For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை 'பாரத் பந்த்': தமிழகத்தில் பஸ்-ரயில்கள் ஓடும்; மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Fuel Price
சென்னை: பெட்ரோல், சமையல் கேஸ், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்து நாளை (திங்கள்கிழமை) பாஜக, இடதுசாரி கட்சிகள் தேசிய அளவி்ல் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழகத்தில் அதிமுக கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

போராட்டத்தை சமாளிக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்று அரசு அறிவித்துள்ளது. ரயில்களும் வழக்கம் போல் ஓடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பால், குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள், வேன்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாவிட்டாலும் அலுவலகங்களுக்கு வருவோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. அதே போல அசம்பாவித சம்பவங்களுக்கு அஞ்சி குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு பெரும்பாலான பெற்றோர் அனுப்புவதும் சந்தேகமே.

அதே நேரத்தில் சாப்ட்வேர் உள்ளிட்ட பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் நாளை விடுமுறை அறிவித்துவிட்டன.

இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாளை திமுக, காங்கிரஸ் தொழிற்சங்கம் சாராத பிற ஆட்டோக்கள் ஓடாது.

மேலும் நாடு முழுவதும் நாளை லாரிகள் இயங்காது என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதையேற்று தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் லாரிகளை இயக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது.

ஆனால், துறைமுகங்களுக்கு செல்லும் லாரிகள், சென்னை குட்ஸ் டிரான்ஸ்போர்ட் சங்க லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. அதே போல மேலும் சில சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் 50 சதவீத லாரிகள் மட்டுமே இயங்காது என்று தெரிகிறது. அதே நேரத்தில் பிற மாநிலங்கள் வழியாக தொலைதூரம் செல்லும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுவிடும்.

முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நாளை காலை முதலே போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத டிரைவர், கண்டக்டர்களை பஸ்களை எடுக்க விடாமல் தொழிற்சங்கத்தினர் தடுக்க வாய்ப்புள்ளது என்பதால் டெப்போக்கள் முன்பும் போலீசார் குவிக்கப்படவுள்ளனர்.

பந்த்தின்போது வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், கடைகளை மூடச்சொல்லி வற்புறுத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இடதுசாரிகள் ஆளும் கேரளா, மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் முழு அளவில் இருக்கும் என்று தெரிகிறது.

அதேபோல பாஜக ஆளும் குஜராத், கர்நாடகம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகாரிலும் முழு அடைப்பு போராட்டம் முழு அளவில் இருக்கும். குஜராத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.

ஆனால், காங்கிரஸ் ஆளும் ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தை முறியடிக்க அந்தந்த மாநில அரசுகள் மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. மகாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனை கட்சியின் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பந்துக்கு ஆதரவு தருவது குறித்து உத்தரப் பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவரைப் போலவே ராஷ்ட்ரீய ஜனதா தளம், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி ஆகியவையும் அமைதி காக்கின்றன. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி பந்தை ஆதரிக்கிறது.

கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள பாஜக பந்த்தை ஆதரித்தாலும் அது தொடர்பாக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதியாக உள்ளது. இதனால் நாளை அலுவலகங்கள், பஸ்கள் இயங்குமா இல்லையா என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துவிட்டாலும் அரசுப் பள்ளிகள் அமைதி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

பெங்களூரின் சாப்ட்வேர் உள்ளிட்ட பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துவிட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X