For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலித் சமுதாய துணைவேந்தரை அடித்த திமுக எம்.எல்.ஏ-ஜெ. புகார்

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ். காளியப்பனை திமுக எம்.எல்.ஏ மாலைராஜா அடித்துத் தாக்கியதாக கூறப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதி விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இந்த விழா தொடங்குவதற்கு சற்று முன்னதாக திருநெல்வேலி தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் என். மாலைராஜா நேராக துணை வேந்தர் அறைக்குள் நுழைந்து, விழாவில் கலந்து கொள்ள ஆயத்தமாக இருந்த துணைவேந்தர் டாக்டர் எஸ். காளியப்பனை சராமாரியாக அடித்து தாக்கியுள்ளதாகவும், இதைத் தடுக்கச் சென்ற உடற்கல்வி இயக்குநர் தேவதாஸையும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தாக்கியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

பின்னர், விழா அரங்கத்திற்கு வந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா சிறிது நேரம் இருந்துவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து, துணைவேந்தரிடம் தொலைபேசியில் கேட்டதற்கு, நான் மீட்டிங்கில் இருக்கிறேன், அப்புறம் பேசுகிறேன் என்று மிகுந்த அச்சத்தோடும், பதற்றத்தோடும் கூறியிருக்கிறார். இதிலிருந்தே தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.

2008-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சியின் போது, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தனித் துணை ஆட்சியரை, தமிழக சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் மற்றும் சிலர் சாதிப் பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

அரசு கேபிள் நிறுவனத்திலும், எல்காட் நிறுவனத்திலும் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்.

தற்போது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்படுகிறார்.

இச்சம்பவத்தை முதல்வர் கருணாநிதியோ அல்லது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஸ்டாலினோ கண்டிக்கவில்லை. மாறாக, சம்பவத்தையே மூடி மறைக்கும் வேலையைத் தான் செய்கின்றனர்.

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ். காளியப்பன் மற்றும் உடற்கல்வி இயக்குநர் தேவதாஸ் ஆகியோர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் என். மாலைராஜாவால் தாக்கப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற தாக்குதல்கள் இனியும் தொடர்ந்தால் அதிமுக போராட்டக் களத்தில் குதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, மேற்படி தாக்குதலுக்குக் காரணமான தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் என். மாலைராஜா மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X