பஞ்சாயத்து கிளர்க் மனைவியை கடத்திய தமிழாசிரியருக்கு வலைவீச்சு
குளித்தலை: குளித்தலை அருகே பஞ்சாயத்து கிளர்க் மனைவியை பள்ளி தமிழாசிரியர் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை அருகே ஆலத்தூரைச் சேர்ந்தவர் மாணிக்கம் (40). இவர் ஆலத்தூர் பஞ்சாயத்தில் கிளர்க்காக உள்ளார். இவரது மனைவி மணிதேவி (25). இவர் திருச்சியை அடுத்த சீனிவாசபுரத்தில் உள்ள சரஸ்வதி பாலமந்திர் மெட்ரிக் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
ஆலத்தூரில் இருந்து திருச்சிக்கு தினமும் பேருந்தில் சென்று வந்தார். அதே பள்ளியில் பணிபுரியும் திருச்சியைச் சேர்ந்த தமிழாசிரியர் முருகானந்தத்துக்கும், மணிதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இது குறித்து மணிதேவி கணவர் மாணிக்கம் மற்றும் தந்தை லட்சுமணனுக்கு தெரிய வந்தது. இதை இருவரும் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆலத்தூரில் இருந்து மணிதேவியை முருகானந்தம் கடத்திச் சென்று விட்டதாக தோகமலை போலீசில் மாணிக்கம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்குப் பதிவு செய்து முருகானந்தத்தை வலை வீசித் தேடி வருகின்றார்.