ரஷ்ய காதலியை மணக்கிறார் மார்ட்டினா நவ்ரத்திலோவா!

மார்ட்டினாவுக்கு 52 வயதாகிறது. அவரது காதலியான ஜூலியாவுக்கு 36 வயதாகிறது.
ஜூலியா மாஸ்கோவில் பிறந்தவர். மிஸ் சோவியத் யூனியன் அழகிப் பட்டம் வென்றவர். அவர் தான் கடைசி மிஸ் சோவியத் யூனியன் ஆவார். அதன் பின்னர் நாடு சிதறிப் போய் விட்டது.
ஜூலியாவும், மார்ட்டினாவும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அதுகுறித்து எந்தவிதமான தகவல்களும் இல்லை.
ஆனால் சமீபத்தில் இருவரும் பிரான்ஸின் செயின்ட் டிரோப்ஸ் என்ற இடத்தி்ல் விடுமுறைக்காக ஜோடியாக வந்திருந்தனர். இதன் மூலம் இருவரும் ஓரினக் காதலில் இருப்பது உறுதியானது.
இருவரது இடது கைகளிலும் நிச்சயதார்த்த மோதிரங்கள் பளிச்சிட்டன. இதனால் இருவரும் நிச்சயம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பிரெஞ்ச் ரிவியரா பகுதியில் மார்ட்டினாவும், ஜூலியாவும் படு நெருக்கமாக படகு சவாரி மேற்கொண்டதாகவும், ஷாப்பிங் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான படங்களும் வெளியாகியுள்ளன.
ஜூலியாவின் தந்தை சோவியத் யூனியன் ராணுவத்தில் கர்னலாக இருந்தவர். ஜூலியாவுக்கு ரஷ்யன், ஆங்கிலம், இத்தாலியன், பிரெஞ்சு என பல மொழிகள் தெரியும். மாஸ்கோவில் அழகு சாதனப் பொருட்கள் கடை வைத்துள்ளார். பாரீஸில் ஜோயா ஸ்பா என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
மார்ட்டினா ஓரினக் காதலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல பெண்களுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருந்தது.
விரைவில் ஜூலியாவை பகிரங்கமாக மார்ட்டினா திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
திருமணம் செய்ய வந்த வாலிபர்கள்!
இதற்கிடையே உ.பி. மாநிலம் பாரட் என்ற இடத்தில் கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்காக இரு வாலிபர்கள் மணக்கோலத்தில் வந்தனர். பூசாரி கல்யாணம் செய்து வைக்க மறுத்ததால் அவரை அடிக்கப் பாய்ந்தனர். ஆனால் மக்கள் கூடிவிடவே இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர்.
பாரட் நகரில் உள்ள கோவிலுக்கு இரு இளைஞர்கள் மனக்கோலத்தில் வந்தனர்.
ஜோடியாக கோவிலை மூன்று முறை சுற்றி வந்தனர். பின்னர் பூசாரியை அணுகி, நாங்கள் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம். நீங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் என்று கூறினர்.
அதைக் கேட்ட பூசாரி ஆடிப் போய் விட்டார். இந்து மதத்திற்கு விரோதமானது உங்களது செயல். அதற்கு நான் உடந்தையாக முடியாது. ஆளுக்கு ஒரு பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் இரு வாலிபர்களும் பூசாரியை அடிக்கப் பாய்ந்தனர். இதைப் பார்த்து பக்தர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து இரு வாலிபர்களும் அங்கிருந்து நழுவித் தப்பி விட்டனர்.