For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டம் கோர்ட் அவமதிப்பல்ல-ஸ்டாலின்

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் திமுக இளைஞர் அணி போராட்டம் நடத்தத் திட்டமிடவில்லை என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு நேற்று ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

என் மீதான வழக்கு தாமதாகிறதே என்று கவலைப்படுகிறது திமுக. இதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்கள். அப்படியானால், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வெளியாகி பலமாதங்களாகியும் இன்னும் அதை அமல்படுத்தாமல் இருக்கும் கர்நாடகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்த முதல்வர் கருணாநிதி தயாரா என்று காட்டமாக கேட்டிருந்தார்.

மேலும், தனக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டம் சட்டவிரோதம், கோர்ட் அவமதிப்பு செயல், நீதிமன்றத்தையே மிரட்டும் வகையில் ஸ்டாலின் பேசுகிறார் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு நேற்று ஸ்டாலின் பதிலளித்தார். தஞ்சை திலகர் திடலில் தஞ்சை மாவட்டத்தின் சார்பில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஸ்டாலின் பேசுகையில்,

தலைமை கழகத்தின் அனுமதியை பெற்று, தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர் பேராசிரியர் அனுமதியை பெற்று தி.மு.க.வின் துணை அமைப்பான இளைஞரணி சார்பில் ஆகஸ்டு 4-ந் தேதி மிகப்பெரிய போராட்டத்தை, ஆர்ப்பாட்டத்தை தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நடத்த முடிவு செய்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையை பார்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொறுத்துக்கொள்ள முடியாமல் நாம் நடத்த இருக்கும் போராட்டம் எதற்காக என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். நாங்கள் குறிப்பிட விரும்புவது நாம் நடத்தும் ஆர்ப்பாட்டம் எதற்காக என்று தெளிவாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன். நீதிமன்றத்தை ஏமாற்றக்கூடிய, தொடர்ந்து வாய்தா வாங்கக்கூடிய அம்மையாரை எதிர்க்கட்சி தலைவர் என்று இனிமேல் சொல்ல கூடாது என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்து இருக்கிறோம்.

நீதிமன்றத்தை அவமதிக்கக்கூடிய வகையில், நீதிமன்ற வழக்கில் தலையிடும் வகையில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். நான் கேட்கிறேன், எங்கேயாவது நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி இருக்கிறோமா, இல்லையே. வழக்கை விரைவாக நடத்த வேண்டும் அதிலும் குறிப்பாக ஜெயலலிதா மீது போடப்பட்டுள்ள வழக்கு என்ன? சொத்துக்குவிப்பு வழக்கு. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சேர்த்து இருக்கிற சொத்து. வருமானவரித்துறையினரிடம் காண்பித்துள்ள கணக்கு. இவைகளை வைத்து தான் நமது பொதுச்செயலாளர் பேராசிரியர், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கு 1997-ல் தொடரப்பட்டது. அந்த 97-ம் ஆண்டில் இருந்து சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. 13 ஆண்டுகள் தொடர்ந்து நடக்கின்ற இந்த வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்காக, அதை நீட்டித்து அரசியல் லாபம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வாய்தா வாங்கிக் கொண்டு இருக்கிறார். இதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆர்ப்பாட்டம். நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை.

ஜெயலலிதாவிற்கு உண்மையிலேயே தெம்பு இருந்தால் இந்த வழக்கை சந்திக்கக் கூடிய தன்மையை பெற வேண்டுமே தவிர, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தி.மு.க. செயல்படுகிறது என்று பொய்யான தகவலை சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சமுதாயத்தில் வாழக்கூடிய ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சிறுபான்மை இன மக்களுக்காக அல்லும், பகலும் பாராமல் உழைக்கக்கூடிய தலைவரின் கரத்தை வலுப்படுத்துவோம். தலைவரின் ஆட்சிக்கு துணை நிற்போம் என்றார் ஸ்டாலின்.

6வது முறையும் முதல்வராக வருவார் கருணாநிதி

முன்னதாக நடந்த திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரித் திறப்பு விழாவின்போது, நலத் திட்ட உதவிகளை வழங்கி ஸ்டாலின் பேசியதாவது...

