கருணாநிதி குறித்து அவதூறுப் பேச்சு-எஸ்.எஸ்.சந்திரனுக்கு முன்ஜாமீன் மறுப்பு
நெல்லை: முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் நடிகரும், அதிமுக முன்னாள் எம்.பியுமான எஸ்.எஸ்.சந்திரனுக்கு முன்ஜாமீ்ன் மறுக்கப்பட்டுள்ளது.
நெல்லை டவுன் வாகையடி முனையில் கடந்த 8ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக முதல்வர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை டவுன் போலீசில், தி.மு.க. பிரதிநிதி ராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், எஸ்.எஸ்.சந்திரன், முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரி நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி விஜயராகவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் பொன்னம்பலநாதன் ஆஜராகி நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது தேனி, நெய்வேலி, திருச்செந்தூர் உள்பட பல ஊர்களில் வழக்கு உள்ளது. எனவே அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.
இதையடுத்து சந்திரனின் முன்ஜாமீன் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.