For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரும் மன நிறைவு கொள்கிறேன்: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: நான் பல்லாண்டு காலம் வாழ்ந்த வீட்டை அறக்கட்டளையிடம் ஒப்படைத்து விட்டதால் பெரும் மன நிறைவு கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

இன்று தனது கோபாலபுரம் வீட்டை அறக்கட்டளையிடம் ஒப்படைத்த பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்த இந்த வீட்டை ஒப்படைத்து விட்டீர்கள். உங்கள் உணர்வு எப்படி இருக்கிறது?

பதில்: நான் ஆத்திகனாக இருந்தால், ஆத்ம திருப்தி அடைந்ததாகச் சொல்லியிருப்பேன். ஆனால், நான் ஒரு நாத்திகன் என்ற அளவில் மன நிறைவு கொள்கிறேன்.

கேள்வி: நீங்கள் இப்படியொரு முடிவு எடுத்தபோது, உங்கள் பிள்ளைகளின் உணர்வுகள் எப்படி இருந்தது?

பதில்: என் எண்ணத்தை மீறி என்னுடைய பிள்ளைகள் யாரும் நடக்க மாட்டார்கள். இந்தப் பிரச்சனையிலும் அவர்கள் நடக்கவில்லை.

கேள்வி: இந்த வீட்டிற்கு எத்தனையோ தலைவர்கள் வந்து உங்களைச் சந்தித்திருக்கிறார்கள். எத்தனையெத்தனையோ நிகழ்வுகள், திருப்பங்கள், முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானதாக எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: எவ்வளவோ பெரிய தலைவர்கள் எல்லாம் வந்திருக்கின்றனர். அதிலே நான் குறிப்பிட்டு சிலரை மட்டும் சொல்வது நல்லதல்ல.

கேள்வி: இந்த வீட்டைப் பற்றி நினைவிலே கொள்ளத்தக்க நிகழ்ச்சி ஏது?

பதில்: நினைவிலே கொள்ளத்தக்க நிகழ்ச்சி, இன்றைக்கு நடைபெறுகின்ற நிகழ்ச்சி தான்.

கேள்வி: உங்களுக்குப் பிறகு இங்கே அமையவுள்ள உங்கள் பெயரிலான மருத்துவமனை எவ்வாறு இயங்கும் என்பதைப்பற்றி அறங்காவலர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறீர்களா?

பதில்: இதைப்பற்றியெல்லாம் நீங்கள் அறக்கட்டளை உறுப்பினர்களை எதிர்காலத்தில் அணுகி அந்த விவரங்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி: சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு திமுக தலைமையில் மாற்றம் இருக்குமா?

பதில்: எந்த மாற்றமும் இருக்காது, ஏமாற்றமும் இருக்காது என்றார்.

மாற்றுத்திறனாளிகள் துணையாளருக்கும் கட்டண சலுகை:

இந் நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் கருணாநிதி செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்காக தூத்துக்குடியில் மண்டல ஆரம்ப நிலை பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில் குழந்தை பிறந்தவுடனேயே செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறியும் பரிசோதனைகளையும், பின்னர் 5 வயது வரை குழந்தைகளுக்குத் தொடர் செவித்திறன் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வளரும் குழந்தைகளின் செவித்திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதற்கு வசதியாகத் தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை செவித்திறன் பரிசோதனை மையம் நிறுவிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இதேபோல, மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பின் மீதும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

அதன் விவரம்:

அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும், மாற்றுத் திறனாளிகள் மாநிலத்திற்குள் 75 சதவீத பயணக் கட்டணச் சலுகையுடன் ஆண்டுக்கு 4 முறை பயணம் செய்திட 2007ம் ஆண்டில் இந்த அரசு சலுகை வழங்கியது.

இதில், பயண எண்ணிக்கை உச்சவரம்பினை நீக்கி, ஆண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என முதல்வரால் 2008ம் ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிலவகை மாற்றுத்திறனாளிகள் உடல் குறைப்பாட்டின் தன்மை காரணமாகத் துணையாளர் உதவியின்றித் தனியே பயணம் செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளனர். அத்தகைய மாற்றுத் திறனாளியின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது, அவருக்கு உதவியாக வரும் ஒரு துணையாளருக்கும் 75 சதவீத கட்டணச்சலுகை அளித்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணையின்படி, ஒரு மாற்றுத் திறனாளியும், அவரது துணையாளரும் உள்ளூர்ப் பேருந்து, குளிர் சாதனப் பேருந்து ஆகியவை நீங்கலாக பிற அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி 25 சதவீத கட்டணத்தில் மாநில முழுவதும் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X