For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விநாயகர் சிலைகள் கரைப்பு அமைதியாக முடிந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சிவசேனா அமைப்புகளின் சார்பில் நேற்று சென்னை நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

இன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்டவற்றின் சார்பில் சிலைகள் ஊர்வலம் மற்றும் கடலில் கரைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில், முக்கியமான சாலை சந்திப்புகளில், தெருக்களில் சிறியதும், பெரியதுமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சிவசேனா அமைப்புகள் சார்பில் சென்னையில் நேற்று விநாயகர் சிலைகள் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

தமிழ்நாடு சிவசேனா கட்சி சார்பில் வடசென்னையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு நேற்று சிறப்பு பூஜை செய்து மூன்று சக்கர சைக்கிள்கள், வேன்கள், மாட்டு வண்டிகளில் ஏற்றப்பட்டன. பின்னர், விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது.

மின்ட் தெரு, ராயபுரம் பாலம், எம்.எஸ்.கோவில் தெரு, எஸ்.என்.செட்டி தெரு வழியாக ஊர்வலம் காசிமேடு கடற்கரையை சென்றடைந்தது.

அங்கு விநாயகர் சிலைகளுக்கு மேளதாளம் முழங்க, கற்பூரம் காட்டி பூஜை செய்யப்பட்டது. ஊர்வலத்தில் வந்தவர்களும், காசிமேடு கடற்கரையில் சிலை கரைப்பு நிகழ்ச்சியை காண வந்திருந்த மக்களும் விநாயகரை பயபக்தியுடன் வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

பின்னர் சிலைகளை ஒவ்வொன்றாக கிரேன் மூலம் தூக்கி கடலில் இறக்கி கரைத்தனர். சிறிய மற்றும் நடுத்தர உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை கடலுக்குள் கொண்டு சென்று கரைப்பதற்கு வசதியாக கரையில் இருந்து கடலுக்குள் வரை இரும்பு குழாய்களை கொண்டு சாய்தள பாதை அமைக்கப்பட்டிருந்தது.

அதன்வழியாக சிறிய சிலைகள் கடலில் இறக்கப்பட்டு கரைக்கப்பட்டன. சிலைகளை கரைப்பதற்கு போலீஸ் நண்பர்கள் பெரிதும் உதவினார்கள். களிமண்ணில் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான குட்டி விநாயகர் சிலைகள் பெரிய சிலைகளுடன் சேர்த்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அவற்றை சிறுவர், சிறுமிகள் உற்சாகமாக கடலில் தூக்கிப்போட்டு கரைத்தார்கள்.

காசிமேடு கடற்கரையில் நேற்று மாலை 4.15 மணிக்கு 5 அடி, 7 அடி, 10 அடி உயரம் கொண்ட 12-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. அப்போது விநாயகர் சிலைகள் வரிசையாக அணிவகுத்து நின்ற காட்சி பக்தர்களை பெரிதும் பரவசப்படுத்தியது.

நேற்று பிற்பகல் 2 மணி முதல் ஆர்.குமாரராஜா தலைமையிலான சிவசேனா அமைப்பினர் தங்கள் அமைப்பு சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை மின்ட் தெரு, ராயபுரம் பாலம், எம்.எஸ்.கோவில் தெரு, எஸ்.என்.செட்டி தெரு வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து காசிமேடு மீன்படி துறைமுக கடலில் கரைத்தனர்.

விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியையொட்டி அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக ஊர்வல பாதைகளிலும், கடற்கரையிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் சிலைக் கரைப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

சென்னை தியாகராயநகர், கோயம்பேடு, விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, வேப்பேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்பட்டது. இதற்காக கடற்கரையில் 2 ராட்சத கிரேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இன்றும்...

இன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X