For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.

சட்டப் பேரவையில் இத்தகவை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி புதன்கிழமை தெரிவித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நேற்று நடைபெற்றது.

விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் கூறியது:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையிலும் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் புதிய திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உற்பத்தி அல்லது சேவை, வணிகம் சார்ந்த தொழில்களைத் தொடங்க விரும்பினால், அவர்களுக்கு 15 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வங்கிகள் மூலமாக கடன் உதவி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.100 கோடியில் 10 ஆயிரம் பேருக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

கூடுதலாக 15 தொழில்கள் சேர்ப்பு: தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2008-ன் படி, மானியம் பெற தகுதியான தொழில்கள் விவரம்:

பாப்கார்ன் மற்றும் ஐஸ்கிரீம் தயாரித்தல், கலப்பு உரம் தயாரித்தல், ஜவுளி ஆலைகள் (நூற்பாலை மற்றும் பின்னலாடை உள்பட), மாவு அரைவு தொழில், உணவு விடுதிகள், சமையல் எண்ணெய் மற்றும் கரைப்பான்கள் உபயோகித்து எண்ணெய் பிரித்தெடுத்தல், அரிசி ஆலை, வெல்லம் தயாரித்தல், போட்டோ எடுத்தல் மற்றும் கலர் போட்டோ தயாரித்தல், ஒளி அச்சு நகல் எடுத்தல், மின் சலவை தொழில், செங்கல் தொழில் (சிமென்ட் ஹாலோ பிளாக், இயந்திரங்கள் மற்றும் நிலக்கரி சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கல் தவிர), காபிக் கொட்டை வறுத்தல் மற்றும் அரைத்தல், கடிகாரம் பழுதுபார்த்தல், ஒளி மற்றும் ஒலி நாடா பதிவு செய்தல் ஆகிய தொழில்கள் மானியம் பெற தகுதியான தொழில்களாக மாற்றியமைக்கப்படும்.

இப்போது இந்தத் தொழில்கள் மானியம் பெற தகுதியற்ற தொழில்களின் பட்டியலில் உள்ளன.

வேலைவாய்ப்பு முகாம்கள்: தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் திறன் படைத்தோர் ஆகியோரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தொழில் மையங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.

புதிய நிறுவனங்கள் மானியங்களைப் பெற உற்பத்தி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விண்ணப்ப கால அளவு 6 மாதத்திலிருந்து ஓர் ஆண்டாக உயர்த்தப்படும்... என்றார் அமைச்சர்.

டாம்கோ திட்டத்தின் கீழ் 200 ஆட்டோக்கள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) திட்டத்தின் கீழ், ஆட்டோ தொழில் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக சிறுபான்மையின உறுப்பினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் 200 ஆட்டோக்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

இந்தத் திட்டம் தாய்கோ வங்கி மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X