For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் கடத்தப்பட்ட மாணவன் கீர்த்தி வாசன் வீடு திரும்பினான்

Google Oneindia Tamil News

Chennai
சென்னை: சென்னையில் நேற்று கத்தி முனையில் கடத்தப்பட்ட 14 வயது மாணவன் கீர்த்திவாசன் இன்று பிற்பகல் வீடு திரும்பினான். அவனைக் கடத்திய நபர்கள் கீர்த்திவாசனை திடீரென விடுவித்து விட்டனர்.

மீண்டு வந்த மகனைப் பார்த்து கீர்த்திவாசனின் பெற்றோர்களும், உறவினர்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். விடுவிக்கப்பட்ட கீர்த்திவாசன் தற்போது அவனது வீடு வந்து சேர்ந்து விட்டான். கீர்த்தி வாசன் எப்படி விடுவிக்கப்பட்டான் என்பது குறித்து விவரிக்க விரும்பவில்லை என்று அவனது தந்தை ரமேஷ் கூறியுள்ளார். இதனால் பணம் கொடுத்து சிறுவனை மீட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரூ. 50 லட்சம் பணம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிரானைட் பிசினஸ் செய்து வருகிறார். இவரது மகன் 14 வயதான கீர்த்திவாசன். டிஏவி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான் கீர்த்தி வாசன்.

நேற்று மாலை வழக்கம் போல பள்ளிக்கூடம் முடிந்ததும் தனது தந்தை ஏற்பாடு செய்திருந்த தவேரா காரில் ஏறுவதற்காக கீர்த்திவாசன் வெளியில் வந்துள்ளான். கார் கிளம்பி கலெக்டர் நகர் சிக்னலில், சிக்னலுக்காக நின்றது. அப்போது திடீரென 2 பேர் காரை மறித்தனர். கார் டிரைவர் கோவிந்தராஜ் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கீழே தள்ளி விட்டனர். பின்னர் காரை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் கிளம்பினர்.

உதவ வராத பொது ஜனம்:

பொதுமக்கள் நிறைந்திருந்த அந்தப் பகுதியில், மிகவும் துணிகரமாக சிறுவனைக் கடத்திய சம்பவத்தைப் பார்த்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருமே அந்த கடத்தலைத் தடுக்க முன்வரவில்லை. கோவிந்தராஜ் பலமுறை காப்பாற்றுமாறு அலறியும் யாரும் எந்த உதவிக்கும் வரவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு கடத்தல்காரர்கள் தப்பி விட்டனர்.

பதறி அடித்துப் போன கோவிந்தராஜ், ரமேஷுக்குத் தகவல் தந்தார். இதையடுத்து ரமேஷ் தனது மனைவியுடன் பள்ளிக்கு விரைந்து வந்தார். பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார்.

நாலாபுறமும் தீவிர தேடுதல் வேட்டை:

கோவைச் சம்பவத்தின் விளைவு போலீஸாரைத் தொற்றிக் கொண்டது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் காரை மடக்கிப் பிடிக்க உத்தரவுகள் பிறப்பித்தார். சென்னை நகர எல்லைகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், சிறுவனை 2 பேர் கொண்ட கும்பல் கடத்திய கார் பாடி பகுதியில் அனாதரவாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் காரை போலீஸார் கைப்பற்றினர். அதில் சிறுவனின் பள்ளிக்கூடப் பை இருந்தது. அந்தக் காரை விட்டு விட்டு வேறு ஒரு காரில் கடத்தல் கும்பல் தப்பியது தெரிய வந்தது.

கடத்தல் கும்பலில் மேலும் பலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடத்தல்காரர்கள் ஆவடி வழியாக தப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடத்தல் தொடர்பான எந்தத் தகவலையும் போலீஸார் வெளியிடவில்லை. கீர்த்திவாசனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியிருந்தது.

