For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாழ்வு தேடி சென்றிருக்கிறார் திருநாவுக்கரசர்-பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் பதவி சுகங்களை அனுபவித்து விட்டு, இப்போது இங்கு இருப்பதை விட காங்கிரசில் இருந்தால் வாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றிருக்கிறார் திருநாவுக்கரசர் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

அவர் அளித்துள்ள பேட்டியில்,

7 ஆண்டுகளாக திருநாவுக்கரசர் எங்களுடன் பணியாற்றினார். கட்சியில் அதிகபட்சமான மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது. கட்சியில் இணைந்தவுடன் அவருக்கு அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு அளிக்கப்பட்டது. 30 ஆண்டுகளாக கட்சிக்காக உழைக்கும் எங்களுக்குக் கூட அந்த வாய்ப்பு கிடைத்ததில்லை.

கட்சியில் இணைந்த சில மாதங்களில் அவர் மத்திய கப்பல்துறை இணையமைச்சராக்கப்பட்டார். 2004ம் ஆண்டு தேர்தலில் சில சூழ்நிலைகளால் (திருநாவுக்கரசருக்கு சீட் தரக் கூடாது என்று பாஜகவுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டதால்) அவர் தேர்தலில் போட்டியிட இயலாமல் போனது.

அப்போது அவரையும் ஒரு பெரிய தலைவராக மதித்து அவரது மனம் புண்பட கூடாது என்பதற்காக மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பி. ஆக்கப்பட்டார்.

அதன் பிறகு அவர் பாஜக அகில இந்தியச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மிகவும் சகஜம். வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வந்த காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகள்கூட மிகப்பெரிய சரிவுகளை சந்தித்துள்ளன.

கடந்த தேர்தலில் ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்டு காங்கிரஸ் பதவிக்கு வரும் சூழ்நிலை உருவானதும் பாஜகவில் இல்லை என்பது போல் தன்னை காட்டிக் கொண்டார். 1.3 லட்சம் பேர் அவருக்கு வாக்களித்தனர். அவர்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. அவரது வெற்றிக்காக உழைத்த தொண்டர்களை சந்திக்கவில்லை.

பாஜக மதவாதக் கட்சி, ஆர்.எஸ்.எஸ். தலையீடு உள்ளது. சிறுபான்மையினருக்கு உதவ முடியவில்லை என்று வார்த்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார். வார்த்தைகளை வெளியிடுவதற்கு முன்பு தன் மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும். வாழ்வு தந்த கட்சியை வசை பாடலாமா?.

பாஜக ஆட்சியில் இருந்தபோது கட்சிக்கு வந்தார். அப்போது மதவாத கட்சி என்று அவருக்கு தெரியவில்லையா?. ஆர்.எஸ்.எஸ்சின் நிகழ்ச்சிகளில் கலந்து பெருமை தேடி கொண்டார். அதே போல் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சிகளிலும் கலந்து பெருமை பெற்றார்.

இப்போது இங்கு இருப்பதை விட காங்கிரசில் இருந்தால் வாழ்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் சென்றிருக்கிறார். பதவி சுகங்களை அனுபவித்து விட்டு தோல்விக்காக கட்சி மாறுவது சரியான அணுகுமுறையா?.

குஜராத் கலவரத்தை கண்டித்ததாக கூறும் திருநாவுக்கரசர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்றது ஏன்?. நரேந்திர மோடி சுற்றுப்பயணம் வரும்போதெல்லாம் அவருடன் சுற்றி கைகுலுக்கி கொண்டது ஏன்?.

அவர் சென்று விட்டதால் பாஜக இல்லாதது போல பேசுகிறார். கறவை வற்றிய மாட்டை கைகழுவும் விவசாயிபோல் திருநாவுக்கரசரும் கறவை வற்றிய மாடாக பாஜகவை நினைத்திருக்கலாம். மீண்டும் பாஜக மீண்டும் எழும். அப்போது மீண்டும் வரலாமா என்று யோசிப்பார் என்றார் ராதாகிருஷ்ணன்.

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திருநாவுக்கரசர்:

இந் நிலையில் டெல்லியில் பேட்டியளித்த திருநாவுக்கரசர்,
பாஜக அடிப்படை உறுப்பினர், அகில இந்தியச் செயலாளர் ஆகியவற்றில் இருந்து ராஜிநாமா செய்துள்ளேன். ராஜிநாமா கடிதத்தை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பிவிட்டேன்.

அதே போல ராஜ்யசபா எம்பி பதவியையும் ராஜிநாமா செய்து ராஜிநாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரிக்கு அனுப்பிவிட்டேன்.

காங்கிரஸில் இணையும் விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளேன். டிசம்பர் முதல்வாரத்தில் திருச்சியில் இணைப்பு விழா நடைபெறும். அதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள். என்னுடன் ஆயிரக்கணக்கானோர் காங்கிரஸில் இணைவர் என்றார்.

ஆதரவாளர்கள் திமுகவில் இணைய திட்டம்?:

ஆனால், திருநாவுக்கரசர் காங்கிரசில் இணைந்ததை அவரது ஆதரவாளர்களில் பலர் விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர்களில் ஒரு பகுதியினர் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரசுக்கு வரும் எச்.வி. ஹண்டே:

அதே போல எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் முக்கிய பிரபலமாக இருந்து பின்னர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் கட்சியைவிட்டு விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டேயும் காங்கிரஸில் இணைய இருப்பதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X