கடந்த 25 நாட்களுக்கு முன்னால் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்னை சந்தித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது. அதற்குரிய அங்கீகாரத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்றிருக்கிறோம். எனவே, அதனுடைய திறப்பு விழா நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்று குறிப்பிட்டார். அதற்குரிய கோப்புகளை எல்லாம் தயாரித்து இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம் என்று திட்டமிட்டபோது, நானும், அவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் கலந்து பேசி ஏற்கனவே, இந்த கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

எனவே, முதல்வர் கருணாநிதியையே திறப்பு விழாவிற்கும் அழைக்கலாமா என்று ஆலோசித்தோம். அவருக்கு இருக்கக்கூடிய உடல்நலத்தைப் பொருத்தவரையில் சென்னையில் இருந்து வீடியோகான்பரன்சிங் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியை அவர் திறந்துவைக்கவும், நாமெல்லாம் திருவாரூருக்கு சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா என்று யோசித்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நேரத்தில் முதல்வர் கருணாநிதி எங்களை அழைத்து எங்களுக்கு உத்தரவிட்டார்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியை வீடியோகான்பரன்சிங் முறையில் திறந்து வைக்க விரும்பவில்லை. நானே நேரடியாக வந்து திறந்துவைக்கிறேன் என்று உறுதியோடு எங்களிடத்தில் எடுத்து சொன்னார். எதற்காக நான் இதை எடுத்து சொல்கிறேன் என்றால் எந்தளவுக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் அவர் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

திருவாரூர் நகரத்தில் இருக்கக்கூடிய போர்டு ஹைஸ்கூலில்' நமது கலைஞர் படிக்க இடம் கேட்ட நேரத்தில், அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியாது என்று அந்தப் பள்ளிக்கூட நிர்வாகம் மறுத்தபோது, என்னை சேர்க்கவில்லை என்று சொன்னால் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு எதிரிலே இருக்கக்கூடிய கமலாலய குளத்திலே நான் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தி, அதற்கு பிறகு தனது உணர்வை வெளிப்படுத்தி அதையடுத்து அவர்கள் அந்தப் பள்ளியிலே சேர்ந்த வரலாறு உண்டு.

முதல்வரின் வரலாற்றைப் பற்றி தெரிந்தவர்களுக்கு இது நன்றாக தெரியும். இதை நான் குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம், திருவாரூர் நகரத்திலே பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு போராடி அதிலே தலைவர் கலைஞர் வெற்றி கண்டாரோ, அப்படிப்பட்ட திருவாரூருக்கு கல்வியைப் பொருத்தவரை எந்தளவுக்கு வளர்ச்சியை அவர் உருவாக்கித் தந்திருக்கிறார் என்பதை தயவுசெய்து நீங்கள் எல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இங்கே இருக்கக்கூடிய அரசு கலைக் கல்லூரி, மத்திய பல்கலைக் கழகம், புதிய பல்தொழில்நுட்பக் கல்லூரி, இன்றைக்கு திறந்து வைக்கப்படும் அரசு மருத்துவக் கல்லூரி, இவையெல்லாம் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டு இந்த மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய வகையிலே நிகழ்த்தப்பட்ட சாதனைகள் ஆகும்.

அந்த நிலையிலேயேதான் உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, தலைவர் கருணாநிதி ஆட்சியிலே, தேர்தல் நேரத்தில் எடுத்து சொன்ன உறுதிமொழிகள், வாக்குறுதிகள், எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் எல்லாம் உணர்ந்திட வேண்டும். ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய் வழங்கும் திட்டமாக இருந்தாலும், 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையாக இருந்தாலும், கலைஞர் காப்பீட்டுத் திட்டமாக இருந்தாலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டமாக இருந்தாலும் இப்படி பல திட்டங்களை தலைவர் கருணாநிதி தலைமையில் அமைந்திருக்கும் தி.மு.க. அரசு தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த நிதிநிலை அறிக்கையிலே அறிவிக்கப்பட்ட திட்டம்-இனி தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்கக்கடாது. அதற்கு மாற்றாக அத்தனை பேருக்கும் கான்கிரீட் வீடுகளை கட்டித் தருவது என்ற உன்னதமான திட்டத்தை அறிவித்து, அந்த திட்டத்தின்படி 6 ஆண்டு காலத்தில் ஏறத்தாழ 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனுடைய தொடக்கமாக இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இதை குறிப்பிடுகிறபோது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். 6 ஆண்டு காலம் என்று சொல்கிறீர்களே 2011-ம் ஆண்டு வரைதானே இந்த ஆட்சி நடக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு பிறகு தேர்தல் வருகிறது, அதையடுத்து புதிய ஆட்சிதானே உருவாகும் என்று நினைக்கலாம்.

நான் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன். மீண்டும் 6-ம் முறையாக தலைவர் கலைஞருடைய ஆட்சிதான் வரும். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் 21 லட்சம் கான்கிரீட் வீடுகளும் கட்டி முடிக்கப்படும் என்று உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X