• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

பறிபோன முத்துக்கள்...

By Staff
|

மும்பை: மும்பைத் தாக்குதலின் கோரத்தின் சோகத்தை விட அதில் பறிபோன சில உயிர்கள்தான் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ஹேமந்த் கர்கரே, விஜய் சலஸ்கர், அசோக் காம்தே ஆகிய அந்த மூன்று முக்கிய அதிகாரிகள் வீழ்த்தப்பட்ட விதம் மக்களின் மனதில் இன்னும் நீங்காத சோகமாக உள்ளது.

குறிப்பாக கர்கரே வீ்ழ்ந்த விதம் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி விட்டது.

ஹேமந்த் கர்கரே ..

மிகத் துணிச்சலான, நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர் கர்கரே. மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்தார் கர்கரே அப்போது. ரா அமைப்பில் இருந்து வந்த அவரை மகாராஷ்டிர காவல்துறைக்கு மீண்டும் அழைத்து வந்து தீவிரவாத தடுப்புப் பிரிவை உருவாக்கி அதன் தலைவராக அமர்த்தியிருந்தது மாநில அரசு.
அவரது கையில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கைக் கொடுத்திருந்தனர். அந்த வழக்கில் படு தீவிரமாக துப்பு துலக்கிய அவர் நாட்டையே அதிர வைக்கும் பல திடுக்கிடும் தகவல்களை, உண்மைகளை வெளிக் கொணர்ந்தார்.

அதுவரை குண்டுவெடிப்பு என்றாலே முஸ்லீம்கள்தான், பாகிஸ்தான்தான் என்று இருந்து வந்த எண்ணங்களை அப்படியே துடைத்துப் போட்டு விட்டது மாலேகான் குண்டுவெடிப்பு குறித்த பின்னணி.

இந்து அமைப்பு ஒன்று இதன் பின்னணியில் இருப்பதாகவும், பெண் துறவி, ராணுவ அதிகாரி உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே இந்துக்கள் என்றும் கர்கரே அம்பலப்படுத்தியபோது நாடே அதிர்ந்தது.

அதே வேகத்தில் கர்கரே ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என்றும் புகார் கணைகள் அவரை நோக்கி வீசப்பட்டன. இருந்தாலும் சற்றும் அயராமல் தொடர்ந்து தீவிரமாக விசாரணையில் இறங்கி வந்தார். அசைக்க முடியாத ஆதாரங்களைத் திரட்டிக் குவித்தார். இனியும் தப்ப முடியாது என்ற நிலைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களை நிறுத்தி வைத்தார்.

இந்த முக்கியமான நேரத்தில்தான் மும்பைத் தாக்குதல் எமன் போல வந்து கர்கரேவின் உயிரைப் பறித்துக் கொண்டு விட்டது.

தீவிரவாதிகள் புகுந்து தாக்குகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்கரே, அப்படியே விட்டு விட்டு ஸ்பாட்டுக்கு ஓடினார்.

கையில் துப்பாக்கியைக் கூட அவர் எடுத்துக் கொண்டு போகவில்லை. காமா மருத்துவமனைப் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்காக அரசு வழங்கிய புல்லட் புரூப் உடையை அணிந்தபடி சென்ற அவருக்கு நெஞ்சில் குண்டுகளைப் பாய்ச்சி உயிரைப் பறித்து விட்டனர் தீவிரவாதிகள்.

அதேபோல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விஜய் சலஸ்கரும் கொல்லப்பட்டார். மும்பை போலீஸ் கூடுதல் ஆணையர் அசோக் காம்தேவும் அநியாயமாக கொல்லப்பட்டார்.

அதேபோல தீவிரவாதிகளுடன் மோதி உயிர்த் தியாகம் செய்தவர்கள் என்.எஸ்.ஜி படையைச் சேர்ந்த கேப்டன் சந்தீப் உண்ணிகிருஷ்ணனும் ஒருவர்.

ஓம்ப்ளேவின் தீரச் செயல்...

இவர்களுக்கு சற்றும் குறையாத தீரத்துடன் மோதி உயிர் நீத்த இன்னொரு அதிகாரி துக்காராம் ஓம்ப்ளே. இவரது செயல் இப்போது நினைத்தாலும் கூட மயிர்க்கூச்செறிய வைக்கிறது.

வெறும் கையுடன் கசாப்பை எதிர்த்துப் போராடி அவனது குண்டுகளை தனது உடலில் வாங்கி உயிர் நீத்தவர் ஓம்ப்ளே. ஆனால் இவர் படு துணிச்சலாக செயல்பட்டு கசாப்பை தடுத்து நிறுத்தியதால்தான் அவன் இன்று உயிருடன் நம் கையில் சிக்க முடிந்தது.

உதவி சப் இன்ஸ்பெக்டராக இருந்த ஓம்ப்ளே 26ம் தேதி, இரவுப் பணியில் இருந்தார். நள்ளிரவு 12.30 மணியளவில் தனது குடும்பத்தினருடன் பேசினார். அப்போது அவருக்குப் போன் வந்தது.

உடனடியாக மெரைன் டிரைவுக்குச் செல்லுமாறு பணிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்தார் ஓம்ப்ளே. கையில் துப்பாக்கி கூட அப்போது அவரிடம் இல்லை.

