For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''காங்கிரசுடன் கூட்டணி சேர துடிக்கும் ஜெயலலிதா'': கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
கடலூர் & நாகை: சோனியா காந்தியை பதிபக்தி இல்லாதவர் என்று கூறிய ஜெயலலிதா இப்போது காங்கிரசுடன் எப்படியாவது கூட்டணி சேரத் துடிக்கிறார். ஆனால், டெல்லியில் உள்ளவர்கள் பச்சை குழந்தைகள் அல்ல என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

கடலூரில் கலைஞர் வீடு வழங்கும் திட்ட'த்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை கருணாநிதி நேரில் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: கலைஞர் வீடு வழங்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது?

பதில்: இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக தொடங்கப்பட் டுள்ளது. மக்கள் மத்தியில் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கேள்வி: தமிழகம் முழுவதும் எவ்வளவு வீடுகள் கட்டப் போகிறீர்கள்? இப்போது எவ்வளவு கட்டி முடிக்கப்பட்டுள்ளன?

பதில்: ஆறு ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகளை கட்டி முடிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டு, இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறோம். பணிகள் விரைந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. தொடர்ந்து வீடுகள் கட்டி முடிந்தவுடன் ஆங்காங்கு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும்.

கேள்வி: திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி தங்களது கருத்து?

பதில்: கூட்டணி மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்று திருச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அம்மையார் சொல்லியிருக்கிறார். அதையே நானும் சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி: உங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: அது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.

கேள்வி: கடந்த தேர்தலின் போது மக்கள் பயனடையும் திட்டங்களை, இலவச திட்டங்களை ஏராளமாக அறிவித்து எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி விட்டீர்கள். அடுத்து நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் திட்டமாக எதை அறிவிப்பீர்கள்?

பதில்: ஆட்சிக்கு வந்தவுடன் அது அறிவிக்கப்படும் என்றார்.

திமுக அரசியல் காரணத்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல:

பின்னர் நாகையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி கூறுகையில், நாகை எனக்கு புதிய ஊர் அல்ல. ஒரு காலத்தில் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் இங்கு வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளேன். எத்தனை முறை வந்து உங்களை சந்தித்தாலும் உங்களுக்கும், எனக்கும் ஒருபோதும் தெவிட்டப்போவது இல்லை. யாருக்கும் சொந்த ஊருக்கு போவது என்பது மகிழ்ச்சி தானே.

திமுக ஏதோ ஒரு அரசியல் காரணத்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல என்பதை பலமுறை நான் கூறியுஉள்ளேன். இது ஒரு சமுதாய இயக்கம். பெரியார் சுயமரியாதை உணர்வோடு தமிழர்கள் வாழ வேண்டும் என்று பாடுபட்டார். அந்தப் பயிற்சி பாசறையில் இருந்து வந்த அண்ணா 49ம் ஆண்டு உருவாக்கியது இந்த இயக்கம். இதை கட்டிக்காக்கிற பொறுப்பு நமக்குள்ளது.

தீண்டாமை கொடுமைக்கு ஆளாகிய சாமானிய மக்கள் இன்று மற்றவர்களோடு சமமாக ஒரே பகுதியில் சமத்துவபுரத்தில் வாழ்கிறார்கள். இது தான் திமுகவின் சமுதாய கொடை. சிறுபான்மை இன, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திமுக விளங்கி வருகிறது.

திமுக அரசு இஸ்லாமிய மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது. இதனை சிலர் கேலி, கிண்டல் பேசினார்கள். அறிக்கை விடுத்தார்கள். அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். இஸ்லாமிய மக்களுக்கு அளித்த 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய காரணத்தால் தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் 5,034 இஸ்லாமிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இப்படிப்பட்ட நற்செயல்கள் திமுக ஆட்சியில் ஒன்றல்ல, இரண்டல்ல.

நாகை மாவட்டம் திராவிட இயக்கத்தின் பூர்வீக மாவட்டம். திராவிட இயக்கத்துக்கு சொந்தக்காரர்கள் நாம். திராவிட இயக்கத்தின் கலாசாரம், நாகரீகம், பண்பாட்டிற்கு சொந்தக்காரர்கள். இதை அழிக்க, ஒழிக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டனர். இந்த மக்கள் தங்களுக்கு அடிமையாக வேண்டும் என்று எண்ணியவர்கள் ஏமாந்து விட்டனர். அதற்கு காரணம் பெரியார், அண்ணா. பெரியாரின் எண்ணத்தை, அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுவதால் இந்தியாவில் திராவிட இயக்கமா? என கேள்விக்குறி எழுப்பியவர்கள் இன்று ஆச்சரியக்குறியுடன் பார்க்கிறார்கள்.

