For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'பீதியை கிளப்பி மக்களை அச்சுறுத்தும் ஜெ': சென்னை மேயர்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: கொடநாட்டில் இருந்து கொண்டு யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையில் கையொப்பம் இட்டு அறிக்கை வெளியிட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வேண்டுமானால் தண்டையார்ப்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து பார்த்து விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தட்டும் என்று சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடசென்னை பகுதிகளில் கடந்த 10 ஆண்டு நோய் கணக்கின்படி, இந்த 3 ஆண்டுகளில் காலரா மற்றும் வயிற்று போக்கு மாநகராட்சி சுகாதாரத்துறையின் சீரிய பணியின் காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 1600க்கும் மேற்பட்டவர்கள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க இயலாத நிலையில், மாநகராட்சி சுகாதாரத்துறை சிறந்த புகலிடமான தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் கூட உயிர் இழப்பின்றி காப்பாற்றப்பட்டனர் என்பது தேசிய அளவில் பாராட்டப்பட்ட முக்கிய நிகழ்வாகும்.

மாநகராட்சியின் தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 250 படுக்கைகளுடன் கூடிய அதிநவீன வகையில் ரூ. 21 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது டிசம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடும் நிலையில் உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, சர்க்கரை நோய்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நவீன மைக்ராஸ்கோப் கருவிகள் வாங்கப்பட்டு மலேரியா நோய் கண்டறியப்பட்டு, இலவசமாக மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

மூத்த குடிமகன்கள் பயன் பெற வட சென்னையிலும், தென் சென்னையிலும் இரண்டு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே போன்று, பொதுமக்களின் நலன்களுக்காக இரண்டு பல் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆறு நவீன ரத்த பரிசோதனை நிலையங்கள் தொடங்கப்பட்டு மிகக் குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அது மட்டுமல்லாமல் எக்ஸ்ரே, அல்ட்ரா-சவுண்ட் இ.சி.ஜி போன்றவைகளும் மிகக் குறைந்த கட்டணத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொது மக்களின் மேலும் பயன் பெறுவதற்காக வீடுதோறும் ரத்த பரிசோதனை திட்டமும் நடைபெற்று வருகிறது.

140 வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 3.50 லட்சம் பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர். அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் வருடம் இரண்டு முறை பூச்சி கொல்லி மருந்துகள் 5 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வருடங்களில் 45 மருத்துவர்கள், 80 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை சைதாப்பேட்டையிலும், பெருமாள் பேட்டையிலும் இயங்கி வந்தது விரிவாக்கப்பட்டு 9 மண்டலங்களில் செயல்படும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

93 ஆரம்ப சுகாதார மையங்களிலும் இலவச ஸ்கேன் வசதி செய்யப்பட்டுள்ளது. போதுமான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை இத்தனை மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் இந்த வேளையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 10 ஆண்டு காலமாக தமிழக முதல்வராக இருந்தபோது, ஒரு முறை கூட தண்டையார்ப்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையை வந்து பார்த்ததில்லை.

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தால் நோய் தொற்றிக் கொள்ளும் என்று எண்ணி வராமல் இருந்திருக்கலாம்.

ஆனால் மக்கள் பணி ஆற்றிடும் முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி நவீன தொற்றுநோய் மருத்துவமனை கட்டிவரும் சென்னை மாநகராட்சி குறித்து ஜெயலலிதா விமர்சனம் செய்வது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்ததில், காலரா இல்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

கொடநாட்டில் இருந்து கொண்டு யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையில் கையொப்பம் இட்டு அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேண்டுமானால் தண்டையார்ப்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து பார்த்து விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தட்டும்.

அதே நேரத்தில் பீதியை கிளப்பி விட்டு மக்களை அச்சுறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உண்மை நிலையை பொதுமக்கள் அறிவதற்காக, இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளேன் என்பதை சொல்லிட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X