For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெவுக்கு விசுவாசம்...அதுவே எங்கள் சுவாசம்: அதிமுக எம்எல்ஏக்கள்

By Staff
Google Oneindia Tamil News

ADMK MLAs
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி கூண்டோடு திமுகவுக்கு தாவ இருப்பதாக காவல்துறை மூலம் வதந்தி பரப்பி வருவதாகக் கூறி அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் மொத்தமுள்ள 57 அதிமுக எம்எல்ஏக்களில 54 பேர் கலந்து கொண்டனர்.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்தப் ஆர்ப்பாட்டத்தில் 54 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொடநாட்டில் இருப்பதாலும், எம்எல்ஏ பதர் சயீதின் உறவினர் மரணமடைந்ததாலும், உடுமலைப்பேட்டை எம்எல் சண்முகவேலு விபத்தில் சிக்கியதாலும் இதில் பங்கேற்றவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் பன்னீர்செல்வம் பேசுகையில்,

கருணாநிதி என்னும் தீயசக்தியை அரசியலில் இருந்து விரட்டுவதற்காகத்தான் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சியை அகற்றி 13 ஆண்டுகள் அவர் தலையெடுக்க முடியாமல் செய்து எம்ஜிஆர் நல்லாட்சி நடத்தினார்.

எம்ஜிஆரின் வழியில் அவர் தொடங்கிய கட்சியை கட்டிக்காத்து வரும் புரட்சித் தலைவி, 10 ஆண்டுகள் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்கினார்.

எம்ஜிஆர் இறந்த பிறகு இந்த இயக்கத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று கருணாநிதி நினைத்த நேரத்தில் 'அம்மா' தான் கட்சியை காப்பாற்ற நானிருக்கிறேன் என்று கூறி கடுமையாக உழைத்து எந்த கொம்பனாலும் இதை அழிக்க முடியாது என்னும் வகையில், ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட வலிமையான இயக்கமாக இதை வளர்த்து வருகிறார்.

இந்தக் கட்சியில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமைக்குரிய ஒன்றாகும்.

புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் காவல்துறையை சட்டம் ஒழுங்கைக் காக்கவும், மக்களை பாதுகாக்கவும் பயன்படுத்தினர்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். இன்றைக்கு சட்டம்-ஒழுங்கு நிலைமையை தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் திமுகவினரும் காவல்துறையை தங்கள் ஏவல் துறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் ஆகியவை அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.

ஒரு தேர்தலை கூட திமுக அமைதியான முறையில் நடத்தவில்லை. வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேர்தலை நடத்துகிறார்கள். இதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

கருணாநிதியின் இப்போதைய ஒரே வேலை அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒழிக்க நினைப்பது என்பதுதான்.

விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டுக்குள் இல்லை. அதை கண்டு கொள்வதும் இல்லை. இந்த இயக்கத்தில் இருந்து எம்எல்ஏக்கள் சிலர் கட்சி மாறும் சூழ்நிலையை உருவாக்கினார்கள். மாறிச் சென்றவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியும்.

ஆனால், அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் கொள்கைபிடிப்புடன் கட்சி மீதும், தலைமை மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு உறுதியோடு இருக்கிறார்கள். இத்தகைய தொண்டர்கள் இருக்கிற இயக்கத்தை ஒரு கருணாநிதி அல்ல எத்தனை கருணாநிதிகள் வந்தாலும் அழிக்க முடியாது.

காவல்துறையை தங்கள் ஏவல் துறையாக மாற்றி அதிமுக குறித்து வதந்திகளை பரப்புவதை திமுக உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அதிமுகவும் அவர்களுக்கு தக்கவிதத்தில் பாடம் கற்பிப்பார்கள் என்றார்.

விசுவாசம்...அதுவே எங்கள் சுவாசம்:

வடசென்னை மாவட்டச் செயலாளர் சேகர்பாபு பேசுகையில்,

பொய் செய்திகளை பரப்பி அதிமுகவை வீழ்த்த துடிக்கிறார்கள். எந்த தொண்டனையும் இந்த இயக்கத்தில் இருந்து பிரிக்க முடியாது. ஜெயலலிதாவை நேரில் பார்த்திராத நாகப்பட்டினம் ராசு என்ற தொண்டர் நாக்கையே வெட்டி காணியாக்கினார். இப்படி லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு பிடித்தது விசுவாசம். அதுவே எங்கள் சுவாசம். பொருளாசை காட்டி, வழக்குகளை காட்டி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாது. என்றார்

அதிமுகவினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் கடற்கரை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X