ஆம், நாம் பாதாளத்துக்கு செல்ல வேண்டி உள்ளது:

திருவாரூர், நாகை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்கு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிரம்பி உள்ளனர். திமுக அரசு விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது.

ஆனால் ஜெயலலிதா தமிழ்நாடு பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறியதாக துரைமுருகன் இங்கு கூறினார். ஆம் நாம் பாதாளத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காத போது பாதாளத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து அவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.

இந்த கம்யூனிஸ்டுகள் வேறு..:

இந்த அரசு விவசாயிகளின் அரசாக திகழ்ந்து வருகிறது. இதை கூறினால் கம்யூனிஸ்டு கட்சிகள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் ஏற்கும் காலம் வரும்.

ரஷியாவில் உள்ள கம்யூனிச கொள்கை புனிதமானது. ஏழைகளை வாழ வைக்கிறது. தொழிலாளர்களுக்கு உதவுகிறது. உழைப்பாளிகளுக்கு பெருமை சேர்க்கிறது. ஆனால் இந்தியாவில் குறிப்பாக இப்போது உள்ள கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்துக்கு எதிராக உள்ளனர். நான் ஜீவானந்தம், சீனிவாச அய்யர், கல்யாணசுந்தரம், ராமமூர்த்தி போன்ற தலைவர்களை அறிவேன். அவர்கள் வேறு. இப்போது உள்ள கம்யூனிஸ்டுகள் வேறு.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்iனிஸ்டு கட்சி தலைவர்கள், முதல்வரான என்னை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்கள். அதில் தலித் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து பங்களா கட்டி உள்ளனர். அவர்களை வெளியேற்றி நீதி வழங்க வேண்டும் என்று கூறினர். அவர் யார்? என்று நான் கூற விரும்பவில்லை. கம்யூனிஸ்டுகளும் அதை விரும்ப மாட்டார்கள். ஊர் பெயரை மட்டும் கூறுகிறேன் சிறுதாவூர்.

சிறுதாவூர் பக்கம் போய்விட்டார்கள்:

இதை கூறியவர்கள் கம்யூனிஸ்டு கட்சியின் பெரிய தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில பொறுப்பில் உள்ளவர்கள். அப்படிபட்டவர்கள் கொடுத்த மனுவை மதித்து நடவடிக்கை எடுத்தேன். நடவடிக்கை எடுத்த 10 நாட்களுக்குள் அவர்கள் சிறுதாவூர் பக்கம் போய்விட்டார்கள்.

அதனால் நாங்கள் எடுத்த நடவடிக்கைக்கு அவர்களால் ஆதரவு அளிக்க முடியவில்லை. நடவடிக்கைக்கு ஆளானவர்கள் எங்களை திட்டுவார்கள் என்றால் எதிர்க்கட்சி தலைவியோடு கூட்டணி சேர பார்க்கும் கம்யூனிஸ்டு கட்சியினரும், அவர்களோடு சேர்ந்து எதிர்கோஷம் போடுகிறார்கள். மனசாட்சி உள்ள கம்யூனிஸ்டு கட்சியினர் இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசியலில் கூட்டணி வரலாம், போகலாம். கூட்டணிகள் நிரந்தரமானது அல்ல. கொள்கை அடிப்படையில் தான் கூட்டணி. சோனியாவை அரசியலில் இருந்தே விரட்ட வேண்டும் என்று மதவாத கட்சிகள் ஆர்ப்பரித்த போது தெற்கே இருந்து ஒரு குரல் சோனியா காந்திக்கு ஆதரவாக எழும்பியது. திமுக தான் அவருக்கு ஆதரவு கரத்தை நீட்டியது.

மதவாதத்தை கிளப்பிய பாஜக போன்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்காமல், அவர்கள் எதிர்த்த சோனியா காந்திக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆதரவு கரம் நீட்டினோம். இன்றும் அவர்கள் பக்கத்தில் இருக்கிறோம்.

