கார் இறக்குமதி வழக்கு-நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

1994ம் ஆண்டு லண்டனில் இருந்து புதிய லெஸ்ஸஸ் சொகுசு காரை இறக்குமதி செய்து, அதை பழைய கார் போல காட்டி வரி ஏய்ப்பு செய்த புகார் தொடர்பாக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
நடராஜன் தவிர சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ் மற்றும் சென்னை வங்கியின் முன்னாள் மேலாளர் சுசரிதா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் பாலகிருஷ்ணன் தவிர மற்ற 4 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடராஜன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் 4 பேரின் தண்டனைகளையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
மேலும் 4 பேரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
இதன்படி இன்று சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் முன் நடராஜன், பாஸ்கரன், யோகேஷ் ஆகியோர் நேரில் ஆஜராகி ரூ.10,000க்கான இரு உத்தரவாதங்களை சமர்பித்து ஜாமீன் பெற்றனர்.
இந்த மூவரும் வரும் அக்டோபர் 1ம் தேதியும், அதன் பின்னர் 3 மாதத்துக்கு ஒருமுறையும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ரவீந்திரன் உத்தரவிட்டார்.
சிபிஐ நீதிமன்றத்தில் உமாசங்கர் ஆஜர்:
இந் நிலையில் சுடுக்காட்டு கூரை ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் இன்று ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகன்நாதன், இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் இதை விரைந்து விசாரித்து முடிக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.