For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலைகாரனாக மட்டும்தான் இந்தியா செயல்படுமா?-தாமரை

Google Oneindia Tamil News

Thaamarai
இலங்கை விஷயத்தில் இந்தியா போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ள திமுக எம்பி டி ஆர் பாலுவுக்கு திரைப்பட பாடலாசிரியை தாமரை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி தந்துள்ள கவிஞர் தாமரை, "இந்தியாவால் போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது. ஆனால் கொலைகாரனாக மட்டும் நடந்து கொள்ள முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகைக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டியில்,

"யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா தனது உதவிகளைத் தொடரும். ஆனால், அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரன் வேலையை இந்தியாவால் செய்ய முடியாது," என்று கூறியுள்ளார்.

டிஆர் பாலு தமிழரா... இந்தியரா... சிங்களவரா?

டி.ஆர்.பாலுவின் இந்த பேட்டி பற்றி பேசிய கவிஞர் தாமரை, "தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய இராணுவ பாசறைகள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும் இவரது குழுவினரும் ராஜபக்சேவின் விருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?

இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும், தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே... அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்லத் தயாராக இருக்கிறேன்.

டி.ஆர்.பாலுவின் கூற்றுப்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியுமா?" என்று காட்டமாகக் கேட்டார்.

'பசில்தான் கிங்'

அதே பேட்டியில், டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து ஈழ உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

'இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினீர்களா?' என்ற கேள்விக்கு
"ஆம். சந்தித்துப் பேசினோம். அவர்தானே இன்று 'கிங்' ஆக உள்ளார். அவருடன் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது," என கூறியிருக்கிறார்.

பசில் ராஜபக்சேவை கிங் என்று டி.ஆர்.பாலு கூறியிருப்பது ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X