For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகாம் தமிழர்கள் இன்று முதல் சுதந்திரமாக நடமாடலாம் - இலங்கை

By Staff
Google Oneindia Tamil News

Sir Lanka Camps
கொழும்பு: வன்னி முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்கள் இன்று முதல் சுதந்திரமாக நடமாடலாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஏற்கனவே மறு குடியேற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் போதிய உணவு கூட கிடைக்காமல் அடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈழப் போரின் முடிவில் வன்னிப் பகுதியில் பல்வேறு முகாம்களை அமைத்தது இலங்கை அரசு. முள்வேலிகளால் சூழப்பட்ட இந்த முகாமிலிருந்து யாரும் வெளியேற அனுமதிக்கப்படாமல் கொத்தடிமைகள் போல வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களை விடுவிக்கக் கோரி அனைத்துத் தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தன. ஆனால் அதை இலங்கை அரசு சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் திடீரென தமிழர்களை பெருமளவில் மறுகுடியேற்றம் செய்வதாக அது அறிவித்து பல ஆயிரம் பேரை பிற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேரும் டிசம்பர் 1ம் தேதி முதல் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவர் என அரசு அறிவித்திருந்தது.

இதுகுறித்து வவுனியா மாவட்ட அரசு அதிகாரி திருஞானசம்பந்தர் கூறுகையில், டிசம்பர் 1ம் தேதி முதல் இடம் பெயர்ந்த மக்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது. தாங்கள் போக விரும்பும் இடத்தை ராணுவ சோதனைச் சாவடியில் தெரிவித்து விட்டு அவர்கள் போகலாம். எங்கு போக விரும்புகிறார்களோ அங்கு போகலாம், வரலாம் என்றார்.

அதேசமயம், முகாம்களில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்குப் போக அவர்களே செலவு செய்து கொள்ள வேண்டுமாம். இதுகுறித்து திருஞானசம்பந்தர் கூறுகையில், போக்குவரத்து செலவுகளை அரசு தராது. அதை தமிழ் மக்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆனால் கடந்த ஆறு மாதங்களாக முகாமில் அடைபட்டுக் கிடந்த அப்பாவித் தமிழர்களிடம் எந்தவித பணமும் இல்லாத நிலையில் எப்படி சொந்த ஊர்களுக்குப் போக முடியும் என்ற கவலை எழுந்துள்ளது.

மேலும் போர் பாதித்த பகுதிகளில் இன்னும் கண்ணி வெடிகளை அகற்றும் பணி முடியவில்லை என்று அரசு கூறி வருகிறது. அப்படி இருக்கையில், அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் எங்கு போய் தங்குவார்கள் என்பதற்கும் அரசிடமிருந்து தெளிவான பதில் இல்லை.

சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்து வருவதால் தற்போது உள்ள முகாம்களை ஜனவரிக்குள் மூடி விட இலங்கை திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே போனவர்கள் நிலை...

இதற்கிடையே, ஏற்கனவே முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் சில பகுதிகளில் குடியமர்த்தப்பட்டதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சாப்பாடு கூட கிடைக்காமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

முகாம்களிலிருந்து இடம் பெயர்த்து அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் இன்னும் சொந்த ஊர்களில் குடியேறவில்லை. மாறாக பள்ளிக்கூடங்களில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சரிவர உணவு தரப்படுவதில்லையாம். அவர்களைக் கட்டாயப்படுத்தி பல்வேறு வேலைகளைச் செய்யச் சொல்கிறார்களாம்.

அவர்களது சுதந்திரமான நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பார்த்தால் மக்களை இடம் பெயர வைத்தது போலத் தெரியவலி்லை. மாறாக அடிமைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு வந்தது போலத் தெரிவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

முல்லைத்தீவு மாவட்டம் துனுக்காய் கோட்டத்தைச் சேர்ந்த 6037 தமிழர்கள், நவம்பர் 18ம் தேதி வரை இடமாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல ஜெயபுரம், அக்கரையான்குளம், முழங்காவில், நாச்சிகுடா ஆகிய கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2821 பேர் நவம்பர் 17ம் தேதி வரை இடம் பெயர செய்யப்பட்டனர்.

இவர்களில் சிலர் கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு, கிரங்காச்சி ஆகிய கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கிராமங்கள் முக்கியமான ஏ-9 சாலையை விட்டு வெகு தொலைவில் உள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளை விட்டு வெகு தொலைவில் உள்ளனவாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X