For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியாறு: கருணாநிதி புலம்பியிருப்பதுதான் அவரது சுயரூபம் - ஜெ.

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தன்னலத்திற்காக தலைநகரம் டெல்லிக்கு தன்னுடைய பரிவாரங்களுடன் தலைதெறிக்க ஓடும் கருணாநிதி, தமிழர் நலம் என்றவுடன் யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை என்று புலம்பியிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இதுதான் அவருடைய சுயரூபம் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தன்னலத்திற்காக தலைநகரம் டெல்லிக்கு தன்னுடைய பரிவாரங்களுடன் தலைதெறிக்க ஓடும் கருணாநிதி, தமிழர் நலம் என்றவுடன் யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை என்று புலம்பியிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. இதுதான் அவருடைய சுயரூபம்.

நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு அணையின் நீர்மட்டத்தை தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று 27.2.2006 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதாவது கோடை கால துவக்கத்தில் இது போன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. எனவே உச்சநீதி மன்ற ஆணைப்படி உடனடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஏதுவாக அணையின் மதகுகளை இறக்கி விடுவதற்கான வாய்ப்பு அப்போது இல்லாமல் போயிற்று.

மழை பெய்து அதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. எனவே உச்சநீதிமன்ற ஆணையின் படி அணையின் மதகுகளை இறக்கி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பொறுப்பும் திமுக அரசின் கையில்தான் இருந்தது.

ஆனால் கருணாநிதி அவருக்கே உரிய காரணங்களான தன்னலம், குடும்ப வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான ஆணைகளை பிறப்பிக்கவில்லை. இதற்குப் பதிலாக உச்சநீதிமன்ற ஆணையை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், கேரள அரசு அவசர அவசரமாக ஒரு சட்டத்தை இயற்றி விட்டதாக தெரிவித்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்தார் கருணாநிதி.

கேரள அரசு இயற்றிய சட்டத்தை கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கு எந்த காலக் கட்டத்திலிருந்து ஏற்பட்டது? கேரள அரசால் சட்டவிரோதமாக இயற்றப்பட்ட சட்டம் உச்சநீதிமன்ற ஆணையை தூக்கி எறியும் விதத்திலோ அல்லது மீறும் விதத்திலோ அமைந்துள்ளது என்று எப்போது கருணாநிதி நினைக்க ஆரம்பித்தார்?

இந்தியநாட்டின் மிக உயரிய அமைப்பான உச்சநீதிமன்றத்தின் ஆணையை கையில் வைத்துக் கொண்டு கேரள மாநிலத்தின் உள்ளூர் சட்டத்திற்கு ஏன் கருணாநிதி மதிப்பளித்தார்? ஒன்றல்ல, மூன்று பருவ மழைகளின் மூலம் முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வந்தது.

இருப்பினும் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தும் அளவிற்கு அணையின் கதவுகளை இறக்க தமிழக அரசின் அதிகாரிகளுக்கு கருணாநிதி உத்தரவு பிறப்பிக்கவில்லை! இது யாருடைய குற்றம்? கருணாநிதியின் குற்றமா? கேரள அரசின் குற்றமா? உச்சநீதி மன்றத்தின் குற்றமா?

முல்லைப் பெரியாறு வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு அனுப்பியதன் மூலம் மிகப் பெரிய அநீதியை உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு இழைத்துள்ளது என்று சலிப்பூட்டும் தனது 5 பக்க அறிக்கையில் தற்போது கருணாநிதி புலம்பியிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள 2006 ஆம் ஆண்டு அனுமதி அளித்த தீர்ப்பின் மீதே உச்சநீதிமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் மீது பழி சுமத்த கருணாநிதி முயல்கிறார்.

வழக்கம் போல், கருணாநிதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். கருணாநிதியின் திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய் விட்டன.

முல்லைப் பெரியாறு பிரச்சனையை அரசியல் சாசன அமர்விற்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்தபோது, குறைந்த பட்சம் தமிழகத்தின் எதிர்ப்பையாவது உரத்த குரலில் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இதைக் கூட திமுக அரசு செய்யவில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சனை அரசியல் சாசன அமர்விற்கு அனுப்பப் படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தபோது, தமிழகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டு அனைத்து பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டன.

தற்போது இந்தப் பிரச்சனையை விசாரிக்க 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறையை வைத்துப் பார்த்தால் ஓராண்டிற்கு மூன்று அல்லது நான்கு முறைக்கு மேல் அரசியல் சாசன அமர்வு கூடியது கிடையாது.

எனவே கருணாநிதியின் சுயநலத்தால் முல்லைப் பெரியாறு பிரச்சனை கிடப்பில் போடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்தப் பெருமை கருணாநிதியை மட்டுமே சாரும். தற்போது நீலிக் கண்ணீர் வடிப்பதன் மூலம் தான் செய்த தவறை கருணாநிதி மூடி மறைக்க முடியாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X