மதானி கைதாவதில் தொடர்ந்து தாமதம்-கேரள போலீஸ் விளக்கம்
கொல்லம்: மதானியை கைது செய்ய வந்துள்ள கர்நாடக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என கொல்லம் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
பெங்களூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தொடர்பு குண்டுவெடிப்புகளில் வங்கதேசத்தை சேர்ந்த நசீர் உள்ளிட்ட 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானிக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை இவ்வழக்கில் 31வது குற்றவாளியாக மதானியை சேர்த்து போலீசார் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கிற்கும், தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறிய மதானி தன்ணை கர்நாடக போலீசார் வேண்டுமென்றே இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளதாகவும் முன்ஜாமீன் கேட்டு பெங்களூர் சி்ட்டி நீதிமன்றம், செசன்ஸ் நீதிமன்றம், ஐகோர்ட் ஆகியவற்றில் மனுதாக்கல் செய்தார்.
ஆனால் நீதிமன்றங்கள் அம்மனுக்களை தள்ளுபடி செய்து அவரை கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று பெங்களூர் டிஎஸ்பி சித்தராமைய்யா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படையினர் கொச்சி வழியாக கொல்லம் வந்தனர். மதானியை கைது செய்வது குறித்து கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்சிதாவுடன் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து எஸ்பி ஹர்சிதா நிருபர்களிடம் கூறியதாவது,
கொல்லத்திற்கு மதானியை கைது செய்ய வந்துள்ள கர்நாடக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முழு பாதுகாப்பு அளிக்கப்படு்ம். சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை. முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கேரள மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தற்போது விஜயவாடாவில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளதால் அவருடன் கலந்து காவல்துறை அதிகாரிகள் பேசிய பின்புதான் மதானி கைது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.