For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஷ்ரத் வழக்கில் புதிய மனு - மத்திய அரசுக்கு குஜராத் கண்டனம்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: இஷ்ரத் ஜெஹான் போலி என்கவுண்டர் வழக்கில், மத்திய அரசு கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதற்கு குஜராத் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு மத்திய அரசு நாடகமாடுகிறது, இரட்டை வேடம் போடுகிறது என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயநாராயன் வியாஸ் கூறுகையில், மத்திய உளவு ஏஜென்சிகளின் வேலை தகவல்களைக் கொடுப்பது மட்டுமே. மாநிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பான பணிகளை மாநில அரசுகளே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பலமுறை கூறியுள்ளது.

ஆனால் தற்போது இதற்கு நேர் மாறாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடந்து கொண்டுள்ளது. முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் திட்டத்துடன் வந்த இஷ்ரத் ஜெஹான் உள்ளிட்ட நான்கு பேரும் உயிருடன் பிடிபட்டிருந்தால் அவர்களின் சதித் திட்டத்தை அறிந்து கொண்டிருக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான்கு பேரையும் கைது செய்ய போலீஸார் முயன்றபோது அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் போலீஸார் திருப்பிச் சுட்டதில் நான்கு பேரும் உயிரிழந்து விட்டனர்.

இதுதொடர்பான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளி வரும் வரை கூட காத்திருக்கப் பொறுக்க முடியாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மீடியாக்கள் மூலம் இந்தப் பிரச்சினையை திசை திருப்ப அவசரப்படுகிறது.

இது போலி என்கவுண்டரா, இல்லையா என்பதை முடிவு செய்ய விசாரணைக் குழுவை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. அதன் முடிவு தெரியும் வரை பொறுத்திருக்க முடியாதா மத்திய அரசால்?.

இதன் மூலம் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாயம் வெளுத்து விட்டது. ஆனால் குஜராத் மக்கள் தவறான பிரசாரத்திற்கு அடிபணிய மாட்டார்கள், நம்ப மாட்டார்கள் என்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணர மறந்து விட்டது என்றார்.

முன்னதாக நேற்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், குஜராத் மாநில போலீஸாரின் நடவடிக்கையை மத்திய அரசு ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை. இந்த வழக்கு தொடர்பாத சுயேச்சையான விசாரணைக்கு மத்திய அரசு எப்போதும் தயாராகவே உள்ளது.

குஜராத் போலீஸார் எடுத்த நடவடிக்கை குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. மேலும், அதுதொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளவை, குஜராத் அரசின் காவல்துறைக்கு ஆதரவு தெரிவித்தோ அல்லது அவர்களது செயலை நியாயப்படுத்தியோ தெரிவிக்கப்படவில்லை.

மத்திய அரசுக்குக் கிடைத்த, குஜராத் மாநில அரசுக்குத் தெரிவிக்கப்பட்ட உளவுத்துறை தகவல்களை அந்த மாநில அரசு எப்படிக் கையாண்டது என்பது பற்றி மட்டுமே மத்திய அரசு அக்கறை காட்டுகிறது, கவலைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X