For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கு க்ளுக்ஸ் கிளான்' ஆகிவிட்டது பாஜக-ஜஸ்வந்த்!

By Staff
Google Oneindia Tamil News

Jaswant Singh
டெல்லி: அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக செயல்பட்ட கு க்ளுக்ஸ் கிளான்' போல ரகசிய- இனவெறி- தீவிரவாதக் கும்பல் போல பாஜக மாறிவிட்டதாக கடுமையாகத் தாக்கியுள்ளார் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங்.

செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: நீங்கள் ஏன் கட்சியை விட்டு நீக்கப்பட்டீர்கள்?

ஜஸ்வந்த்: அதை என்னிடம் கேட்காதீ்ர்கள். பாஜகவின் சிந்தனையாளர்கள், ஆலோசகர்கள் என்ற பெயரில் நடமாடும் ஒரு மாயாஜால வட்டத்திலிருந்து நான் இப்போது வெளியில் இருக்கிறேன். நான் ஆர்எஸ்எஸ்காரன் இல்லை, அதனால் நீக்கப்பட்டேனா?. இருக்கலாம். பாஜக அரசியல் கட்சியாக செயல்படுகிறதா? அல்லது கு க்ளுக்ஸ் கிளான்' கும்பலின் இந்தியக் கிளையாகிவிட்டதா?.

கேள்வி: 'கு க்ளுக்ஸ் கிளான்' அமைப்போடு பாஜகவை ஒப்பிடுகிறீர்கள்.. இன்னும் அதை விளக்க முடியுமா?.

ஜஸ்வந்த்: அந்த அமைப்பு குறித்து உங்களுக்குத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். மேற்கொண்டு விளக்கம் கேட்காதீர்கள்.

கேள்வி: மக்கள் ஏன் அத்வானியை பிரதமராக ஏற்கவில்லை?

ஜஸ்வந்த்: இது குறித்து அத்வானி தான் யோசிக்க வேண்டும். அவருடன் 30 ஆண்டுகள் உடன் இருந்தவன். அத்வானியை மக்கள் நிராகரித்து விட்டார்களா என்ற கேள்விக்கோ, அவருடைய குணாதிசயம் குறித்தோ, அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்தோ நான் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்து கூறுவது அதிக பிரசங்கிதனமானதாகவே இருக்கும்.

கேள்வி: அத்வானியை சூழ்ந்துள்ள ஒரு சுயநலக் கும்பல் தான் அவரை இயக்கி வருகிறதா?

ஜஸ்வந்த்: சொந்த லாபத்துக்காக செயல்படும் சுயநலக் கும்பல் அவரை இயக்குகிறதா?.. அல்லது அந்தக் கும்பலை அத்வானி இயக்கி வருகிறாரா?

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடனான தனது உறவை பாஜக மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜக என்பது ஒரு அரசியல் கட்சியாக சொந்தக் காலில் தனித்து நி்ற்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். உடனான தொப்புழ் கொடி உறவை அறுத்துக் கொள்ளும் நிலைக்கு பாஜக இந்நேரம் முதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

கேள்வி: பாஜகவை ஆர்.எஸ்.எஸ். தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று அருண் ஷோரி கூறியுள்ளாரே?

ஜஸ்வந்த்: அதில் எனக்கு உடன்பாடில்லை. தேர்தலில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியை உணர்ந்து 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற கட்சியாக பாஜக மாற வேண்டும். ஆர்எஸ்எஸ் என்பது தன் கொள்கைகளை ஏற்காதவர்களை நிராகரிக்கும் ஒரு அமைப்பு. அவர்கள் நிராகரிப்பாளர்கள். மேலும் அவர்கள் ஒரு 'சமூக சேவை' அமைப்பினர். அவர்கள் கட்சியை நடத்த முடியாது.

கேள்வி: உங்களை சடாரென நீக்கியவர்கள் வசுந்தரா, அருண் ஷோரி ஆகியோரிடம் விளக்கம் எல்லாம் கேட்டு காலம் கடத்துகிறார்களே?

ஜஸ்வந்த்: மன்னிக்கவும்.. இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. என்னை சிம்லா கூட்டத்துக்கு வராதீ்ர்கள் என்று சொல்லி நீக்கினர். இப்போது மற்றவர்கள் விஷயத்தி்ல் மாறுபட்ட நிலையை எடுக்கிறார்கள். எப்படியிருந்தாலும்.. வசுந்தராவுக்கு என் வாழ்த்துக்கள்.

