வீட்டில் இருந்து குழந்தையை கடத்திய நர்ஸ் காதலருடன் கைது
சென்னை: சாப்ட்வேர் என்ஜினியர் வீட்டிலிருந்து குழந்தையை கடத்திச் சென்ற நர்ஸை போலீசார் சுற்றி வளைத்து குழந்தையை மீட்டனர். அப்பெண்ணின் காதலர் என்று கூறப்படுபவரும் கைது செய்யப்பட்டார். குழந்தை கடத்தலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் குடியரசு (31). இவரது மனைவி வாணிஸ்ரீ. இவர்களுக்கு ஒன்றரை வயதில் அம்சலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் கம்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கின்றனர்.
காஞ்சீபுரத்தை சேர்ந்த தேன்மலர் இவர்களிடம் நெருக்கமாக பழகி வந்தார். இவர் ஒரு நர்ஸ். குடியரசுவிடம் தனி அக்கறை கொண்ட தேன்மலர், அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வந்து சென்றார். குடியரசுவிடம் தன்னை மறு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அதற்கு குடியரசு மறுத்து விட்டார்.
இந்நிலையில் திடீரென ஒருநாள் தேன்மலர், குடியரசுவின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அம்சலட்சுமியை கடத்திச் சென்று விட்டார். புகாரின் பேரில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கனர்.
தேன்மலர் வேலை பார்த்து வந்த அயனாவரம் தனியார் மருத்துவமனையிலும் விசாரித்தனர். அவர் பணிக்கு வரவில்லை என்று தெரியவந்தது. அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீடு பூட்டி கிடந்தது.
பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவல்படி பெரம்பூரில் உள்ள நண்பர் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்து தேன்மலர் புதுச்சேரிக்கு குழந்தையுடன் சென்றது தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் புதுவை விரைந்தனர். தோழி வீட்டில் பதுங்கி இருந்த தேன்மலரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். குழந்தை அம்சலட்சுமியை பத்திரமாக மீட்டனர்.
போலீஸ் விசாரித்தபோது, குடியரசுவுக்கு தெரிந்துதான் குழந்தையை தூக்கி வந்ததாகவும், தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் குடியரசுவோ தேன்மலர் தோழி மட்டுமே காதலி அல்ல குடும்பத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றார். கைது செய்யப்பட்ட தேன்மலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
அதேபோல தேன்மலருடன் இருந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர் தேன்மலரின் காதலர் என்றும் கூறப்படுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குழந்தை கடத்தலுக்கான உண்மையான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications