For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திரா-58 ரெட்டிகளும், காங். கவலையும்!

By Staff
Google Oneindia Tamil News

Jagan Mohan Reddy
டெல்லி: ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக முதல் முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ள 47 பேரும், ரெட்டி சமுதாயத்தைச் சேர்ந்த 58 பேரும் தீவிரமாக உள்ளதால் ஜெகன் மோகன் ரெட்டி விவகாரம் காங்கிரஸ் தலைமையிடத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர அரசியல் நிலவரம் இன்னும் சில காலத்திற்கு குழப்பமாகவே தொடரும் நிலை காணப்படுகிறது. இப்போதைக்கு தற்காலிக முதல்வர் ரோசய்யாவின் தலைமையில் காங்கிரஸ் செயல்படும் அளவுக்கு காங்கிரஸ் மேலிடம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இருப்பினும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் பதவியில் அமர வைக்கும் வரை ஓயப் போவதில்லை என்று அவரது ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளதால் காங்கிரஸ் தலைமைக்கு தலைவலி எதிர் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் உண்மையான ஆதரவு பலம் என்ன என்பதை ஆராயும் வேலையில் காங்கிரஸ் மேலிடம் இறங்கியுள்ளது.

விரைவில் ஜெகன் மோகனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குழு டெல்லி சென்று கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் முறையிட தயாராகி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தனது ஆதரவாளர்களை அடக்கி வாசிக்குமாறு ஜெகன் மோகன் ரெட்டி பகிரங்கமாக கேட்டுக் கொண்டுள்ளது கட்சித் தலைமைக்கு திருப்தி அளித்துள்ள போதிலும் அவர்கள் இப்போதைக்கு ஓய மாட்டார்கள் என்றே கட்சித் தலைமை கருதுகிறது.

இதனால்தான் ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பரான கேவிபி ராமச்சந்திர ராவை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைத்துள்ளதாம்.

டெல்லிக்கு செல்வதற்கு முன்பு ராவை, ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

இதற்கிடையே கட்சித் தலைமை, ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவு பலம் குறித்து நடத்திய ஆலோசனையில் கிடைத்த தகவல்கள் கட்சித் தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாம்.

அனுபவமின்மையைக் காரணமாக வைத்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் பதவியை இப்போதைக்கு தருவதில்லை என்ற தீர்மானத்தில் கட்சித் தலைமை இருந்தபோதிலும், அந்த முடிவை மாற்றிக் கொள்ளக் கூடிய வகையில் ஜெகன் மோகன் ஆதரவு வட்டாரம் வலுவாக உள்ளதாக கருதப்படுகிறது.

தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல்.ஏக்களில் 47 பேர் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனவர்கள். அதேபோல 58 பேர் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஜெகன் மோகன் ரெட்டிக்குப் பின்னால் ஓரணியில் திரண்டு நிற்கின்றனராம்.

காங்கிரஸ் கட்சிக்கு இப்போது சட்டசபையில் மெஜாரிட்டுக்குத் தேவைப்படும் பலத்தை விட 7 எம்.எல்.ஏக்கள் கூடுதலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஜெகன் மோகன் ரெட்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத இக்கட்டான நிலை காங்கிரஸ் மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் போக ஜெகன் மோகன் ஆதரவு எம்.பிக்களும் கணிசமாக உள்ளனர். இவர்கள் விரைவில் டெல்லிக்குப் படையெடுக்கவுள்ளனர். சோனியா காந்தியை சந்திக்க இவர்கள் நேரம் கேட்டுள்ளனராம்.

ஜெகன் மோகன் ஆதரவு எம்.பிக்களில் ஒருவரும், ராஜசேகர ரெட்டிக்கு நெருக்கமானவர்களில் ஒருவருமான அருண் குமார் சோனியாவை நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். இன்னொரு எம்.பியான கேசவ் குமாரும் சோனியாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஒரு வேளை வேறு யாரையாவது முதல்வர் பதவியில் அமர்த்த காங்கிரஸ் மேலிடம் முயன்றால் அதை நிச்சயம் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் கட்சித் தலைமைக்கு எதிராக அவர் திரும்பவும் தயங்க மாட்டார் என்றும் கட்சித் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.

எனவே அடுத்த முதல்வர் யார் என்பதை நிர்ணயிப்பதில் ஜெகன் மோகன் ரெட்டியின் கருத்து மிக மிக முக்கியமாக மாறியுள்ளதை காங்கிரஸ் மேலிடம் உணர்ந்துள்ளது.

அதேசமயம், உடனடியாக ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் பதவியில் அமர்த்தாமல், அவருக்கு வேறு ஒரு பதவியைக் கொடுத்து பக்குவப்படுத்தித பின்னர் முதல்வர் பதவிக்குக் கொண்டு வரலாம் என காங்கிரஸ் தலைமை யோசிக்கிறதாம். இதை ஜெகன் மோகன் ரெட்டியிடமே தெளிவாக விளக்கி, முதல்வர் பதவியை இப்போது ஏற்பதை விட சில காலத்திற்குப் பின்னர் அதில் அமர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என அறிவுரை கூறவும் திட்டமிட்டு வருகிறார்களாம்.

ராஜசேகர ரெட்டியின் மறைவால் தெலுங்கு தேசம் கட்சிக்கு தற்போது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. எனவே சற்று அஜாக்கிரதையாக இருந்தால் கூட அது சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக மாறி விடும் என்பதால் காங்கிரஸ் மேலிடம் மிக கவனமாக காய்களை நகர்த்த வேண்டிய நிலை.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரியான தீர்வைச் சொல்லி கட்சித் தலைமைக்கு கை கொடுக்கும் பிரணாப் முகர்ஜியிடமே ஆந்திர நிலவரத்திற்கும் தீர்வை எதிர்நோக்கியுள்ளாராம் சோனியா காந்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X