For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களை சந்திக்க தயாராகுங்கள்-கொடநாட்டிலிருந்து ஜெ.!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக மலர நாம் அனைவரும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அண்ணாவின் பெயரைக் கொண்ட அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அண்ணா பிறந்த நாள் தொடர்பாக வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

கொடநாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்தபடி அங்கு அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அண்ணா பிறந்த நாள் மலரை ஜெயலலிதா வெளியிட அதை முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக் கொண்டார்.

இந் நிலையி்ல் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற அனைத்துத் தமிழர்களின் இதயங்களில் குடிகொண்டு இருக்கும் தமிழ்த்தாயின் தலைமகன், தமிழினத்தின் தனித்தலைவர், அமைதியின் உருவம், அறிவுக் களஞ்சியம், தெள்ளு தமிழ்ப்பேச்சால் மக்கள் நெஞ்சைக் கொள்ளை கொண்ட தமிழ்ச்சொல்லாளர்,

வலிமை மிக்க எழுத்தாளர், நேர்மையான நிர்வாகி, மனித நேயப்பண்பாளர், மக்கள் சிந்தனையாளர், தன்னலமற்ற தலைவர், கண்ணியமிக்க அரசியல் தலைவர், தமிழ்கூறும் நல்லுலகம் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 101வது பிறந்த நாள் இன்று!.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற ஒரே சிந்தனை யோடு, தமிழ் நாட்டிற்காக, தமிழர்களின் நலன்களுக்காக, தமிழர்களின் உரிமைகளுக்காக அயராது பாடுபட்ட அற்புதத்தலைவர் பேரறிஞர் அண்ணா. பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டும்; வாழ்ந்தால் தமிழனாக வாழ வேண்டும் என்ற உத்வேகத்தை தமிழக மக்களிடையே ஊட்டிய உத்தமத்தலைவர் பேரறிஞர் அண்ணா.

'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு", 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு", 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" போன்ற அண்ணாவின் அமுத மொழிகள் என்றென்றும் சாகாவரம் பெற்று நின்று நிலைக்கத்தக்கவை.

தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கினாலும், தன் தலைவனுக்காக தலைவர் பதவி காலியாக இருக்கும் என அறிவித்து, அவ்வழியே நடந்து காட்டியவர் பேரறிஞர் அண்ணா. தன் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருந்த போதே, தனக்கு அடுத்து இருந்தவரை கட்சியின் பொதுச் செயலாளராக்கி 'தம்பி வா, தலைமை ஏற்க வா" என விளித்த முதல் அரசியல்வாதி பேரறிஞர் அண்ணா.

அரசியலோடு நாகரீகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கூறுவார்.

இப்படிப்பட்ட பல சிறப்புகள் வாய்ந்த பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த குறுகிய காலத்தில், பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். அவற்றுள் நமது மாநிலத்திற்கு “தமிழ்நாடு" என பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணச் சட்டம், முதன் முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம், புன்செய் நிலங்களுக்கு வரி தள்ளுபடி, இருமொழித் திட்டம், உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது போன்றவை முத்திரை பதித்த சாதனைகள்!.

அண்ணாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், தமிழரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், தமிழர்களும், தமிழகமும் எழுச்சி பெறும் வகையில், புரட்சித் தலைவரின் நல்லாட்சி தமிழகத்தில் மீண்டும் மலர நாம் அனைவரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 101-வது பிறந்த நாளில் உறுதி ஏற்போம்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்க, தமிழகம் அமைதிப் பூங்காவாக தழைத் தோங்க, மக்கள் அனைவரும் நிம்மதியாக வாழ, அனைவரும் பாடுபட வேண்டும் என்று எனது அன்பு உடன்பிறப்புகளை கேட்டுக் கொள்கிறேன்.

நம்மை எதிர்த்துவரும் தடைகளை தகர்த்தெறிவோம்!
சோதனைகள் புதிதல்ல, அவற்றை சாதனைகளாக மாற்றிக் காட்டுவோம்!
பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை நிலை நிறுத்துவோம்!
எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்!
மக்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்! நாளைய தமிழகம் நமது கையில்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மதுசூதனன் மாலை..

இந் நிலையில் அதிமுக சார்பில் அக் கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுகவினர் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X