For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர முகாமில் ஆபரேஷன் செய்தவர்களுக்கு கண் பார்வை போனது ஏன்?

Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திராவில் நடந்த கண் சிகிச்சை முகாமின்போது காடராக்ட் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பலருக்கு பார்வை பறிபோனதற்கு டாக்டர்களை குறை சொல்ல முடியாது. பொதுவாக கண் அறுவை சிகிச்சையின்போது நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதே இந்த சிக்கலுக்குக் காரணம் என்று பிரபல சங்கர நேத்ராலயா மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த கண் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களில் பலர் சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

12 பேர் இங்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் 4 பேருக்கு உயிரைக் காப்பாற்றுவதற்காக ஒரு கண் எடுக்கப்பட்டுள்ளது. மற்ற 8 பேருக்கும் கூட அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை கவுரவ தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இந்த மாதம் 19 மற்றும் 20 தேதிகளில் ஆந்திரா மாநிலம், நெல்லூரில் உள்ள பொலினி கண் மருத்துவமனையில் 63 பேர் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு இவர்களில் 15 பேர் அதே மருத்துவமனைக்கு போய் அறுவை சிகிச்சை செய்த கண் சிகப்பு நிறத்தில் இருப்பதுடன், வலி அதிகமாக இருப்பதாகவும், பார்வை மங்கலாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

உடனே அங்குள்ள டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அந்த 15 பேருக்கும் கண்களில் கிருமித் தொற்று இருப்பது தெரியவந்தது. அதற்கு தேவையான சிகிச்சையை முறையாக அளித்தனர்.

அதன்பிறகும் 12 (நான்கு பெண்கள், ஆறு ஆண்கள்) பேருக்கு கிருமித் தொற்று குணமாகவில்லை. அவர்களுக்கு கிருமித் தொற்று கடுமையானதால் அதனைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துவதற்காக சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னைக்கு அவர்கள் வந்ததும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தோம். அதில் 4 பேருக்கு கிருமித் தொற்று அதிகமாகி அறுவை சிகிச்சை செய்த ஒரு கண்ணை எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

அதுபற்றி அந்த நோயாளிகளிடம் கூறுகையில், அறுவை சிகிச்சை செய்து கொண்ட கண்ணில் உள்ள கிருமித் தொற்று உடலில் உள்ள மற்ற உறுப்புகளுக்கும் குறிப்பாக மூளைக்கு பரவினால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே, உடனே அந்த கண்ணை மட்டும் அகற்ற வேண்டும் என்று கூறினோம்.

இதைத் தொடர்ந்து நோயாளிகளின் அனுமதியுடன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட கண்கள் மட்டும் அகற்றப்பட்டன. அவர்களுக்கு மற்றொரு கண்ணில் பார்வை நன்றாக உள்ளது. அதனால் அவர்களை பார்வையற்றவர்கள் என்று சொல்ல முடியாது.

மீதமுள்ள 8 பேருக்கும் கிருமித் தொற்றை குறைத்து கண் பார்வை தெரிவதற்கான அறுவை சிகிச்சை செய்து உள்ளோம். அனைவருக்கும் பார்வை வந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அதுபற்றி 20 நாட்கள் கழித்த பிறகே தெரியவரும். 12 நோயாளிகளில் 9 பேருக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளோம்.

நெல்லூரில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிலருக்கு ஒருகண் பார்வை இழப்பு ஏற்பட்டதற்கு அறுவை சிகிச்சையோ, கண்ணில் போடப்பட்ட மருந்தோ, சிகிச்சை அளித்த டாக்டர்களின் கவனக்குறைவோ காரணம் என்று கூற முடியாது. கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட மற்றவர்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படவில்லை.

எனவே, அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுகாதாரமற்ற சூழலில் இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆந்திரா சம்பவத்தில் என்ன காரணத்தால் கிருமித் தொற்று அதிகரித்தது என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் ஒரு விபத்துதான். எந்த கண் மருத்துவமனையிலும் இதுபோன்ற கிருமித் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எங்களது மருத்துவமனையில்கூட அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 20 ஆயிரம் பேரில் 2 பேருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநில சம்பவத்தால் எதிர்காலத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பவர்கள் எந்த பயமும் கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாட்டில் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட கண் மருத்துவமனைகள் மட்டுமே கண் சிகிச்சை முகாம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்றார் பத்ரிநாத்.

இதற்கிடையே, இந்த முகாமில் சிகிச்சை மேற்கொண்டு கண்கள் முழுவதுமாக சேதமடைந்தவர்களுக்கு அவை அகற்றப்படவுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X