For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி-60 வயதைத் தாண்டிய 11 பல்கலைக்கழக பேராசிரியர்கள் நீக்கம்

Google Oneindia Tamil News

திருச்சி: 60 வயதைத் தாண்டிய 11 பேராசிரியர்களை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கூட்டம் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதில், 60 வயதைக் கடந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, முனைவர்கள் ச.சு. ராமர் இளங்கோ, க. நெடுஞ்செழியன் உள்பட 11 பேராசிரியர்கள் நீக்கப்பட்டனர்.

இந் நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துணைவேந்தர் மீனா பதிலளிக்கையில்,

ஆட்சிக் குழுக் கூட்டத்தில், 60 வயதைக் கடந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில்தான் செயல்படுத்தப்பட்டது. இதில், தனிப்பட்ட முறையில் எந்தவித நோக்கமும் இல்லை என்று விளக்கினார்.

இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பெ. கோவிந்தசாமி கூறும்போது,

ஆட்சிக் குழுக் கூட்டத்தில் 60 வயதைக் கடந்த பேராசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அவர்களுக்கு 65 வயது வரை நீட்டிப்பு அளிக்கலாம் எனத் துணைவேந்தர் தெரிவித்தார். ஆனால், அதை உயர் கல்வித் துறைச் செயலர் கணேசன் மறுத்தார்.

60 வயதைக் கடந்தவர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது என அரசாணை உள்ளதாகவும் செயலர் குறிப்பிட்டார். மேலும், இந்தத் தீர்மானத்துக்கு ஆட்சிக் குழு உறுப்பினர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் முன்னாள் துணைவேந்தர் பொன்னவைக்கோவின் பதவிக் காலத்தில் இறுதியாக நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டவை. அந்தத் தீர்மானங்கள் கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டவை.

ஆனால், ஆய்வுத் திட்டங்கள் மேற்கொண்டு வரும் கெளரவப் பேராசிரியர்களை நீக்கவில்லை. திறமையானவர்களைத் தக்க வைத்துள்ளோம். நீக்கப்பட்ட பேராசிரியர்களிடம் எந்தவித ஆய்வுத் திட்டங்களும் கையில் இல்லை. என்றாலும், அவர்களுடைய திறமையைச் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.

இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து பொன்னவைக்கோ கருத்து தெரிவிக்கையில்,

என்னுடைய பதவிக் காலத்தில் நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்தில் இதுபோன்ற பொருள்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதுதொடர்பாக, ஆட்சிக் குழுக் கூட்ட நிகழ்வு புத்தகத்தில் எந்தவிதக் குறிப்பும் இல்லை. இறுதியாக நடைபெற்ற ஆட்சிக் குழுக் கூட்டத்திலும் என்னை வாழ்த்தி அனுப்புவதற்கான தீர்மானம்தான் நிறைவேற்றப்பட்டதே தவிர, எந்தப் பொருளும் கொண்டு வரப்படவில்லை.

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு விதிமுறைப்படி, முழு நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கெளரவப் பேராசிரியர்கள், வருகைதரு பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 65 எனப் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நிர்ணயம் செய்துள்ளது.

மேலும், உயராய்வு மையங்களில் அனுபவமிக்கவர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு உள்பட்டவர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டும் என அரசாணையில் இல்லை. இந்த விதிமுறைகள் எனக்கு நன்றாகத் தெரியும்.

மேலும், தற்போதைய பல்கலைக்கழக நிர்வாகம் செய்த தவறை மறைக்க என் பெயரைப் பயன்படுத்துகின்றனர் என்று தெளிவுபடுத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X