For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா ஆக்கிரமித்த நிலத்தை மீட்க கம்யூனிஸ்டுகளுக்கு தயக்கம் ஏன்?-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: திருவள்ளூரில் நீதிபதி தினகரன் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி அதை மீட்பதாகக் கூறிக் கொண்டு போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்டு கட்சியினர் சிறுதாவூரில் ஜெயலலிதா ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க ஏன் போராட்டம் நடத்தவில்லை என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தில், கர்நாடக தலைமை நீதிபதி பி.டி. தினகரன், சட்ட விரோதமாக அரசு புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அந்த நிலங்களை தாங்களே மீட்டு, தலித் மக்களுக்கு வழங்கப்போவதாக அறிவித்துக் கொண்டு- அதன் காரணமாக அந்த மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு, அமைதியைக் கெடுக்க முனைந்தபோது- அதைத் தடுத்து- சட்டம் ஒழுங்கு அமைதியைப் பாதுகாக்கும் முயற்சியிலே அரசு ஈடுபட்டால் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சனை குறித்து ஒரு அறிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கிட அரசு தயக்கம் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்.

அது உண்மையல்ல; அரசு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு, பெரும்பாலும் தலித் மக்களுக்கு இரண்டு ஏக்கர் அளவிற்கு வழங்கும் திட்டத்தையே திமுக அரசுதான் கொண்டு வந்தது என்பதும்- அந்தத் திட்டத்தை பெரியாரின் பிறந்தநாளான 17.9.2006 அன்று இதே திருவள்ளூர் மாவட்டத்தில்தான் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 2,10,747 ஏக்கர் நிலம், 1,75,798 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, குறிப்பாக தலித் மக்களுக்கு இலவசமாக இந்த அரசினால் வழங்கப்பட்டுள்ளது என்பதை அப்படியே முழு பூசனிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பது போல மறைத்துவிட்டு, இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கிட நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்குவதாகவும் அறிக்கை விடுத்திருக்கிறார்கள் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு எந்த அளவிற்கு போகாத வழியெல்லாம் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் போக்க நில உடைமைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயித்து, மிகை நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கி, உழுபவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்ற நோக்கத்தோடு பாடுபட்டு வருவதுதான் திமுக ஆட்சி.

கழக ஆட்சியிலேதான் 1970ம் ஆண்டு நில உச்சவரம்பு 15 ஸ்டாண்டர்ட் ஏக்கர் என்று திடீரென்று சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின் காரணமாக 1, 78,880 ஏக்கர் நிலம், உபரி நிலம் என்று கைப்பற்றப்பட்டு, தகுதியுள்ள நிலமற்ற 1,37,236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் 61,985 பேர் தலித் மக்கள், 204 பேர் பழங்குடியினர்.

கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பெருமழை பெய்து மக்கள் எல்லாம் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அமைச்சர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்டங்களுக்குச் சென்று நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டிருக்கின்றார்கள்.

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில் இதற்கு முன்பெல்லாம் எப்போதும் நிவாரணப் பணிகளிலே, மக்கள் பணிகளிலே ஈடுபடக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மழையையொட்டி ஆற்றிட வேண்டிய மக்கள் பணியை ஒத்திவைத்து விட்டு, தனி மனிதர் ஒருவருக்கு எதிராக நிலமீட்பு என்ற பெயரில் போராட்டம் நடத்த முற்பட்டு, அதிலே அக்கறை செலுத்துகிறார்கள் என்றால் இது அரசியலில் உச்ச கட்டம் என்பதைத் தவிர வேறல்ல.

இவர்கள் யாருக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள்? அவரும் ஒரு தலித் தான். நீதிபதியாக இருக்கிறார். அவர் மீது இந்த நிலம் பற்றிய புகார் கூறப்பட்ட காரணத்தால், உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்ல வேண்டியது தடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று "டைம்ஸ் ஆப் இந்தியா'' இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார்.

எந்த அரசாங்க நிலத்தையோ, பொது நிலத்தையோ தான் ஆக்கிரமிக்கவில்லை என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ஆனால் நீதிபதி அங்கே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஒரு அரசாங்கம் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டால், உடனடியாக ஒரு தலித் குடிமகனின் நிலத்தை கைப்பற்ற இந்த அரசு ஏன் இவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்தது என்று இதே கட்சியினர் ஒரு போராட்டம் நடத்தக்கூடும். தனிப்பட்ட ஒருவர் நிலம் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் கூட அதை எதிர்த்து அரசாங்கம் தான் நடவடிக்கை எடுத்து, அந்த ஆக்கிரமிப்பு உண்மையாக இருந்தால், அந்த நிலங்களைக் கைப்பற்றி, அதன் பிறகுதான் மற்றவர்களுக்கு வழங்கலாமே தவிர, தனிப்பட்ட ஒரு கட்சியினர் தாங்களே நிலத்தை மீட்டு, தாங்களே வழங்குவோம் என்றால் அது சட்டம், ஒழுங்கு, அமைதிக்கு முறையானது தானா?.

ஒவ்வொரு கட்சியினரும் இவ்வாறு சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, தாங்களும் நிலங்களையோ, கட்டிடங்களையோ கைப்பற்றி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்குகின்றோம் என்றால் இதென்ன தமிழ்நாடா? மேற்கு வங்கமா?

சட்டம், ஒழுங்கு, அமைதியைக் கெடுக்கும் வகையில் ஒரு கட்சியினர் நடக்க முற்படும் போது, தடையை மீறி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று சொல்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முனைந்தால், அது காவல்துறையினரின் "கையாலாகாத்தன''த்திற்கு எடுத்துக்காட்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.

எது கையாலாகாத்தனம்? சட்டத்தை மீறியவர்களை கைது செய்தது கையாலாகாத்தனம் என்றால்; அவர்களை உடனடியாக விடுதலை செய்து வீட்டிற்கு அனுப்பியது அதைவிட பெரிய கையாலாகாத்தனம் அல்லவா? இதுதானே நண்பர் வரதராசனின் கணிப்பு?.

நீதிபதி தினகரன் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார் என்று கூறி அதை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கப்போகிறேன் என்று போராட்டம் நடத்த அவசரம் காட்டுகின்ற இதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நண்பர்கள் சிறுதாவூரில் ஜெயலலிதா; தலித்களுக்காக வழங்கப்பட்ட அரசு நிலத்தை அபகரித்து, ஆக்கிரமித்து வைத்திருப்பதாக எத்தனையோ மாதங்களுக்கு முன்பு சொன்னார்களே.

இத்தனை மாதங்களாக அதற்காக மீட்புப் போராட்டம் நடத்த ஏன் முன்வரவில்லை? இங்கே மட்டும் அவசரம் காட்டுவதற்கு என்ன உள்நோக்கம்?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X