For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தியமங்கலம் காட்டுக்குள் நக்சல்கள் ஊடுறுவலாம்-உளவுத்துறை எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Sathyamangalam Forest
சென்னை: வீரப்பனின் கோட்டையாக பல காலம் திகழ்ந்து வந்த சத்தியமங்கலம் காட்டுக்குள் நக்சலைட்கள் நுழைய முயற்சிக்கிறார்கள். நுழைந்து விட்டால் பேராபத்து என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் நக்சலைட்கள் அட்டகாசம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர், ஆந்திரா ஆகியவற்றில் இவர்களின் கொட்டம் அடக்க முடியாத அளவுக்கு கடுமையாக உள்ளது.

காவல் நிலையம் தகர்ப்பு, ரயில்கள் தகர்ப்பு, பேருந்துகள் தகர்ப்பு, கடத்தல் என அட்டூழியமாக உள்ளது. இவர்களிடம் சிக்கி இதுவரை பல நூறு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். இவர்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது.

கிரீன் ஹன்ட் என்ற பெயரில் தற்போது நக்சல்களை வேட்டையாடி வருகின்றனர் பாதுகாப்புப் படையினர்.

இந்தியாவின் மத்திய பகுதியில் அட்டகாசம் செய்துவரும் நக்சலைட்கள் தற்போது தென் மாநிலங்களுக்கு தங்களது கவனத்தை திருப்பியுள்ளனராம். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தின் முக்கிய பகுதிகளில் ஊடுறுவ திட்டமிட்டுள்ளனர்.

இந்த மூன்று மாநிலங்களுக்கும் எளிதில் வந்து போகக் கூடிய வகையிலான ஒரே பகுதியாக சத்தியமங்கலம் வனப்பகுதி திகழ்கிறது. இந்த பகுதியில்தான் முன்பு சந்தனக் கடத்தல் வீரப்பன் அட்டகாசம் செய்து வந்தான். கர்நாடக போலீஸ் படை வேட்டையாட வந்தால் தமிழக பகுதிகளுக்குள் வந்து விடுவான். தமிழகத்திலிருந்து நெருக்குதல் வந்தால் கர்நாடகத்திற்குள் ஓடி விடுவான். சில சமயம் கேரள பகுதிக்கும் போய் விடுவான்.

இதனால்தான் அவனைப் பிடிக்க முடியாத நிலை நிலவி வந்தது. ஆனால் தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் ஒன்று சேர்ந்து நெருக்கியதால்தான் அவனது கூட்டம் குறைந்து கடைசியில் போலீஸாரால் வேட்டையாடப்பட்டான் வீரப்பன்.

மிகுந்த அடர்ந்த வனப்பகுதி சத்தியமங்கலம் காடு. உள்ளே போய் விட்டால் யாரையும் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அடர்ந்த வனப்பகுதி இது.

முன்பு வீரப்பனுக்கு இப்பகுதி மலை கிராம மக்கள் உதவியாக இருந்தனர். இதனாலும் கூட வீரப்பனை அண்ட முடியாத நிலை இருந்தது. அதற்கேற்ப வீரப்பனும், இந்த கிராம மக்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளான்.

இந்த பகுதியைத்தான் தற்போது நக்சலைட்கள் குறி வைத்துள்ளனர். வீரப்பனைப் போல இந்த பகுதி கிராம மக்களை நம் பக்கம் திருப்பி விட்டால், அவர்கள் நமக்கு சரியான பாதுகாப்பாக விளங்குவார்கள். சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் புகுந்து விட்டால் மிகச் சரியான பாதுகாப்பு கோட்டையாக அது மாறி விடும் என நக்சல்கள் திட்டமிட்டுள்ளனராம்.

இதுகுறித்து சமீபத்தில் பிடிபட்ட ஆந்திர மாநில நக்சல் தலைவர் ஒருவர் கூறுகையில், மத்திய, மாநில போலீசார் பசுமை வேட்டை என்ற பெயரில் எங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் நாங்கள் தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் காட்டுக்குள் முகாம்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இப்பகுதி அடர்ந்த காடாக உள்ளது. பதுங்கி இருப்பதற்கு ஏற்ற நல்ல இடங்கள் அதிகம் காணப்படுகிறது.

சத்தியமங்கலம் காட்டில் அமைய உள்ள தனிப்பிரிவுக்கு மல்லாராஜி ரெட்டி என்பவரை தலைவராக நியமித்துள்ளோம். அவரும், சத்தியமங்கலம் காட்டுப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். அங்குள்ள ஆதிவாசி மக்களும் நக்சலைட்டுகளுக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளனர்.

தமிழகத்தில் எங்களுக்கு கடலூர், தர்மபுரி பகுதிளில் ஆதரவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களின் உதவியையும் நாடி உள்ளோம்.

இதே போல் கர்நாடகத்தில் சிக்மகளூர், உடுப்பி பகுதிகளிலும் கேரளாவில் கண்ணூரிலும் எங்களது ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால் எங்களால் மிக எளிதாக முகாம் அமைத்து செய்பட முடியும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து தென் மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஏராளமான முகாம்கள் அமைக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ரகசியமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தமிழகம், கர்நாடகம், கேரளா போலீசார் சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் உஷாராக இருக்க வேண்டும். அங்கு பாதுகாப்பை பலப்படுத்தினால் நல்லது என எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே, தென் மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுப்பது பற்றி ஹைதராபாத்தில், ஆகஸ்ட் 11ம் தேதி தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் டி.ஜி.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X