கூட்டணி மகிழ்ச்சியாக உள்ளது:

திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தமிழகத்தில் கூட்டணி மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். ஆம் அவர் கூறியது போல் கூட்டணி மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி மகிழ்ச்சியாக உள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது என்ற சில சூழ்ச்சிக்காரர்களுக்கு அவர் அளித்த விளக்கம். திமுக- காங்கிரஸ் கூட்டணி என்று அவர் பெயர் குறிப்பிடாவிட்டாலும் எங்கள் கூட்டணி என்று கூறினார்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி உதயமாகும்போது, சோனியா காந்தியை பதிபக்தி இல்லாதவர், கணவருக்கு துரோகம் செய்தவர் என்று கூறினார்கள். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் அரசியலில் தனக்கு கிடைத்த பெரிய பொறுப்பான பிரதமர் பதவி வேண்டாம் என்றார். எல்லா தகுதி இருந்தும், கட்சிகளின் ஆதரவு இருந்தும், நாங்கள் ஆதரவு அளித்த போதும் அவர் பிரதமர் பதவி வேண்டாம், கட்சி தலைவர் பதவியே போதும் என்று கூறினார் சோனியா காந்தி.

டெல்லியில் உள்ளவர்கள் கண்மூடிகள் அல்ல:

பதிபக்தி இல்லாதவர் என்று கூறிய ஜெயலலிதா இப்போது காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து எப்படியாவது திமுகவை வீழ்த்த துடிக்கிறார். டெல்லியில் உள்ளவர்கள் கண்மூடிகள், பச்சை குழந்தைகள் அல்ல. வரலாறு தெரிந்தவர்கள். இவர்களுடன் கூட்டணி அமைத்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

திமுகவை ஒழிப்பது தான் முதல் வேலை என்று யார் அடியெடுத்து வைத்தலும் அது நொறுங்கிப் போகும். நாங்கள் சந்திக்காத கொடுமை இல்லை. துரோகம் இல்லை. வேதனை இல்லை. செல்லாத சிறை இல்லை. சிறையில் சித்ரவதைக்கு ஆளாகி மாண்டவர்களும் உண்டு. தமிழை காப்பாற்ற, தமிழுக்கு தீங்கு ஏற்பட்டால் தடுப்போம் என்று தீக்குளித்து மாண்டவர்களும் உண்டு.

திமுகவை தோற்கடிப்போம் என்று யார் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டாலும் தோற்றுப் போவார்கள். அரசியல் பதவிகள் வரலாம், போகலாம். ஆனால் நாம் கற்ற சுயமரியாதையை இழக்க மாட்டோம். எதை இழந்தாலும் இழப்போம். சுயமரியாதையை இழக்க மாட்டோம் என்றார் கருணாநிதி.

ஜெ. பேட்டி-பத்திரிகைக்கு துரைமுருகன் கண்டனம்:

முன்னதாக அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,திராவிட முன்னேறக் கழகம் தேர்தலில் வெல்லுமா என்ற ஐயம் தேவையில்லை. இரண்டொரு தினங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில நாளிதழ் எதிர்கட்சித் தலைவரை பேட்டி எடுத்து போட்டிருந்தது.

அந்த பத்திரிக்கையின் பெயரைச் சொல்லி இவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் அந்த பத்திரிக்கைக்கு விளம்பரம் தர விரும்பவில்லை. ஈரை பேனாக்கி எங்களுடைய அரசியல் எதிரிகள் எங்களை வீழ்த்த நினைக்கலாம்.

ஆனால் நடுநிலை என்று சொலிக்கொண்டிருக்கின்ற நாளேடுகள் அத்தகையை செயல்களில் ஈடுபடலாமா?. ஜெயலலிதா பேட்டி கொடுப்பதும் தவறில்லை. அவரை பேட்டி எடுத்ததும் தவறில்லை.

ஆனால் நடுநிலையாக இருந்து அதெல்லாம் சரிதானா என்று யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா. அவர் அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்...இந்த மாநிலம் படு பாதாளத்தில் விழுந்துவிட்டதாம். அவர்தான் அப்படி சொல்கிறார் என்றால் அதை 8 கால செய்தியாக போடுகிறார்க் நான் கேட்கிறேன்..படு பாதாளத்தில் இருந்தால் மக்கள் இங்கு இப்படி தாங்களாக வந்து கூடுவார்களா?.

அவர் சொல்கிறார் ஒரு பைத்தியம். அதை போடலாமா. கேழ்வரகில் தேன் வடியுது என்று சொன்னால் கேட்பவருக்கு எங்கே போனது புத்தி? என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X