அக். 25 முதல் சென்னை-சேலம் விமான சேவை
சேலம்: வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் சென்னையிலிருந்து சேலத்துக்கு புதிய விமான சேவை துவக்கப்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய விமான ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சேலம் விமான நிலையத்தில் 100 பயணிகளை கையாளும் திறன் உள்ளது. ஓடுதளமும் 6,035 அடி உள்ளது. தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையை வைத்து இங்கிருந்து ஏடிஆர் வகை விமானங்களை இயக்க முடியும்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி சென்னையில் இருந்து சேலத்துக்கு புதிய விமான சேவையை துவக்க இந்திய உள்நாட்டு விமான பொது இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த மாதம் 25ம் தேதி முதல் இது துவக்கப்படும்.
இந்த சேவையின் மூலம் சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். மாதம்தோறும் சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிங்பிஷ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த சேவையை தருகிறது. சென்னையில் இருந்து 25ம் தேதி மதியம் சுமார் 2.50 மணிக்கு முதல் விமானம் கிளம்பும். இது சுமார் ஒரு மணி நேரத்தில் சேலம் வந்துவிடும். பின்னர் மாலை 4.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு மாலை 5.20க்கு வரும்.
தற்போது சேலம் விமான நிலையத்தில் இரண்டு போலீஸார் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகி்ன்றனர். விமான சேவை துவங்கியவுடன் இந்த எண்ணிக்கை 36 ஆக அதிகரிக்கப்படும் என்றார்.
இந்த அறிவிப்பை அடுத்து சென்னை செல்ல திருச்சி அல்லது கோயம்புத்தூர் விமான நிலையத்துக்கு சென்று வந்த சேலம் தொழிலதிபர்களின் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.