For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் டாக்டர் வெங்கடேஷை ஜெயலலிதா ஒதுக்கியது ஏன்?

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லை என்று காட்டுவதற்காக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேலும் சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது.

அந்த வகையில் டி.டி.வி.தினகரன், மகாதேவன் வரிசையில் டாக்டர் வெங்கடேஷும் கட்சியிலிருந்து மேலும் ஓரங்கட்டப்பட்டு அவரிடமுள்ள இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை அமைப்பின் செயலாளர் பதவியும் பறிக்கப்படலாம் எனறு கூறப்படுகிறது.

சமீபகாலமாக கட்சியில் சசிகலா குடு்ம்ப ஆதிக்கத்தைக் காரணம் காட்டியே பெரும்பாலான நி்ர்வாகிகள் விலகியுள்ளனர். விலகியவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்ன குற்றச்சாட்டு இந்த மன்னார்குடி வகையறாவைத் தாண்டி ஜெயலலிதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது தான்.

இந் நிலையில் சட்டசபை தேர்தல் வரும் நிலையில் கட்சியி்ல் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் தொடர்வதும், அவர்களால் நிர்வாகிகளை இழப்பதும் நல்லதல்ல என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்துள்ளதாகத் தெரிகிறது.

சசிகலாவின் தம்பி டி.டி.வி.தினகரன், அக்காள் மகன் மகாதேவன் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கட்சியை ஆட்டிப் படைத்து வந்தனர்.

அதே போல சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகனான டாக்டர் வெங்கடேஷ் திடீரென அதிமுகவில் பெரிய ஆளானார். தினகரனின் சகோதரியை மணந்துள்ள இவர் முதலில் போயஸ் கார்டனில் சிறுசிறு பணிகளை செய்து வந்தார்.

இந் நிலையில் 2008ம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக் குழுவில் இளம்பெண் பாசறை, இளைஞர் பாசறை என்ற அமைப்புகளை உருவாக்கி அதன் செயலாளராக டாக்டர் வெங்கடேஷை ஜெயலலிதா நியமித்தபோது அதிமுக ஆரம்பித்தது முதல் அதில் உறுப்பினர்களாக உள்ள லட்சக்கணக்கானவர்கள் அதிர்ந்தனர்.

இது யாரு.. என்று குழப்பத்துடன் ஆரம்பித்த அவர்களது கேள்விக்கு சசிகலா குடும்ப பின்னணியிலிருந்து வந்த அடுத்த நபர் என்ற விவரம் தெரியவந்ததும் வெறுப்பு இன்னும் அதிகமானது.

இவர் தனக்கு பதவி கிடைத்த வேகத்தில் மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செய்ய ஆரம்த்தார். இவரது சுற்றுப் பயணத்துக்கு கட்சி நிர்வாகிகள் தான் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

ஆனால், சுற்றுப்பயணத்தில் யாரையும் மதிக்காமல் இவர் நடந்து கொள்ள அதைத் தொடர்ந்து போயஸ் கார்டனுக்கு 'மொட்டை பேக்ஸ்கள்' பறக்க, அவருடைய சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதில் ஆரம்பித்து அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு வரை வெங்கடேசுக்கு முக்கியப் பங்கு தரப்பட்டது.

மேலும் அதிமுகவில் முதல்முறையாக மாவட்ட செயலாளர்களைக் கண்காணிக்க என்று பொறுப்பாளர்களை நியமித்தார் ஜெயலலிதா. முக்கிய பொறுப்பாளர்களுக்கு 2 அல்லது 3 மாவட்டங்கள் வீதம் பொறுப்பு வழங்கப்பட்டது.

டாக்டர் வெங்கடேசுக்கு மன்னார்குடி அடங்கிய தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மேற்கு, திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய 4 மாவட்ட பொறுப்புகள் தரப்பட்டன.

ஆனால், அந்த மாவட்ட நிர்வாகிகளை இவர் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந் நிலையில் நேற்று வெங்கடேஷுக்கு தரப்பட்ட பொறுப்பாளர் பதவியை பறித்துள்ளார் ஜெயலலிதா.

மேலும் இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஆனால், அதிமுகவில் சசிகலா குடும்ப உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவதும் பிறகு திடீரென அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்று, முக்கியப் பதவிகளைப் பிடிப்பதும் வழக்கமானதே.

இப்போது கூட மன்னார்குடியினர் ஆதிக்கத்தை கட்சியில் ஜெயலலிதா உண்மையிலேயே கட்டுப்படுத்துகிறாரா அல்லது தேர்தல் வருவதால் சசிகலா குடும்ப ஆதிக்கம் கட்சியில் இல்லை என்று தொண்டர்களுக்கு காட்டுவதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளாரா என்பது பகவானுக்கே வெளிச்சம்.

ஜெ. போராட்டத்துக்கு இடம் தேடும் அதிமுகவினர்:

இந் நிலையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகக் கூறி வரும் 24.8.2010ம் தேதி திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை திருச்சி வந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த இடம் தேடி சுற்றினர்.

ஊரை முழுவதுமாக சுற்றி வந்தும் சரியான இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து, மதுரை பைபாஸ் சாலை பஞ்சப்பூரில் உள்ள இடம், சென்னை பைபாஸ் ரோட்டில் உள்ள ஜெ.பி. நகர் மற்றும் கே.கே. நகரை சுற்றிப் பார்த்தனர்.

இந்த இடங்களும் அவர்களுக்கு திருப்தி அளிக்காததால், இறுதியாக திருச்சி உழவர் சந்தைக்கு அருகில் உள்ள இடத்தை தேர்வு செய்தனர்.

இந்த இடம் ஓ.கே. என்று அவர்கள் கொஞ்சம் மகிழ்ந்திருக்க, இந்த இடத்துக்கு காவல்துறையினர் அனுமதி தரவில்லை. இதனால் கடுப்பான அமைச்சர்கள் மீண்டும் இடம் தேடும் வேலையை ஆரம்பித்து திருச்சியை சுற்றி வருகின்றனர்.

அதிமுக விவசாய அணி ஆலோசனை கூட்டம்:

இதற்கிடையே ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக விவசாய பிரிவின் செயல்பாடுகளை ஊக்குவித்திடும் வகையிலும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கழக விவசாய பிரிவின் மாவட்ட ஆலோசனைக் கூட்டங்கள் வருகிற 25ம் தேதி முதல் ஆகஸ்டு 28ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இக்கூட்டங்கள் விவசாய பிரிவு தலைவர் துரை கோவிந்தராஜன், சோழன் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும். அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜெ மீது வீரபாண்டி பாய்ச்சல்:

இதற்கிடையே சேலத்தில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பணிகளை இன்று விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மேயர் ரேகா பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியர் கலையரசி ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த மருத்துவமனை வருவதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தான் காரணம் என்று சொல்கிறார்களே என்று வீரபாண்டி ஆறுமுகத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவரைப் பற்றி பேச நான் தயாராக இல்லை என்றார் கோபத்துடன்.

விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லை என்று முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) குறை கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ''முன்னாள் முதல்வர் யார்? அவர் ரெண்டாங்கட்ட முதல்வர்'' என்று கூறிவிட்டு நிருபர்களை விட்டு அகன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X