கேள்வி: உங்களை கட்சியை விட்டு நீக்கியது அதிருப்தியாளர்களுக்கு எச்சரிக்கையா?

ஜஸ்வந்த்: ஹலோ.. நான் அதிருப்தியாளனா?. யார் சொன்னது. நீங்கள் கேட்பதைப் பார்த்தால் நான் ஏதோ கட்சி விரோதி போல தெரிகிறது. நான் இந்தக் கட்சியை உருவாக்கிய நிறுவனர்களில் ஒருவன். அதை மறந்துவிடாதீர்கள். நான் கேள்வி கேட்டது எதற்காக?. கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வி கேட்பதோ, ஆச்சரியப்படுவதோ, விளக்கம் கேட்பதோ ஒருவனை கட்சி விரோதியாக்கிவிடுமா?. அப்படியானால் யாரும் சிந்திக்கவே கூடாது என்ற நிலையை நோக்கி கட்சி போய்க் கொண்டுள்ளதா?.

கேள்வி: மீண்டும் கட்சியுடன் உங்களுக்கு சமரசம் ஏற்பட வாய்ப்புண்டா?

ஜஸ்வந்த்: சமரசமா?.. எதனுடன் சமரசம்?.. அவமரியாதையுடன் சமரசம் செய்வதா?.

கேள்வி: சமாஜ்வாடி கட்சியில் சேர அழைப்பு வந்துள்ளதே.. சேருவீர்களா?

ஜஸ்வந்த்: நான் சுதந்திரமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். நான் இப்போது ஒரு சுயேச்சை எம்பி. என் தொகுதி டார்ஜிலிங். அந்த மக்களுக்காக உழைப்பேன். கோர்கா ஜன்முக்தி மோச்சா என் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக சொல்லி ஆதரிக்கிறது. நான் அவர்களுடன் இணைந்து மக்களுக்கும் கூர்காலாந்துக்கும் உழைப்பேன். என் ஜென்ம பூமி பாலைவனத்தில் இருந்தாலும் (ராஜஸ்தான்) டார்ஜிலி்ங் தான் என் கர்ம பூமி.

கேள்வி: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவீர்களா?

ஜஸ்வந்த்: வாய்ப்பே இல்லை. இது குறித்து நாடாளுமன்ற செயலாளரிடம் பேசினேன். விலக வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்லிவிட்டார். அது ஒரு 'மினி பார்லிமெண்ட்'. அதில் யார் இருக்கலாம்.. கூடாது என்பதை சபாநாயகர் தான் தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி: இந்தப் பதவியை பாஜக தானே தந்தது?

ஜஸ்வந்த்: பாஜக எனக்குத் தந்தது டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை மட்டும் தான்.

அது என்ன கு க்ளுக்ஸ் கிளான்'?:

அமெரிக்காவில் சம உரிமை கோரி கருப்பின மக்கள் போராட்டத்தில் குதிக்க வெடித்தது உள்நாட்டுக் கலவரம். இதையடுத்து கருப்பின மக்களுக்கு எதிராக 1865ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தான் கு க்ளுக்ஸ் கிளான்' அமைப்பு.

kyklos என்ற கிரேக்கச் சொல்லுடன் கிளான் என்பதைச் சேர்த்து உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. kyklos என்றால் வட்டம் என்று அர்த்தம். கருப்பின மக்களுக்கு எதிராக மிக ரகசியமாக வன்முறைகளை தூண்டிவிட்டு வந்தது இந்த இயக்கம்.

KKK என்று சுருக்கமாய் அழைக்கப்பட்ட இந்த இயக்கம் கருப்பின மக்களுக்கு எதிராக மட்டுமல்ல யூதர்கள், ரோமன் கத்தோலிக்கர்கள், தொழிலாளர் சங்கங்கள், பிற சிறுபான்மையினருக்கும் எதிராக செயல்பட்டு வந்தது.

இந்த அமைப்புடன் தான் இப்போது பாஜகவை ஒப்பிட்டுள்ளார் ஜஸ்வந்த்.

சில நாட்களுக்கு முன் பாஜகவை 'Humpty Dumpty' என்று விமர்சித்தார் அருண் ஷோரி. இப்போது 'கு க்ளுக்ஸ் கிளான்' உடன் ஒப்பிட்டுள்ளார் ஜஸ்வந்த் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X