• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நான் “சமூக நீதி காத்த வீராங்கனை” ஆனது எப்படி?-ஜெ விளக்கம்

By Chakra
Google Oneindia Tamil News
Jayalalitha
சென்னை: இட ஒதுக்கீடு பிரச்சனையில் நான் எடுத்த உறுதியான நடவடிக்கைக்காகத் தான் “சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டம் எனக்கு அளிக்கப்பட்டது. கருணாநிதிக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின், தற்போது தன்னுடன் இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார், அண்ணா ஆகியோர் போராடிப் பெற்றுத்தந்த பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான உரிமை, எம்.ஜி.ஆரால் 1980ம் ஆண்டு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இத்துடன், தாழ்த்தப்பட்டோருக்கு 18 விழுக்காடு இட ஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடு இட ஒதுக்கீடும், ஆக மொத்தம் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தமிழகத்தில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்தது.

இந்தச் சூழ்நிலையில், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசுத் துறைகளிலும், நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கென 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்வதென மத்திய அரசு 13.8.1990 அன்று ஆணை வெளியிட்டது.

1991ம் ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், மண்டல் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் 27 சதவீதம் என்பதற்குப் பதிலாக, 50 சதவீதம் என்று இட ஒதுக்கீடு செய்வதைக் கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசுத் துறைகள், மத்திய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலை வாய்ப்புகளில் மட்டுமின்றி அனைத்துக் கல்வி நிலையங்களின் அனுமதியிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி, 30-9-1991 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஓரு தீர்மானம் என்னால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

13.8.1990லிருந்து 30.1.1991 வரை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றும், இது போன்ற ஒரு தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை. மாறாக, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முடிவினைப் பாராட்டி 21.8.1990 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் மீதான தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 16-11-1992 அன்று வழங்கியது. அந்தத் தீர்ப்பில், 4 மாத காலத்திற்குள்ளாக, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றைப் பரிசீலனை செய்ய நிரந்தரக் கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும், 6 மாத காலத்திற்குள்ளாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து முன்னேறிய பகுதியினரை நீக்க வேண்டும்;

மொத்த இட ஒதுக்கீடுகள் 50 சதவீத உச்ச வரம்பை மீறாத வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இது குறித்து 7-1-1993 அன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர், இட ஒதுக்கீட்டிற்கு 50 விழுக்காடு உச்சவரம்பு விதித்துள்ள ஆணைக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து முன்னேறிய பகுதியினரை நீக்க வேண்டுமென்ற ஆணைக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தில் 22.3.1993 அன்று தமிழக அரசின் சார்பில் 'மறு ஆய்வு மனு" தாக்கல் செய்யப்பட்டது.

இது மட்டுமல்லாமல், 'தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கமிஷன்" ஒன்று 15-3-1993 அன்று எனது அரசால் அமைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினையடுத்து, எனது ஆட்சியில் சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டம் 9.11.1993 அன்று கூட்டப்பட்டு, தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் சமூக மறுமலர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் ஊறு நேரா வண்ணம் எப்பொழுதும் போல், இனி வருங்காலம் முழுவதிலும், அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களின் அனுமதியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருக்கத்தக்க வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் விரைவில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் என்னால் முன்மொழி யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்தத் தமிழகமே இந்தத் தீர்மானத்தோடு ஒன்றியுள்ளது என்பதைப் பறைசாற்றும் வகையில், தமிழகம் தழுவிய பொதுவேலை நிறுத்தம் ஒன்று 16-11-1993 அன்று நடத்தப்பட்டது. மேலும் இது குறித்து விவாதிக்க, 26.11.1993 அன்று என்னால் அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டப்பட்டது.

இதனையடுத்து, சட்ட முன்வடிவு சட்டப் பேரவையில் 30.12.1993 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, 31.12.1993 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்ட முன்வடிவிற்கு 19.7.1994 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அன்றே இச்சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இது மட்டுமல்லாமல், இந்த சட்டத்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும் வகையில், இதற்கான திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 31.8.1994 முதல் நடைமுறைக்கு வந்தது.

இச்சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் வரிசை எண் 257ஏ-ல் சேர்க்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் எனது விடா முயற்சியால் நடைபெற்றன. இதன் இன்றியமையா அவசியத்தை உணர்த்த, தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, அன்றைய பிரதமரை சந்தித்து, இதைப் பற்றி விரிவாக விளக்கினேன்.

உண்மை நிலை இவ்வாறிருக்க, இட ஒதுக்கீடு பிரச்சனையில் நான் இரட்டை வேடம் போட்டதாக கருணாநிதி கூறுவது கண்டனத்திற்குரியது. இட ஒதுக்கீடு பிரச்சனையில் நான் எடுத்த உறுதியான நடவடிக்கைக்காகத் தான் “சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டம் எனக்கு அளிக்கப்பட்டது. கருணா நிதிக்கு இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின், தற்போது தன்னுடன் இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர் களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 1994ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக திமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். 69 விழுக்காடு பிரச்சனைக்காக பிரதமரை சந்திப்பதற்கு நான் ஓர் அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் சென்ற போது, அதில் கலந்து கொள்ள திமுக சார்பி ல்யாரையும் அனுப்பி வைக்கவில்லை.

மேலும், ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கும் வகையில், இதற்கான திருத்தச் சட்டம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது, திமுக உறுப்பினர்கள் மூன்று பேர் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X