சொத்து குவிப்பு-கோர்ட்டில் மனைவியுடன் ஓபி ஆஜர்
தேனி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தேனி நீதிமன்றத்தில் தனது மனைவி, சகோதரருடன் ஆஜரானார் மாஜி மந்திரி ஓ.பன்னீர் செல்வம்.
பெரியகுளத்தில் சாதாரண டீ- பன் கடை நடத்தி வந்தவர் ஓ.பி. இவர் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரான பின் சொத்துக்கள் தானாகவே குவிந்துவிட்டன.
இதையடுத்து இவர் மீதும் இவரது குடும்பத்தினர் 6 பேர் மீதும் 2006ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த ஜூலை 30ம் தேதி இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 25ம்ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஓ.பி ஆஜரானார்.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட் கிருஷ்ணவள்ளி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஓ.பி, அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் பாலமுருகன் ஆகியோர் ஆஜராயினர்.
ஆனால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 4 பேரும் உடல்நிலை சரியில்லை என்று கூறி ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கு நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கொள்ளை.. 'மாஜி' சத்தியமூர்த்திக்கு முன் ஜாமீன்:
இதற்கிடையே ரூ.4 லட்சம் கொள்ளை வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் சத்தியமூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரான சுப்பிரமணியன் மற்றும் சிலர் கடந்த மே மாதம் காரில் சாயல்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
மலட்டாறு விலக்கு அருகே ஒரு கும்பல் அவர்களை வழிமறித்துத் தாக்கி சுப்பிரமணியத்திடம் இருந்த ரூ.4.3 லட்சத்தையும் அவர் அணிந்திருந்த 23 பவன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு ஓடியது.
இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், அதிமுகவை சேர்ந்த மாஜி மநதிரி சத்தியமூர்த்தி, அவரது சகோதரர்கள் மயில்வாகனன், விவேகானந்தன் உள்பட 31 பேர் மீது சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்னர்.
இதில் விவேகானந்தன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மயில்வாகனனை சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து தானும் கைதாவது உறுதி என்பதை உணர்ந்து மாஜி மந்திரி சத்தியமூர்த்தி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி ராஜ இளங்கோ, சத்தியமூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.