For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் அகதிகள் முகாம்களில் சபாநாயகர், அமைச்சர்கள் ஆய்வு

Google Oneindia Tamil News

நெல்லை: தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் அமைச்சர்கள், சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி ஆய்வு நடத்தினர்.

முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் மேம்பாட்டுக்காக உடனடியாக ரூ.12 கோடி செலவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், அமைச்சர்கள் தங்கள் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டு வருகிற 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் உள்பட 115 அகதிகள் முகாம்கள் உள்ளன. 19 ஆயிரத்து 340 குடும்பங்களை சேர்ந்த 73 ஆயிரத்து 241 பேர் உள்ளனர். அரசு அனுமதியுடன் முகாமுக்கு வெளியே 11 ஆயிரத்து 288 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 802 பேர் தங்கியுள்ளனர்.

இந்த முகாம்களில் முகாமில் அமைச்சர்களும், அதிகாரிகளும் நேற்று முதல் தங்களது ஆய்வைத் தொடங்கினர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 அகதிகள் முகாம்களில் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். குடிநீர் வசதி மற்றும் சாலை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

நெல்லை மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம், நாராணம்மாள்புரம், கங்கைகொண்டான், சங்கரன்கோவில், ஆத்தியடி பிள்ளையார் கோவில் தெரு, ஒழுங்கு முறை விற்பனை கூடம், போகநல்லூர், பாவூர்சத்திரம், ஆலடியூர், கோபாலசமுத்திரம், சமூகரங்கபுரம், ஆகிய அகதிகள் முகாம்களில் 883 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 973 பேர் வசிக்கின்றனர்.

இந்த முகாம்களில் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, கலக்டர் ஜெயராமன், மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பெருமாள்புரம் அகதிகள் முகாமுக்கு சென்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முகாமில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டனர்.

அவர்களிடம், முகாம் தலைவர் சந்திரகுமாரி, கருணாகரன் ஆகியோர் கூறுகையில், பெருமாள்புரம் முகாமில் இரண்டு குடிநீர் பைப்புகள் இருந்தும் ஒரு பைப்பில் மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் குடிநீரின்றி மக்கள் தவிக்கின்றனர்.

மழை பெய்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது. ஆண்களுக்கு கழிப்பறை வசதி, குளியலறை வசதி இல்லை. விளையாட்டு உபகரணங்கள் இருந்தும் விளையாட்டு மைதானத்தில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனால் விளையாட முடியாத சூழ்நிலை உள்ளது.

மேலும் அரசின் திட்டங்களான இலவச காஸ் அடுப்பு மற்றும் கலர் டிவி வழங்கப்பட வேண்டும் என கோரினர். முகாம்களில் உள்ள சிலர் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க முடியவில்லை, வங்கி கணக்கு தொடங்க முடியவில்லை என்று புகார் கூறினார்.

இதற்கு சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள், கலெக்டர் ஆகியோர் கூடுதலாக குடிநீர் வசதிகள் செய்து தருவதாகவும், கழிப்பறை, குளியலறை வசதிகள் செய்து தருவதாகவும் உறுதி அளித்தனர்.

இதேபோல தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதுதொடர்பான அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்படும்.

புழல் முகாமில் ஸ்டாலின் ஆய்வு...

திருவள்ளூர் மாவட்டம் புழலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 433 குடும்பங்களை சேர்ந்த 1,119 ஆண்கள் மற்றும் பெண்கள், 329 சிறுவர்கள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் மற்றும் கழிப்பிட வசதியுடன் மாதாந்திர சம்பளம், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

புழல் அகதிகள் முகாமிற்கு நேற்று மாலை சுமார் 4.45 மணிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். முகாம்களில் உள்ள வீடுகளுக்கு சென்று அகதிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அங்குள்ள நூலகத்தையும் ஆய்வு செய்தார்.

அகதிகள் தங்களுக்கு வீடுகள் கட்டித்தரவும், குடிநீர் வசதி செய்து தரவும், கழிப்பிட வசதி செய்து தரவும் கோரிக்கைகளை வைத்தனர். மேலும் குழந்தைகள் படிப்பதற்கு தனியாக பள்ளிக்கூடம் அமைக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் இங்கேயே பெற வசதி செய்ய வேண்டும். முகாமிலேயே தனியாக ரேஷன் கடை அமைத்து ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

முகாமில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால் சொந்த நாட்டுக்கு செல்லாமல் இங்கேயே நிரந்தரமாக வாழ்வோம் என்றும் ஸ்டாலினிடம் இலங்கை அகதிகள் தெரிவித்தனர். அவர்கள் கோரிய அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 115 முகாம்களில் 73,401 அகதிகள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு அரசின் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மாதந்தோறும் பணக்கொடையும், உணவுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன. அகதிகளின் அடிப்படை வசதிகளுக்காக மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு ரூ.16 கோடியே 18 லட்சத்திற்கு மதிப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது.

முகாம்களில் உள்ள அகதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில், அரசின் சார்பில் உடனடியாக ரூ.12 கோடி செலவிடுவது என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து முகாம்களையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து கொடுத்த பின், முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இங்கு உள்ள முகாமில், இருப்பிடங்களை கட்டிடங்களாக பெரிதுபடுத்த வேண்டும். பிறப்பு சான்று, ரேஷன் பொருட்கள், லைசென்ஸ் வேலை வாய்ப்புகள், கழிப்பிட வசதிகள் போன்றவற்றை செய்து தர வேண்டுமென கோரிக்கை வைத்து உள்ளனர். இவைகள் அனைத்தும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஸ்டாலினுடன், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமார், திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. இ.ஏ.பி.சிவாஜி மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சென்று இருந்தனர்.

செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் செங்கல்பட்டு தாசில்தார் கிளாரன்ஸ், செங்கல்பட்டு உதவி போலீஸ் சூப்பிரண்டு சேவியர் தன்ராஜ், ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம் உள்பட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

முகாமில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், சரியாக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என்றும் அகதிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலை பகுதியில் உள்ள அகதிகள் முகாமுக்கு அமைச்சர் எ.வ.வேலு சென்று அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அவருடன் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர் மு.ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் சென்று இருந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செந்தூரப்பட்டி, நாகியம்பட்டி மற்றும் தம்மம்பட்டி முகாம்களுக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

நாகியம்பட்டி முகாம்களில் இருப்பவர்களில் 37 குடும்பத்தினர் தாங்கள் சொந்த நாடான இலங்கைக்கு செல்ல விரும்புவதாகவும், எனவே அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அங்கு வசிக்கும் கிருஷ்ணகுமார் என்ற அகதி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு, குல்லூர் சந்தை, ஆனைக்குட்டம், ஆனுப்பன்குளம், செவலூர், கண்டியாபுரம், மொட்டமலை ஆகிய இடங்களில் உள்ள முகாம்களை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு அகதிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.

சிவகங்கை மாவட்டம் மூங்கில் ஊரணி, தாயமங்கலம், தேவகோட்டை புதூர், அக்ரகாரம், நாட்டரசன் கோட்டை, ஒக்கூர், எஸ்.காரையூர் ஆகிய ஊர்களில் உள்ள முகாம்களை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை அமைச்சர் கீதா ஜீவன் பார்வையிட்டு அகதிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு அகதிகளிடம் குறைகளை கேட்ட அமைச்சர் பொன்முடி, அங்குள்ள அகதிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர முதல்வரிடம் வலியுறுத்த போவதாக கூறினார்.

திருச்சி கொட்டப்பட்டு மற்றும் வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு சென்று ஆய்வு செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X