For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவை நம்ப வைக்கவே பிரபாகரனை கொன்று விட்டதாக கூறுகிறது இலங்கை - தமிழ் எம்.பி.

By Staff
Google Oneindia Tamil News

Prabhakaran
லண்டன்: இந்தியாவையும், சிங்களர்களையும் நம்ப வைக்கும் வகையிலேயே பிரபாகரனைக் கொன்று விட்டதாகவும், அவர் இறந்து விட்டதாகவும் கூறி நாடகமாடி வருகிறது இலங்கை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஜெயானந்த மூர்த்தி கூறியுள்ளார்.

பிரபாகரன் ஆற்றிய மாவீரர் தின உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா ஈழத்தில் நடந்தது. 1989ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையிலான மாவீரர் உரைகள் அடங்கிய தொகுப்பு இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

இந்த நூலுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அணிந்துரை வழங்கியுள்ளார். கவிஞர்கள் காசி ஆனந்தன், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த நூல் வெளியீட்டு விழா, கிழக்கு லண்டனில் உள்ள என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

அப்போது எம்.பி. ஜெயானந்தமூர்த்தி பேசுகையில், பிரபாகரனுடைய இந்த உரைகள் அடங்கிய நூல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

ஆரம்பத்தில் இருந்து இந்த உரைகளை நீங்கள் நன்கு வாசித்து ஆராய்ந்து பார்த்தல் அவரின் கொள்கை எத்தகைய உறுதியானது என்பதை உணர முடியும்.

அது மாத்திரமின்றி விடுதலையை அடைவதற்காக அவர் எத்தனையோ விட்டுக் கொடுத்தல்களைச் செய்து இலங்கை அரசுடனும் சர்வதேச சக்திகளுடனும் தமது அமைப்பு மூலமாக பேச்சுக்கனை நடத்தியுள்ளார்.

ஆனால் இச்சக்திகள் அனைத்தும் நம்பிக்கைத் துரோகமே செய்துள்ளன. இன்றும் அதே கொள்கையைத்தான் இந்த சர்வதேசமும் செய்து வருகின்றது.

தமிழ் மக்களின் விடுதலையே இறுதி மூச்சு என்பதில் அவர் உறுதியாகவே உள்ளார். இந்த உண்மையை தற்போதும் அவருக்கு நெருக்கமானவர்களின் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.

இன்றைய காலகட்டத்தில் என்னால் பல விஷயங்களை வெளியே சொல்ல முடியாவிட்டாலும் ஈழத் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். காலம் வரும்போது அனைத்துமே வெளியே வரும்.

எமது தலைவர் இந்திய ராணுவத்தினரின் காலத்திலும் சரி அதன்பின் இடம் பெற்ற பல போர்களிலும் சரி தற்செயலாக தனக்கு ஏதும் நேர்ந்தால் கூட தனது உடல் பகைவர்களின் கையில் சென்று விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் தனது அருகில் போராளிகளை வைத்திருந்தவர்.

அப்படியானவரின் உடலை முள்ளிவாய்க்காலில் கண்டெடுத்தோம் என இலங்கை அரசு கூறும் கதையை குழந்தைப் பிள்ளை கூட நம்பாது. இலங்கை அரசு தென்பகுதி மக்களையும் இந்தியாவையும் நம்ப வைக்க நடத்திய நாடகமே இது.

எமது தலைவர் தானே கூட தமிழீழத்தை கைவிட்டால் தன்னையே போராளிகள் சுட்டுக் கொல்வார்கள் என 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் அவரின் கொள்கையையும் உறுதியையும் நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும். எனவே நாம் எமது லட்சியத்தை அடையும் வரை அரசியல் ரீதியான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இதுவே இக்காலகட்டத்தில் பொருத்தமானது.

எமது போராட்டம் தொடர்பாகவும் தற்போதைய நிலமை தொடர்பாகவும் எமது புரட்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஒரு இறுவெட்டு வெளியிட்டுள்ளார் அதை கேட்கும் ஒவ்வொருவருக்கும் தற்போதைய நிலமை நன்கு புரியும் என்றார் அவர்.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X