லியோபோல்ட் கபே, ஓபராய், தாஜ் ஹோட்டல்களில் தீவிரவாதிகள் வெறியாட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரம் அது.

12.45 மணிக்கு ஸ்கோடா காரில் தீவிரவாதிகள் கிர்காம் பகுதி வழியாக விரைந்து வருவதாக ஓம்ப்ளேவுக்குத் தகவல் வந்தது. அடுத்த சில விநாடிகளில் ஸ்கோடா கார் அவரைத் தாண்டி சென்றது.

சுதாரித்த ஓம்ப்ளே தனது மோட்டார் சைக்கிளில் ஏறி காரைத் துரத்தினார். இந்த நிலையில் கிர்காம் சிக்னல் பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போலீஸ் படை தயாராக இருந்தது.

சிக்னலை கார் நெருங்கியதும் தடுப்புகள் இருந்ததால் தீவிரவாதிகள் (கசாப் மற்றும் அபு இஸ்மாயில்) காரின் வேகத்தைக் குறைத்தனர். அதேசமயம் காருக்குள் இருந்தபடி சரமாரியாக சுட்டபடி வந்தனர்.

இந்த நிலையில் மின்னலென வந்த ஓம்ப்ளே காருக்கு முன்புறம் மோட்டார் சைக்கிளை விட்டு காரை மடக்கினார். டிரைவரைப் பார்த்து வலதுபக்கம் திரும்புமாறு சத்தம் போட்டார்.

இதை தீவிரவாதிகள் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து ஓம்ப்ளேவை சுட்டு வீழ்த்தும் எண்ணத்துடன் தனது துப்பாக்கியை அவர் பக்கம் திருப்பினான் கசாப். ஆனால் பாய்ந்து சென்ற ஓம்ப்ளே துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு அதைப் பறிக்க முயன்றார்.

அப்போது கசாப் டிரிக்கரை அழுத்தவே சரமாரியாக பாய்ந்த குண்டுகள் ஓம்ப்ளேவின் வயிற்றைக் கிழித்துச் சென்றன.
உயிர் துடித்த அந்த நிலையிலும் தனது நினைவை இழக்காத ஓம்ப்ளே கசாப்பின் கையில் இருந்த துப்பாக்கியை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டார். இதனால் கசாப்பால் மற்றவர்களை சுட முடியாமல் போனது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சிக்னலில் இருந்த போலீஸ் படை அபு இஸ்மாயிலை சுட்டுத் தள்ளியது. இஸ்மாயில் அங்கேயே உயிரிழந்தான். கசாப் உயிருடன் சிக்கினான்.

மும்பை பயங்கரத்தின் அத்தனை பின்னணியும் இன்று நமக்குத் தெரிய முக்கிய காரணம் கசாப். அந்த கசாப்பை பிடிக்கக் காரணமாக இருந்தவர் ஓம்ப்ளே.

கையில் எந்த ஆயுதமும் இல்லாமல், பிடித்தே தீர வேண்டும் என்ற அசாத்திய துணிச்சலுடன் தீரமாக போராடி உயிர் நீத்து கசாப் பிடிபடக் காரணமாக இருந்தவர் ஓம்ப்ளே.

ஹவில்தார் கஜேந்தர் சிங்..

அதேபோல ஹவில்தார் கஜேந்திர சிங்கின் உயிர்த் தியாகமும் சாதாரணமானதில்லை. என்.எஸ்.ஜி. கமாண்டோ வீரர் கஜேந்தர் சிங்.

நரிமன் இல்லத்தை மீட்க கமாண்டோப் படையினர் பாராசூட் மூலம் அங்கு இறக்கி விடப்பட்டனர். அவர்களுக்குத் தலைமை தாங்கி முன்னால் சென்றார் கஜேந்தர் சிங்.

அப்போது தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் வீரர்களை தடுக்கப் பார்த்தனர். இதில் கஜேந்தர் சிங் படுகாயமடைந்தார்.

ஆனால் அவர் ஓய்ந்து விடவில்லை. படுகாயமடைந்த நிலையிலும் மிகுந்த தீரத்துடன் தொடர்ந்து முன்னேறினார். அவர் மட்டும் பயந்து பின் வாங்கியிருந்தால், நிச்சயம் கமாண்டோ வீரர்களால் உள்ளே போயிருக்க முடியாது.

தனது உயிரைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்ற கஜேந்தர் சிங் உயிரைத் தியாகம் செய்து, பின்னால் வந்த வீரர்கள் முன்னேறிச் செல்ல வழி விட்டார். கமாண்டோ வீரர்களும் உள்ளே நுழைந்து தீவிரவாதிகளை வேட்டையாடி நரிமன் இல்லத்தை மீட்டனர்.

அதே போல தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதலில் தனது இன்னுயிரை இழந்தார் இளம் கமாண்டோவான உண்ணி கிருஷ்ணன்.

இப்படி இந்தியாவுக்குள் வெறியாட்டம் போட்ட தீவிரவாதிகளுடன் மோதி இன்னுயிரை நீத்த கர்கரே, சலஸ்கர், காம்தே, ஓம்ப்ளே, சந்தீப் உண்ணிகிருஷ்ணன், கஜேந்தர் சிங் ஆகியோருக்கு மத்திய அரசு அசோக் சக்ரா விருதளித்து மரணத்திற்குப் பின்னர் அவர்களை கெளரவித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X