தேர்தல் செலவு-ஹெலிகாப்டருக்கே ஜெ. பாதி செலவு!

அதிமுகவுக்கான செலவில் பாதித் தொகை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து போய் பிரசாரம் செய்ததற்காக செலவிடப்பட்டுள்ளது.
2009ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் செலவழித்த தொகை குறித்த வரவு செலவுக் கணக்கை இதுவரை 22 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன.
அதன் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பாமக சார்பில் சட்டசபை செலவுக் கணக்கு மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கணக்கு ரூ. 380 கோடி...
காங்கிரஸ் கட்சி மொத்தம் 380 கோடி ரூபாயை லோக்சபா தேர்தலில் செலவிட்டுள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பணத்தை செலவிட்டுள்ள கட்சி காங்கிரஸ்தான். இது 2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி செலவிட்ட தொகையை விட 3 மடங்கு அதிகமாகும்.
காங்கிரசின் மொத்த செலவான ரூ. 380 கோடியில் ரூ. 113.56 கோடி பிரசாரத்துக்கு ஹெலிகாப்டர், விமானங்களில் பறப்பதற்கு செலவிட்ட தொகையாகும். மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் தலைவர்கள்தான் அதிக அளவில் ஹெலிகாப்டர்களில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஹெலிகாப்டரில் அதிகம் பறந்த ஜெ...
தமிழக கட்சிகளைப் பொறுத்தவரை ஜெயலலிதா மட்டும்தான் ஹெலிகாப்டரில் அதிக அளவில் பயணம் செய்து பிரசாரம் செய்துள்ளார். அதிமுகவின் செலவில் கணிசமானது ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் வாடகைக்கே போயுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தன்று அதிமுகவின் வங்கி இருப்பு 30 கோடியே 55 லட்சத்து 92 ஆயிரத்து 439 ரூபாய் ஆகும்.
தேர்தல் செலவுக்காக கட்சிக்கு வந்த நன்கொடைகளின் அளவு ரூ. 17 கோடியே 97 லட்சத்து 77 ஆயிரத்து 477 ரூபாய் ஆகும். தேர்தலுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ. 12,16,97,308 ஆகும். இதில் விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 1,59,90,422 ஆகும்.
சுற்றுப்பயணச் செலவுகளாக ரூ. 1,89,17,171யைக் கணக்குக் காட்டியுள்ளது அதிமுக. பிற செலவுக் கணக்கு வகை ரூ. 90,290 ஆகும்.
தனது தேர்தல் பிரசாரத்திற்காக மூன்று நிறுவனங்களின் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதற்கான வாடகை செலவுக் கணக்கு மட்டும் 1 கோடியே 89 லட்சத்து 17 ஆயிரத்து 171 ரூபாய் ஆகும்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 35 தொகுதிகளுக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார்.
திமுகவின் சட்டசபைத் தேர்தல் கணக்கு விவரம்..
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, திமுகவின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் அளவு ரூ. 31,64,88,793.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினம் முதல் கட்சிக்கு வந்து சேர்ந்த நன்கொடைகளின் அளவு ரொக்கமாக ரூ. 1,48,390 மற்றும் டிடி, செக் மூலமாக ரூ. 12,29,200.
தேர்தல் தேதி அறிவித்தது முதல் தேர்தல் முடியும் வரை செய்யப்பட்ட மொத்தச் செலவுகள் ரூ. 5,90,28,784. இதில் விளம்பரத்துக்காக மட்டும் ரூ. 5,18,96,324 பணத்தை செலவிட்டுள்ளது திமுக. மற்றவை சுற்றுப்பயணச் செலவுகள் உள்ளிட்டவை.
திமுக சார்பில் எந்தத் தலைவரும் ஹெலிகாப்டரில் பயணிக்கவில்லை என்றும் இந்த கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக செலவுக் கணக்கு...
பாமகவின் சட்டசபைத் தேர்தல் கணக்கு விவரம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது அதன் கைவசம் ரூ. 15,12,638 இருந்தது.
தேர்தலுக்காக கட்சிக்கு வந்த நன்கொடைகளின் அளவு ரூ. ரூ. 44,41,942. அதாவது கட்சி வைத்திருந்த தொகையை விட பல மடங்கு அதிகமான தொகையை பாமக சில நாட்களிலேய வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்காக பாமக செலவழித்த தொகை ரூ. 39,75,833 ஆகும். தேர்தலுக்குப் பின் வங்கிக் கணக்கில் ரூ. 19,75,444ம், கையிருப்பாக 3,303 ரூபாயும் இருந்ததாக கூறியுள்ளது பாமக.












Click it and Unblock the Notifications