ரூ. 3 கோடி கேட்டு மிரட்டல்:

இந்த நிலையில், ரூ. 3 கோடி பணம் கொடுத்தால் சிறுவனை விடுவதாக அவனது பெற்றோருக்கு கடத்தல் கும்பல் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து சிறுவனின் தந்தை ரமேஷ், கடத்தல்காரர்களுடன் பேரத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீஸாருக்கும் அவர் தெரிவித்தார். முதலில் ரூ. 3 கோடி கேட்டுள்ளனர் கடத்தல்காரர்கள். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ரமேஷ் கூறவே, ரூ. ஒன்றரை கோடி தருமாறு கேட்டுள்ளனர். இறுதியில் ரூ. 50 லட்சத்திற்கு பேரம் படிந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்த நிலையில் இன்று பிற்பகலில் திடீரென கீர்த்திவாசன் விடுவிக்கப்பட்டான். அவனைப் பார்த்த பெற்றோரும், உறவினர்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

கீ்ர்த்தி வாசனை விடுவி்க்க பணம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

புறநகர்கள் முழுவதும் தேடுதல்:

முன்னதாக கடத்தல் கும்பல் சென்னைப் புறநகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. கடத்தல் கும்பல் பயன்படுத்தி வரும் செல்போன் சிக்னலை வைத்து அது புறநகர்ப் பகுதியில் இருந்து வருவதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து புறநகர்கள் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது. குறிப்பாக சிறுவனைக் கடத்திய கார் கண்டுபிடிக்கப்பட்ட கொரட்டூர் பகுதியில் சல்லடை போட்டு போலீஸார் தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர்.

போலி முகவரியைக் கொடுத்து அந்தக் கும்பல் சிம் கார்டு வாங்கியுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

3 மாதங்களுக்கு முன்பே மிரட்டல்:

கீர்த்திவாசனை கடத்தப் போவதாக 3 மாதங்களுக்கு முன்பே அவரது பெற்றோருக்கு மிரட்டல் வந்துள்ளதாம். ஆனால் அதுகுறித்து அவர்கள் அசட்டையாக இருந்து விட்டதாக தெரிகிறது.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து தனது வீட்டில் பாதுகாப்பை அதிகரித்துள்ளார் ரமேஷ். வீட்டுக் காம்பவுன்ட் சுவரை உயர்த்திக் கட்டியுள்ளார். வீட்டைச் சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளார். ரகசியக் கண்காணிப்புக் கேமராக்களையும் அவர் பொருத்தி வைத்துள்ளார்.

கீர்த்தி வாசனை கடத்தியது யார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ள நிலையில், கடத்தல் கும்பலைபிடிக்க தற்போது போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சிறுவனைக் கடத்திய கும்பல் சிக்கியது?:

இதற்கிடையே சிறுவன் மீண்டு வந்ததில் பெரும் குழப்பம் நிலவுகிறது. சிறுவனைக் கடத்திய கும்பல் நேற்று கீர்த்தி வாசனின் தந்தை ரமேஷைத் தொடர்பு கொண்டு பண பேரம் பேசியது.

அப்போது பணம் தருவதாக ஒப்புக் கொள்ளுமாறு போலீஸ் அறிவுறுத்தலின்பேரில் ரமேஷ், தருவதாக கும்பலிடம் கூறினாராம். இதையடுத்து குறிப்பிட்ட இடத்தில் காரில் கொண்டு வந்து பணத்தை வைத்து விட்டுப் போகுமாறு அக்கும்பல் கூறியதாக தெரிகிறது.

அதன்படி பணம் வைக்கப்பட்டதாகவும், அப்போது அந்தக் கும்பலை போலீஸார் வளைத்துப் பிடித்து விட்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

இருப்பினும் எவ்வளவு பணம் கைமாறியது, உண்மையிலேயே கடத்தல் கும்பல் பிடிபட்டு விட்டதா என்பது குறித்து போலீஸ் தரப்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

காவல்துறை இதுகுறித்து விளக்கினால்தான் கீர்த்திவாசன் மீண்டு வந்த மர்மமும், அவனைக் கடத்தியது யார் என்ற விவரமும் தெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X