'விமானிகளா இவர்கள்...? பயங்கரவாதிகள்!'- நரேஷ் கோயல்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 170 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தவிப்புக்குள்ளாகியுள்ளனராம். ஆனால் விமானிகள் இன்னும் போராட்டத்தைத் தொடர்வது குறித்து நரேஷ் கோயல் கூறியதாவது:
விமானிகளா இவர்கள்... பயங்கரவாதிகளைப் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களால் இந்த நாட்டை, பயணிகளை, விமான நிறுவனத்தை பிணைக் கைதிகளாக வைக்க முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இவர்கள் செய்வது ஸ்ட்ரைக் குறித்த மும்பை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.
அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறேன். ஆனால் அவர்கள் பிளாக்மெயில் செய்வதைப் போல நடந்து கொள்கிறார்கள். இவர்களால் இன்று 30000க்கும் மேற்பட்ட ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் நிலை கேள்விக்குரியதாகிவிட்டது.
இங்கு வேலை பார்ப்பவர்கள் பாதுகாப்பு மற்றும் சேவை தான் நிறுவனத்தின் தாரக மந்திரம் என்பதை மறந்துவிட்டனர்.
இழுத்து மூட தயங்கமாட்டேன்...
இந்த போராட்டம் சட்ட விரோதமானது. நீதிமன்ற அவமதிப்பானது. இது தொடர்ந்தால் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். தேவை ஏற்பட்டால் நிறுவனத்தை மூடவும் தயங்கமாட்டேன்.
இவர்களால் நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்காக சுமார் 14 ஆயிரம் உள்நாட்டு விமான டிக்கெட்களும், 9 ஆயிரத்து 500 வெளிநாட்டு டிக்கெட்களும் வாங்கியுள்ளோம்
இந்த வேலைநிறுத்தத்தை அனுமதிக்க முடியாது. இன்று கிட்டத்தட்ட அனைத்து விமானங்களையுமே நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டார்கள் இந்த விமானிகள்...", என்றார் கோயல்.
இந்நிலையில், நரேஷ் கோயலைச் சந்தித்துப் பேசவே தாமும் விரும்புவதாக, இந்தப் போராட்டத்தைப் பின்னின்று நடத்தும் விமானிகள் கில்டின் தலைவர் கிரிஷ் கௌசிக் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த விமானியின் நீக்கத்தையும் அனுமதிக்க முடியாது என்றும், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் பேசுவதற்கு முன், ஜெட் நிர்வாகத்துடன் பேசி சுமுகமாக முடிக்கவே விரும்புவதாகவும் அவர் கூறினார்.