக எச்சரித்தும், விமர்சித்தும் வருண் காந்தி பேசியது சூழ்நிலையை பெரிதும் மாற்றி விட்டது.

அவரது துவேஷப் பேச்சு பெரும் பாதகத்தை ஏற்படுத்தியது. கட்சிக்கு அது கெட்ட பெயரையே ஏற்படுத்தியுள்ளது. மேலும் உ.பி. மாநிலத்திற்கு மோடி விஜயம் செய்ததும் முஸ்லீம் வாக்காளர்களை காங்கிரஸ் பக்கம் திரும்பச் செய்து விட்டது.

ஜேட்லி சரியாக செயல்படவில்லை...

கட்சியின் தலைமை பிரசார உத்திக் குழுத் தலைவராக இருந்த அருண் ஜேட்லியின் பிரசார உத்திகள் சரிவர அமையவில்லை. மிக மோசமான பிரசாரத் திட்டங்கள் கட்சியின் கொள்கைகள், லட்சியங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கத் தவறி விட்டன.

உட்கட்சிப் பூசலால் தொண்டர்கள் விரக்தி...

இதை விட முக்கியமான இன்னொரு காரணம், உட்கட்சிப் பூசல். தலைவர்களின் உட்கட்சி மோதலால், தொண்டர்கள் விரக்தி அடைந்து தேர்தலில் ஆர்வமே இல்லாத நிலையில் இருந்தனர். இதனால் பிரசாரம் சரிவர அமையாமல் போய் விட்டது.

கூட்டணிக் கட்சிகள் போனதாலும் இழப்பு..

கடைசி நேரத்தில் பிஜூ ஜனதாதளம் போன்ற சில கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகியதாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மாநிலங்களில் சரியான கூட்டணிகளை அமைக்கத் தவறியதும் தோல்விக்கு ஒரு காரணம்.

ஹரியாணாவில் செளதாலாவுடன் கூட்டணி அமைத்தது, பஞ்சாபில் நமது கூட்டணிக் கட்சியான அகாலி தளம் மமதையுடன் நடந்து கொண்டது ஆகியவை அந்த மாநிலங்கலில் கட்சியின் தோல்விக்கு மிக முக்கிய காரணங்கள்.

டெல்லியில் தேர்தலுக்கு முன்பே பாஜக தோற்றுவிட்டது. அங்கு மல்ஹோத்ராவை முதல்வராக முன் நிறுத்தியதால் தோல்வி ஏற்பட்டது. ஷீலா தீட்சிதுக்கு எந்த வகையிலும் அவர் இணையானவர் அல்ல.

தேர்தலின்போது ஆரம்ப கட்ட பிரசாரத்தில் ஹிந்துத்துவாவை ஆதரித்த தலைவர்கள் வாக்குகளை மனதில் கொண்டு, தீவிரத்தை சற்று குறைத்துக் கொண்டதும் தோல்விக்குக் காரணம்.

வேட்பாளர்கள் தேர்விலும் பல தவறுகள் நடந்துள்ளன. ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பிரபலமான தலைவர்கள் இல்லாததாலும் அங்கெல்லாம் வலிமையான கூட்டணியை அமைக்க தவறியதாலும் பலத்த பின்னடைவு ஏற்பட்டது என்று ஆப்தே அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நேற்று சிம்லா கூட்டத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக ஆப்தேவே தெரிவித்துள்ள போதிலும், அப்படி எந்த அறிக்கையும் தாக்கலாகவில்லை என்று அருண் ஜேட்லி ஒரே போடாக போட்டார்.

ஆப்தேவின் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து ஒரு முக்கியத் தலைவரும் தப்பவில்லை. மேலும், இது அப்படியே ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவாக இருப்பது போல உள்ளதால் கட்சிக்குள் மேலும் பல புயல்கள் வீசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்பதில் பாஜகவில் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்தப் பழியை யார் மீது தூக்கிப் போடலாம் என்று கோஷ்டி பிரிந்து மோதி வருகின்றனர். இந்த சண்டையை மக்கள் மனதிலிருந்து மறைக்கும் வகையில் ஜஸ்வந்த் சிங் நடுவில் இழுக்கப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X